Published:Updated:

கொரோனா:`1,077 பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து!’ - பாசிட்டிவ் பகிரும் ஆக்ஸ்போர்டு

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து

``எங்கள் தடுப்பூசி நீண்ட காலம் மக்களை பாதுகாக்கும் என நம்புகிறோம். இருப்பினும், நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து திறம்பட செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய கூடுதலாக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது.”

உலகளவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்த அதிகாரபூர்வமாக எந்த மருந்தும் அறிவிக்கப்படாத நிலையில் பல நாடுகளும் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்தன. இந்தியா உட்பட பல நாடுகளும் இந்தத் தொற்று நோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மருந்துகள் சோதனை முயற்சிகளில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸூக்கான இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்தத் தடுப்பு மருந்தானது`AZD1222' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கொரோனா தடுப்பு மருந்து சுமார் 1,077 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் சோதனையில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் இந்தத் தடுப்பு மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த மருந்து தொடர்பான இறுதிக்கட்ட சோதனைகள் முடிந்த பின்பே பொது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா: `தடுப்பு மருந்து ஆராய்ச்சியைக் குறிவைக்கும் உளவாளிகள்!’ - மறுக்கும் ரஷ்யா

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஆண்ட்ரூ பொல்லார்ட் இதுதொடர்பாகப் பேசும்போது, ``எங்கள் தடுப்பூசி நீண்ட காலம் மக்களை பாதுகாக்கும் என நம்புகிறோம். இருப்பினும், நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து திறம்பட செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய கூடுதலாக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது” என்று கூறியுள்ளார். தடுப்பு மருந்துகள் திறம்பட செயல்பட்டு நடைமுறைக்கு வந்தால் அதை வாங்குவதற்காகப் பல நாடுகளும் அஸ்ட்ராஜெனெகாவுடன் ஒப்பந்தங்களை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொற்றுநோய் தீவிரமாகப் பரவி வரும் சூழலில் லாப நோக்கில் செயல்பட மாட்டோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து

10 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய இங்கிலாந்தானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கோடிக்கணக்கில் மக்கள் இந்த கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பாதிப்புகள் உச்சக்கட்டத்தை அடைந்து வருகின்றன. இத்தகைய சூழலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு பலருக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா: `முடிவுக்குக் கொண்டு வரும் தொடக்கம்!’ - தடுப்பு மருந்து குறித்து மத்திய அரசு
அடுத்த கட்டுரைக்கு