Published:Updated:

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் கபூஸின் சாதனைகளும்... ரகசியக் கடிதமும்! #sultanqaboos

சுல்தான் கபூஸ்
சுல்தான் கபூஸ் ( twitter )

1970ம் ஆண்டு தனது 29வது வயதில் ஆட்சியாளராக இருந்த தனது தந்தை சையது பின் தைமூரை வீழ்த்தி ஆட்சியை சுல்தான் கபூஸ் கைப்பற்றினார்.

ஓமன் நாட்டு மன்னர் சுல்தான் கபூஸ் பின் சையது அல் சையது உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். ஓமனில் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி நடத்திவந்தவர் கபூஸ்.

ஓமனின் தென் மாகாணத்திலுள்ள தோஃபரின் தலைநகர், சலாலாவில் 1940-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி சுல்தான் கபூஸ் பிறந்தார். இந்தியா மற்றும் இங்கிலாந்திலுள்ள ராயல் மிலிட்டரி அகாதமியில் பயின்றார். பின்னர், ஜெர்மனியிலிருந்த பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைந்து ராணுவப் பயிற்சியை மேற்கொண்டார். தன் நாட்டிலுள்ள அரசாங்கம் பற்றி தெரிந்துகொண்டு உலகளாவிய சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டார். 1964-ம் ஆண்டு தனது நாட்டுக்கு திரும்பிய சுல்தான் ஓமன் நாட்டின் வரலாறு மற்றும் இஸ்லாமிய சட்டங்களைப் பற்றி படித்தார்.

ஓமன்
ஓமன்

1970ம் ஆண்டு தனது 29வது வயதில் ஆட்சியாளராக இருந்த தனது தந்தை சையது பின் தைமூரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினார். சுல்தான் தன்னை நாட்டின் ஆட்சியாளராக மட்டும் அறிவிக்கவில்லை. பிரதமர், பாதுகாப்பு மந்திரி, நிதி மந்திரி, வெளியுறவுத்துறை அமைச்சர், ஆயுதப்படை தளபதி போன்ற பொறுப்புகளுக்கும் தன்னையே தலைவராக அறிவித்துக்கொண்டார். அவரது தந்தை ஆட்சியாளராக இருந்தபோது தனிமைபடுத்தப்பட்ட மற்றும் வறுமைமிகுந்த நாடாக ஓமன் இருந்தது.

சுல்தான் தனது அரை நூற்றாண்டுகால ஆட்சியில் அந்நாட்டினை பணக்கார நாடாக மாற்றினார். மிகச்சிறிய மக்கள்தொகை கொண்ட ஓமனில், எண்ணெய் வளம் மூலமாக வரும் வருவாயைப் பயன்படுத்தி சுற்றுலாத் தளங்களையும் அந்நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தினார்.

``ஓமனில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதுக்காகவும், சமூக, பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார சீர்திருத்தங்களை மேற்கொண்டதுக்காகவும் என்றும் நினைவுகூறப்படுவார். ஒரு பழமைவாத சமுதாயத்தில், அமெரிக்க நாட்டுக்கான ஓமன் தூதர் போன்ற அரசின் உயர்ந்த பதவிகளுக்கு பெண்களை நியமிப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். சட்ட சபைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதிலும் முக்கியத்துவம் அளித்தார்” என கனடிக்கட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அல்ஜசீரா ஊடகத்திடம் கூறியுள்ளார்.

Vikatan

உள்நாட்டின் செய்த சாதனைகளைத் தாண்டி வெளிநாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளில் தீர்வு காண்பதிலும் தன்னுடைய செல்வாக்கை செலுத்தியுள்ளார் காபூஸ். 2012 மற்றும் 2013-ல் நடந்த அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அணு ஆயுதம் தொடர்பான பிரச்னைகளில் நடுவில் இருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி பிளவுகளை தடுக்கும் திறன்கொண்ட ஒருவராகவும் சுல்தான் விளங்கியுள்ளார்.

சுல்தான் கபூஸ்
சுல்தான் கபூஸ்
twitter

2011-ம் ஆண்டில் நடந்த பரவலாக அறியப்பட்ட அரபு எழுச்சிகளின்போது சுல்தானின் தலைமையின் கீழான ஓமனில் பெரிதாக எதிர்ப்புகள் எழவில்லை. வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற காரணங்களால் நூற்றுக்கணக்காவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அமைதியாக நடந்த இந்த போராட்டத்தின் இறுதியில் வன்முறைகள் ஏற்பட்டன. போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுல்தான் ஊழல்வாதிகள் என கருதப்பட்ட அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கினார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகவும் உறுதியளித்தார்.

சிறைத்தண்டனை, அபராதம், நாடு கடத்தல்... துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவருக்கு தண்டனை!

சுல்தானின் மரணம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரது உறவினர் ஹைதம் பின் தாரிக் அல் சையது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். சுல்தான் அவரது பெற்றோருக்கு ஒரே குழந்தை. இவர், 1976-ல் தனது உறவுக்காரப் பெண்ணை மணந்தார். ஆனால், விரைவிலேயெ அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். சுல்தானுக்கு குழந்தைகளும் இல்லை, அவர் மறுமணமும் செய்யவில்லை.

சுல்தான் கபூஸ்
சுல்தான் கபூஸ்
twitter

``அரச குடும்பத்திலிருந்துதான் ஒரு வாரிசு வர வேண்டும். சுல்தான் இறந்து மூன்று நாட்களுக்குள் வாரிசு அவரது குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்பது ஓமனின் அடிப்படை சட்டம். இந்த சட்டத்தின்படி வாரிசை தேர்வு செய்யத் தவறினால், சுல்தான் எழுதிய ரகசிய கடிதம் ஒன்று பிரித்து படிக்கப்படும். அந்தக் கடிதத்தில் வாரிசாக வரவேண்டியவர்களின் பெயர்களை அவர் பட்டியலிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுல்தான் 1997-ம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``ஏற்கனவே, இரண்டு நபர்களின் பெயர்களை இறங்கு வரிசையில் எழுதி வைத்துள்ளேன். அவற்றை சீல் செய்து இரண்டு வெவ்வேறு பகுதிகளில் வைத்துள்ளேன்” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு