Published:Updated:

வட கொரியா: `குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறிவிட்டேன்!’ - கண்கலங்கிய அதிபர் கிம்

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டுவரவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறியதுடன், குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்கு மன்னிப்புக் கேட்டார்.

அக்டோபர் 10, 1945-ம் ஆண்டு வடகொரியாவின் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்டது. அன்று முதல் கிம் ஜாங் உன்-னின் குடும்பத்தினர் வடகொரியாவை ஆட்சிசெய்து வருகின்றனர். தற்போது அதிபர் பதவியிலிருக்கும் கிம் ஜாங் உன் அதிரடியான நடவடிக்கைகளுக்குப் புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிவந்த நிலையில் திடீரென பொது விழாக்களில் பங்கேற்று, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து, வடகொரியாவை ஆட்சி செய்யும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு, 75-ம் ஆண்டு நிறைவு தினம் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வழக்கம்போல் கொண்டாடப்படுமா என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், எந்த வருடமும் இல்லாத வகையில் வட கொரியா முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

ராணுவ அணிவகுப்பு
ராணுவ அணிவகுப்பு

பவள விழாவின் ஒரு பகுதியாக பியோங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அந்த அணிவகுப்பில், இதுவரை இல்லாத வகையில் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் `ஹவாசங் - 16’ எனும் மிகப்பெரிய ஏவுகணையைக் காட்சிப்படுத்தி எதிரிகளை மிரளவைத்திருக்கிறது வட கொரியா. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கலந்துகொண்டு அனைவரையும் வியக்கவைத்திருக்கிறார் அதிபர் கிம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டுவரவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்கு மன்னிப்புக் கேட்டார். அப்போது, கிம் ஜாங் தன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, கண்ணீர்மல்கப் பேசிய நிகழ்வு அந்த் நாட்டு மக்களை நெகிழவைத்தது.

அவர் பேசியது குறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், "எங்கள் நாட்டு மக்கள் வானத்தைவிட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அதை நான் திருப்திகரமாக செய்யத் தவறிவிட்டேன். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதற்காக மிகவும் வருந்துகிறேன்" என்றார் கிம்.

மேலும், இந்த நாட்டை வழிநடத்திய தன் தந்தை மற்றும் தாத்தாவை நினைவுகூர்ந்த கிம் ஜாங் உன், ``அவர்களுக்கு பின் இந்த நாட்டை வழிநடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம், உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்கள் வாழ்க்கையிலுள்ள சிரமங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு