Published:Updated:

`தென்கொரியாவுக்கு எதிரி நாட்டு அந்தஸ்து; தகவல்தொடர்புகள் துண்டிப்பு!’ - வடகொரியா முடிவு

வடகொரியா - தென்கொரியா
வடகொரியா - தென்கொரியா

`` நெருக்கடி நிலையின்போது தகவல்தொடர்புகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், வடகொரியா ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க அவற்றைத் துண்டிக்கிறது."

வடகொரியா, கடந்த பல நாள்களாக தென்கொரியா மீது தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வந்தது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு அலுவலகம் மற்றும் பிற திட்டங்களையும் நிறுத்திக் கொள்ளப்போவதாக வடகொரியா தொடர்ந்து தென்கொரியாவை அச்சுறுத்தி வந்தது.

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவின் துணைத்தலைவர் கிம் யோங் சோல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் தென்கொரியாவுடனான தொடர்புகள் அனைத்தையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் ஒன்றை எழுப்பியதாகவும் தென்கொரியாவுக்கு எதிரி நாட்டு அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியா
வடகொரியா

அதன்படி, முதற்கட்டமாக வடகொரிய அதிபர் மற்றும் தென்கொரியா பிரதமர் அலுவலகங்களுக்கு இடையிலான ஹாட்லைன்களும் இருநாடுகளுக்கு இடையிலான பிற தகவல் தொடர்பு வழிகளும் துண்டிக்கப்படுகிறது என வடகொரியா அறிவித்துள்ளதாக கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வடகொரிய அதிகாரிகளின் தொடர்பு அலுவலகங்களுக்கு வழக்கமாக வரும் தினசரி அழைப்புகளுக்கு அதிகாரிகள் நேற்று பதிலளிக்கவில்லை என்று தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமான அழைப்புகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் தென்கொரிய அமைச்சகம் வடகொரியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் உழைப்போம் என்றும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.

`ஹாங்காங் போராட்டம்...புதிய சட்டம்... எதிர்க்கும் அமெரிக்கா!’ - சீனாவுக்குக் கரம்கொடுக்கும் வடகொரியா

கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்னைகள் அதிகரித்து வரும் சூழலில் வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

``நாங்கள் நினைப்பதை விடவும் வடகொரியா மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது” என கியுங் ஹூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சூ ஜே வூ கூறியுள்ளார். இதையடுத்து, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் வடகொரிய தேசிய குழுவைச் சேர்ந்த டேனியல் வெர்ட்ஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தகவல் தொடர்புகளைத் துண்டிப்பது பியோங் யாங்கிற்கு நன்கு தெரிந்த விளையாட்டு. ஆனால், அது ஆபத்தானது. நெருக்கடி நிலையின்போது தகவல்தொடர்புகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், வடகொரியா ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க அவற்றை துண்டிக்கிறது” என்று கூறியுள்ளார்.

வடகொரியா
வடகொரியா

கே.சி.என்.ஏ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ``தென்கொரிய அதிகாரிகளின் துரோகத்துக்கு உரிய மற்றும் தந்திரமான நடவடிக்கைகளால் வடகொரிய மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். அவர்களுடன் தீர்வு காண வேண்டிய கணக்குகள் அதிகமாகவே உள்ளன. வடகொரியாவில் உச்ச தலைமைப் பண்பில் உள்ளவர்களின் கௌரவத்தை தென்கொரிய அதிகாரிகள் புண்படுத்திவிட்டனர். தென்கொரிய அதிகாரிகளுடன் நேருக்கு நேர் உட்கார வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய விஷயமும் இல்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..!'- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா
அடுத்த கட்டுரைக்கு