Published:Updated:

`லெபனானில் பயங்கரம்; தலைநகரில் வெடித்து சிதறிய கிடங்கு?!’ - நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்

லெபனான்
லெபனான் ( Twitter )

``பெய்ரூட் பகுதியில் மிகப்பெரிய அளவில் தீ மற்றும் புகை எழுந்ததை பார்த்தேன். அப்பகுதியில் இருந்த மக்கள் கத்திக் கொண்டு ரத்தங்கள் உடலில் வடிய ஓடினர்”

மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் வெடிப்பு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. லெபனானில் உள்ள செய்தி நிறுவனமான என்.என்.ஏ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் வட்டாரங்கள், பெய்ரூட்டில் உள்ள துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்கில் குண்டு வெடித்ததாக தகவல் தெரிவித்துள்ளன. குண்டு வெடிப்புக்கான காரணங்கள் மற்றும் என்ன வகையான வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன போன்ற எந்தவித தகவலும் இதுவரை தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.

வெடிப்பு நடந்த இடத்தில் இருந்த கட்டடங்களில் கண்ணாடிகள் இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்ததாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. ``பெய்ரூட் பகுதியில் மிகப்பெரிய அளவில் தீ மற்றும் புகை எழுந்ததை பார்த்தேன். அப்பகுதியில் இருந்த மக்கள் உடலில் ரத்தம் வடிய கத்திக் கொண்டு ஓடினர். உயரமான கட்டடங்களில் இருந்து கண்ணாடிகள் உடைந்து விழுந்தன” என குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் செய்தி நிறுவனங்கள், ``சுகாதாரத்துறை அமைச்சரின் தகவலின்படி, இந்த வெடிப்பில் நூற்றுக்கணக்கான நபர்கள் காயமடைந்துள்ளனர். பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன” என்று தகவல் தெரிவிக்கின்றன.

காயமடைந்த நபர்
காயமடைந்த நபர்

அப்பகுதியில் இருந்த மற்றொரு நபர், துறைமுகம் உள்ள பகுதியில் சாம்பல் நிறப்புகை கடுமையாக எழுந்துள்ளதாகவும் குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டதாகவும் கூறியுள்ளார். சம்பவம் நடந்த நகரத்தில் பெரும்பான்மையான வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியதாகவும் காயமடைந்த மக்கள் செய்வதறியாது வீதிகளில் சுற்றி நடந்து கொண்டிருப்பதாகவும் மிகவும் குழப்பமான சூழ்நிலை அங்கு நிலவுவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்றே தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அங்கு நடந்த குண்டு வெடிப்பின் கோர முகத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன.

Vikatan

யு.என் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது, ``தற்செயலாக இது நடந்ததா அல்லது இதற்கு பின்னால் யாரேனும் உள்ளார்களா என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு