Published:Updated:

`பசியால், குட்டிகளை உண்ணும் பனிக்கரடிகள்?' -காலநிலை மாற்றம், எரிவாயுத் திட்டங்களால் ஏற்பட்ட அவலநிலை

பனிக்கரடிகள்
பனிக்கரடிகள் ( Reuters )

மனிதர்கள் பனிக்கரடிகள் வசிக்கும் பகுதிகளை புதைபடிவ எரிவாயுக்கள் எடுப்பது தொடர்பான கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதால், வாழிடம் தொடர்பான சிக்கல்களும் அவற்றிற்கு ஏற்படுகின்றன.

ஆர்டிக் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பனியின் அளவு அதிகமாக குறைந்து வருகிறது. அப்பகுதியில் எரிபொருள்கள் எடுப்பது தொடர்பான பணிகளும் நடைபெறுகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பனிக்கரடிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. உணவு முதல் இருப்பிடம் வரை அனைத்திலும் கடுமையான தட்டுப்பாடுகள் பனிக்கரடிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இத்தகைய மோசமான விளைவுகள் பனிக்கரடிகளை நரமாமிசங்கள் உண்ணும் நிலைக்கு ஆளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பனிக்கரடிகள்
பனிக்கரடிகள்
twitter

ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசும்போது, ``பனிக்கரடிகள் மீது நரமாமிசம் உண்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மை. ஆனால், இவை அரிதாகவே கூறப்படுகின்றன. இப்போது, எங்களுடைய கவலையெல்லாம் நரமாமிசம் உண்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் அடிக்கடி வரத்தொடங்கியுள்ளன என்பதுதான். தொடர்ந்து அதிகரித்துக்கொண்டும் வருகின்றன" என்கின்றனர்.

பனிக்கரடிகளுக்கு உணவு என்பது மிகப்பெரிய பிரச்னைக்கு உள்ளாகியுள்ளதால், சக கரடிகளை அவை உண்ணத் தொடங்குகின்றன என்ற அச்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். பெரிய ஆண் பனிக்கரடிகளுக்குப் பெண் பனிக்கரடிகளையும் குட்டி பனிக்கரடிகளையும் தாக்குவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் அவற்றை உணவாக உண்கிறது. பெண் பனிக்கரடிகள் தங்களது குட்டிகளையே தாக்கி உண்பதாகக் கருதுகின்றனர்.

Vikatan

கடலில் மிதக்கும் பனிக்கட்டிகளைப் பயன்படுத்தி கடல் சிங்கங்களை பனிக்கரடிகள் வேட்டையாடுகின்றன. ஆர்டிக் பகுதியில் பனியின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் 40 சதவிகிதம் குறைந்துவிட்டதால் உணவுக்கான ஆதாரங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. காலநிலை மாற்றம் இவற்றிற்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இதனால், உயிர்வாழத் தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்துகள்கூட அவற்றிற்குக் கிடைப்பதில்லை என்கின்றனர். தங்களது குட்டிகளையே, பசியால் உண்ணும் கொடுமை குறித்து வருத்தமும் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களும் பனிக்கரடிகள் வசிக்கும் பகுதிகளைப் புதைபடிவ எரிவாயுக்கள் எடுப்பது தொடர்பான கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதால், வாழிடம் தொடர்பான சிக்கல்களும் பனிக்கரடிகளுக்கு ஏற்படுகின்றன. இதனால், வேறொரு இடத்திற்கு இடம்பெயர வேண்டிய கட்டாயங்கள் அவற்றிற்கு ஏற்படுகின்றன. அங்கு உணவுக்கான சாத்தியங்கள் என்பது நிச்சயமற்றது.

பனிக்கரடிகள்
பனிக்கரடிகள்
twitter

இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர் மோர்ட்வின்ட்செவ், ``கடந்த குளிர்காலத்திற்குப் பிறகு பனிக்கரடிகள் வேட்டையாடப் பயன்படுத்திய இடம், இன்றைக்கு எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களுக்குப் பாதையாக உருவாகியுள்ளது" என்று கூறுகிறார். ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மற்றொரு ரஷ்ய ஆராய்ச்சியாளர் விளாதிமிர் சோகோலோவ் பேசும்போது, ``பனிக்கரடிகள் அசாதாரணமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாழிடங்களில் பனி மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றங்கள், உலகம் வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகளால் பல்வேறு வகையின விலங்குகள் தங்களது வாழிடங்களை இழந்து உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு அழிந்து வருகின்றன. ஆனால், அவற்றைச் சரிசெய்ய உலக நாடுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே நடந்துகொண்டிருக்கும் உண்மை. தொடர்ந்து இதுபோன்ற உயிரினங்கள் அழிந்து வருவது இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என ஆர்வலர்கள் பலரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பனிக்கரடிகளின் இத்தகைய நிலை மற்றும் அதை விளக்கும் புகைப்படங்கள் பலரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு