Published:Updated:

குழந்தையை அணைத்தபடியே உயிரைவிட்ட தாய் - டெக்ஸாஸ் துப்பாக்கிச்சூடு சோகம்!

ராம் பிரசாத்

டெக்ஸாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாத குழந்தை தன் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ( AP )

டெக்ஸாஸ் மாகாணத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வணிக வளாகத்துக்குள் புகுந்த பேட்ரிக் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினார். துப்பாக்கிக் குண்டுகளுக்கு 20 பேர் இரையாகினர். காயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பேட்ரிக்கை போலீஸார் கைது செய்தனர். இந்தத் தாக்குதலுக்கு முன்பு சமூகவலைதளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் நிறைய காரணங்களை பேட்ரிக் அடிக்கியுள்ளார். அதில் ஒன்று, ``அமெரிக்கக் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலம் வேண்டும் என்றால் இங்கு யாரும் குடிபெயரக் கூடாது” என்பது.

வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
AP

பேட்ரிக் தன் குற்றத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணம் கூறட்டும். பேட்ரிக் நடத்திய அந்தக் கொடூரத் தாக்குதலில் இரண்டு மாத குழந்தை தன் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளது. ஜோர்டான் மற்றும் ஆண்ட்ரே அஞ்சோண்டோ தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 5 வயதில் ஒரு குழந்தை, 2 வயதில் ஒரு குழந்தை, 2 மாத குழந்தை உள்ளனர். 5 வயதுக் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு 2 மாத கைக்குழந்தையுடன் வணிகவளாகம் திரும்பியுள்ளனர். அப்போதுதான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஜோர்டான் பாதுகாத்துள்ளார். மனைவிக்கும் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என ஆண்ட்ரோ இருவரையும் பாதுகாத்து நின்றுள்ளார்.

துப்பாக்கிக் குண்டுகள் ஆண்ட்ரோ, ஜோர்டானை துளைத்தன. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே சரிந்தனர். குழந்தையைக் கட்டியணைத்தபடி ஜோர்டன் சரிந்தார். இதில் குழந்தையின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ரோ, ஜோர்டன் இருவரும் உயிரிழந்துவிட்டனர். ஜோர்டனின் உறவினர் பேசுகையில், ``இதை ஏற்றுக்கொள்வதற்கே கடினமானதாக இருக்கிறது. அவள் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பாள். எல்லோருடனும் அன்பாகப் பழகுவாள். தான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என விரும்புவாள். குழந்தைகளுக்கு நான் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அப்பா, அம்மா எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். 2 மாத குழந்தை பெற்றோரை இழந்து நிற்கிறது.

வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
AP

இறக்கும் தருவாயில் ஜோர்டன் குழந்தையைத் தனது மடியில் இறுக அனைத்துக் கொண்டிருந்தாள். ஜோர்டனின் ரத்தக்கறைகள் குழந்தையின் மீது படிந்திருந்தது. குழந்தைக்கு விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. தற்போது அது சரியாகி வருகிறது. தாய் மற்றும் தந்தையின் வீரம் காரணமாகக் குழந்தை உயிரோடு உள்ளது. அவர்கள் அற்புதமான பெற்றோர்கள். குழந்தைகளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தனர். இது குடும்பத்துக்கு மிகப்பெரிய இழப்பு மற்றும் உலகுக்கு மிகப்பெரிய இழப்பு" என வேதனையோடு முடித்துக்கொண்டார்.