Published:Updated:

`ஓமன் 2040’ தலைவர் டு `சுல்தான்' - ஓமனின் புதிய ஆட்சியாளர் சுல்தான் ஹைதமும்... சவால்களும்!

சுல்தான்  ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது
சுல்தான் ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது

`மறைந்த சுல்தான் கபூஸின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். மக்கள் இடையேயும் மற்றும் நாடுகளுக்கு இடையேயும் அமைதியை நிலைநாட்ட சுல்தான் கபூஸ் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுவோம்.'

ஓமன் நாட்டை அரை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வந்த சுல்தான் கபூஸின் மரணத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய ஆட்சியாளராக சுல்தான் கபூஸின் உறவினர் ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சுல்தான் ஹைதம் 1954-ம் ஆண்டு பிறந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர் நீண்டகாலமாக அரசியல் வாழ்க்கையில் இருந்து வருகிறார். ஓமன் நாட்டின் பாரம்பர்யம் மற்றும் கலாசார துறையின் அமைச்சராக சமீபத்தில் பணியாற்றினார். சுல்தான் கபூஸின் அரசாங்கத்தில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். 16 வருடங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.

ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது
ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது

1986 முதல் 1994 வரை வெளியுறவு துறைக்கான அரசியல் விவகாரங்களில் துணைச் செயலாளராகவும் பின்னர், 1994 முதல் 2002 வரை வெளியுறவுத்துறையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளது கவனிக்கத்தக்கது. `ஓமன் 2040’ எனும் எதிர்கால திட்டங்களை வகுக்கும் குழுவின் தலைவராகவும் செயலாற்றி வந்தார். ஓமன் - ஜப்பான் நட்புணர்வு சங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கம் ஆகியவற்றின் கௌரவத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமனின் கால்பந்து வீரர்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

ஓமன் நாட்டின் மக்களுக்கு சுல்தான் ஹைதம் நன்கு அறிமுகமானவர் மட்டுமல்ல; அவர்களால் மதிக்கப்படுபவரும் ஆவார். ஓமனின் சுல்தானாக ஹைதம் பதவியேற்றுள்ளது குறித்து அரசியல் விமர்சகர் ஷாரிஃபா அல் சையபி கூறுகையில், ``பல்வேறுதுறைகளிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். அடுத்த சுல்தானாக ஹரிதம் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாங்கள் ஆதரிக்கிறோம். கபூஸின் கொள்கைகள் பின் தொடரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் கபூஸின் சாதனைகளும்... ரகசியக் கடிதமும்! #sultanqaboos

சுல்தானாகப் பதவியேற்றபின் மக்களிடம் பேசிய சுல்தான் ஹைதம், ``மறைந்த சுல்தான் கபூஸின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். மக்கள் இடையேயும் மற்றும் நாடுகளுக்கு இடையேயும் அமைதியை நிலைநாட்ட சுல்தான் கபூஸ் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றுவோம். ஓமன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

நாட்டில் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களை கையாள்வது ஆகிய இரண்டு சவால்களும் ஓமனின் புதிய சுல்தான் ஹைதம் முன் காத்திருக்கின்றன.

ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது
ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது

அமெரிக்கா மற்றும் இரான் இடையே பிரச்னைகள் தீவிரமடைந்து வருகின்றன. இரான் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான சுமுகமான உறவுக்கு ஓமன் பாலமாக இருந்துள்ளது. வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரின் ஆகிய நாடுகள் கத்தார் நாட்டின்மீது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கத்தார் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த பிரச்னையில் ஓமன் நடுநிலையைக் கடைப்பிடித்து வருகிறது.

`ஏழை மாணவர்களுக்கு உதவுவதைவிட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரிதில்லை!' - நெகிழும் கத்தார் தமிழர்

ஓமன் நாட்டின் தெற்கு எல்லையிலுள்ள ஏமனில் உள்நோட்டுப் போருக்கான பதற்றம் நிலவி வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் சவுதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகள் இணைந்து இரான் ஆதரவளிக்கும் ஹவுதிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏமன் அரசை கவிழ்க்க ஹவுதி குழுக்கள் சதி செய்துவருவதாக கத்தார் குற்றச்சாட்டை அடுத்து இந்த பிரச்னைகள் நிலவி வருகிறது. இந்த வெளியுறவுப் பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்கிற சவால் சுல்தான் ஹைதம் முன்பு உள்ளது.

ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது
ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது

ஓமனில் பொருளாதாரம் பலவீனமடைந்து வருகிறது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகிறது. சர்வதேச நாணய நிதி வெளியிட்டுள்ள அறிக்கை, ஓமனில் பொருளாதாரம் கடந்த ஆண்டு எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை என்கிறது. இந்த உள்நாட்டு பொருளாதாரப் பிரச்னையும் அவருக்கு சவாலாக இருக்கிறது.

இத்தகைய சவால்களுக்கு மத்தியில் சுல்தானாகப் பதவியேற்றிருக்கும் ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையது-க்கு ஓமனின் நட்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

`அமெரிக்க நெருக்கடியால் பதற்றத்தில் நடந்துவிட்டது’ -  விமானத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இரான்
அடுத்த கட்டுரைக்கு