Published:Updated:

`வெறிச்சோடிய சாலைகள்; பால்கனியில் திரண்ட மக்கள்!’ - கைதட்டல் ஒலியால் நெகிழ்ந்த ஸ்பெயின் #Corona

ஸ்பெயின் மக்கள்
ஸ்பெயின் மக்கள்

``வீடியோக்களின் வழியே, ஸ்பெயின் மக்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கைதட்டிய ஒலிகள் வெறிச்சோடிய சாலைகள் முழுவதும் பரவி இருந்ததை நம்மால் பார்க்க முடியும்."

சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 176 நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், தற்போது கொரோனா பரவும் நிலை இரண்டாம் கட்டத்தில் உள்ளது. சமூகப் பரவல் என்ற அடுத்த நிலையை இந்தியா இன்னும் எட்டவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி, நேற்று இரவு 8 மணியளவில் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

மோடி
மோடி

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல், மக்கள் ஒத்துழைப்பு, ஊரடங்கு, தனிமைப்படுத்துதல், வதந்திகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் முன்வைத்து பேசினார்.

அப்போது, வரும் 22-ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். அத்தியாவசியப் பணிகள் செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் வெளியே வர வேண்டாம் என்றும் மாலை 5 மணிக்கு வீட்டின் வெளியே நின்று அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர்க்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, ஸ்பெயின் நாட்டிலும் மக்கள் இரவு 10 மணிக்கு மேல் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பால்கனியில் நின்றபடி கைதட்டல்களால் தங்களது நன்றியை தெரிவிக்கும் வீடியோ வைரலானது, தொடர்ந்து நெட்டிசன்களும் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

கொரோனா குவாரன்டைனும் உலக மக்களின் சில சேட்டை வீடியோக்களும்! #Viral

ஸ்பெயினில் இந்த வைரஸால் இதுவரை 18,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்நாட்டின் தலைநகரமான மாட்ரிட் நகரமும் முடங்கியது. எனினும், மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்களை ஆதரித்து வருகின்றனர்.

``ஸ்பெயினில் வசிக்கும் ஒவ்வொருவரும் இரவு 10 மணிக்கு வீட்டின் ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளுக்கு அருகில் வந்து கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்காக கைதட்ட வேண்டும்" என்ற பிரசாரத்தை ட்விட்டரில் சிலர் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி இரவு அனைவரும் வீட்டின் வெளியே வந்து பணியாளர்களுக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். மார்ச் 15-ம் தேதி இது தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோக்களின் வழியே, ஸ்பெயின் மக்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கைதட்டிய ஒலிகள் வெறிச்சோடிய சாலைகள் முழுவதும் பரவி இருந்ததை நம்மால் பார்க்க முடியும்.

இத்தாலி, இரான் நாடுகளுக்குப் பிறகு, அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது. எனவே, கடந்த மார்ச் 14-ம் தேதி அந்நாட்டின் பிரதமர் அவசரகால நிலையை இரண்டு வாரங்களுக்கு அறிவித்தார். இதனால், மக்கள் வீட்டைவிட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. ஸ்பெயின் மக்கள் மனஅழுத்தத்தைப் போக்க வீட்டில் இருந்தபடியே அருகில் இருக்கும் மக்களுடன் இணைந்து பாடுவது, ஆடுவது போன்ற பணிகளில் ஈடுபட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோல பிரான்ஸ் நாட்டிலும், ``நாம் ஒவ்வொருவரும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும்" என்று கூறி வீட்டில் இருந்தபடியே கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதற்காக #WeApplaud என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டிங் செய்தனர்.

ட்விட்டரில், `` நம் வாழ்வுக்காகவும் நமது சமூகத்துக்காகவும் கொரோனாவை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுடைய பணி கைதட்டல்களுக்கும் மரியாதைக்கும் உரியது" என்று பலரும் தங்களது அன்பை அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். இதேபோல, பல நாடுகளிலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

`வரும் 22-ம் தேதி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!’ - பிரதமர் மோடி #LiveUpdates
அடுத்த கட்டுரைக்கு