Published:Updated:

`ஹாங்காங் போராட்டம்...புதிய சட்டம்... எதிர்க்கும் அமெரிக்கா!’ - சீனாவுக்குக் கரம்கொடுக்கும் வடகொரியா

சீனா - வடகொரியா
சீனா - வடகொரியா

``ஹாங்காங் பிரச்னைக்கு அமெரிக்கா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தப் பிரச்னை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதங்களை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது.”

சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகளில் அதிகமாக பாதிப்படைந்த அமெரிக்கா, சீனா மீது கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறது. இதுதொடர்பாக சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வார்த்தைப் போர் நிலவிவருகிறது.

இதைத் தொடர்ந்து, தைவான் புரட்சி, ஹாங்காங் போராட்டம் மற்றும் இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் சீனாவைச் சூழ்ந்துள்ளன. இந்தப் பிரச்னைகள் தொடர்பாகவும் பல நாடுகள் சீனாவை விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சீனாவுக்கு வடகொரியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

ஹாங்காங் மக்கள் போராட்டம்
ஹாங்காங் மக்கள் போராட்டம்

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு சீன நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 2,800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் ஹாங்காங்கின் அனைத்து சிறப்பு அதிகாரங்களும் ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஹாங்காங் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டுவருகிறது.

ஹாங்காங்கில் உள்ள கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான மசோதாவை எதிர்த்து, ஹாங்காங் மக்கள் கடந்த சில மாதங்களாக கடுமையான போராட்டத்தை நடத்திவந்தனர். மேலும், அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் ஹாங்காங் பகுதியில் முதலீடுகளைச் செய்துவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் இருப்பதால், ஹாங்காங்குக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தொடர்புகளைத் துண்டிக்கவும் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தைக் குறைக்கவும் சீனா தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவசரமாகக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

`சீன மாணவர்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!' - ட்ரம்ப் நடவடிக்கையைச் சாடும் எதிர்க்கட்சிகள்

பாதுகாப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் ஹாங்காங்கில் போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. சீனாவுக்கு எதிராக மக்கள் அந்நாட்டின் கொடிகள் உள்ளிட்டவற்றை எரித்துப் போராடுவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹாங்காங் மக்களின் போராட்டங்களைத் தூண்டிவிடுவதாகவும் சீனா குற்றச்சாட்டுகளை எழுப்பியது. இந்த நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பயங்கரவாத மற்றும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வடகொரியாவின் செய்தி நிறுவனம் ஒன்று, ``ஹாங்காங் பிரச்னை என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஒன்று. எனவே, மற்ற நாடுகள் இந்தப் பிரச்னையில் தலையிடக் கூடாது. ஹாங்காங்கின் சமூக, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பிற நாடுகள் இந்த விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் எதிர்க்கிறோம். சீனாவின் புதிய சட்டம் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முறையான நடவடிக்கை” என்று கூறியுள்ளது.

சீனா - அமெரிக்கா
சீனா - அமெரிக்கா

இங்கிலாந்து ஆட்சியின்கீழ் இருந்த ஹாங்காங்கை சீனாவிடம் 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ஒப்படைத்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில், `ஒரு தேசம் இரு அமைப்பு' என்ற முறையில் செயல்படும் என்றும் கையெழுத்திடப்பட்டது. ஆனால், சீனா தற்போது புதிய சட்டங்களை இயற்றி மக்களை அடக்க நினைப்பதாக மக்கள் கருதுவதால், போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு, அமெரிக்கா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

மேலும், இந்தப் பிரச்னை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதங்களை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால், இது சீனாவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும் ஐ.நா-வில் விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`மோடியிடம் பேசினேன்; அதிருப்தியில் இருக்கிறார்!’- சீனா விவகாரத்தில் ட்ரம்ப்; மறுத்த இந்தியா
அடுத்த கட்டுரைக்கு