Published:Updated:

`கிரேஸி ட்ரம்ப்... எதுவும் முடியப்போவதில்லை!’ - எச்சரிக்கை விடுக்கும் சுலைமானியின் மகள் ஜீனாப்

ஜீனாப்
ஜீனாப்

சுலைமானியின் மகளான ஜீனாப் சுலைமானி மக்களின் கூட்டத்துக்கு முன்னால் உரையாற்றினார்.

அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பிரச்னைகள் நிலவி வந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். சுலைமானியின் உடல் தெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அமெரிக்கா - இரான்
அமெரிக்கா - இரான்

சுலைமானியின் இறுதிச் சடங்குக்காக தெஹ்ரானின் தெருக்களில் லட்சக்கணக்கான இரானியர்கள் திரண்டனர். அப்போது சுலைமானியின் மகளான ஜீனாப் சுலைமானி மக்களின் கூட்டத்துக்கு முன்னால் உரையாற்றினார்.

அதில், ``இந்த எதிர்ப்பு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இருண்ட நாள்களைக் கொண்டு வருவோம். இரான் மற்றும் இராக் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் திட்டம், சுலைமானி மற்றும் இராக்கின் மிலிடியா தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஆகியோரைக் கொன்றதன் மூலம் தோல்வியடைந்துள்ளது மட்டுமல்லாமல் மாறாக, இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மீது இரானியர்கள் மற்றும் இராக்கியர்களுக்கு நிரந்தர வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``கிரேஸி ட்ரம்ப், நீங்கள் முட்டாள்தனத்துக்கான ஓர் அடையாளம். சர்வதேச சியோனிஸ்டுகளின் கையிலிருக்கும் ஒரு பொம்மை. அமெரிக்கர்கள் செய்துள்ள இந்தக் கொடூரமான குற்றம், பாலஸ்தீனத்தில் நடந்த குற்றங்களையும் கொடுமைகளையும் வெளிப்படுத்துகிறது.

இரான் மக்கள்
இரான் மக்கள்

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள், தங்கள் குழந்தைகளின் மரணங்களுக்காகக் காத்திருந்தே காலத்தைக் கழிக்கும்” என்று எச்சரிக்கைவிடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

மேலும், ``என் தந்தையின் தியாகத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு