Published:Updated:

ட்ரம்ப்: உலகின் மிகவும் ஆபத்தான மனிதன் உருவானது எப்படி? - சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

``பல தடைகளைக் கடந்து வெளியான ட்ரம்ப் தொடர்பான இந்தப் புத்தகம் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே சுமார் 1 மில்லியன் பிரதிகள் விற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.”

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இவரை விமர்சித்தும் அவரது வாழ்க்கைப் பயணம் குறித்தும் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்கூட அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ட்ரம்ப்பின் ரகசிய விவாதங்கள், சர்ச்சையான நடவடிக்கைகள் ஆகியன குறித்து `The Room Where It Happened: A White House Memoir’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார். இதுதொடர்பான சர்ச்சைகளே இன்னும் முடியாத நிலையில், அதிபர் ட்ரம்ப்பின் உறவுக்கார பெண் ஒருவர் ட்ரம்ப்பின் வாழ்க்கை தொடர்பாக மற்றொரு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் தற்போது வெளியாகி விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது.

புத்தகம்
புத்தகம்

அதிபர் ட்ரம்ப்பின் நெருங்கிய உறவுக்கார பெண் மேரி எல்.ட்ரம்ப். இவர் ட்ரம்பைப் பற்றிய, `Too Much and Never Enough: How My Family Created the World's Most Dangerous Man' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் தலைப்பிலேயே `உலகின் மிகவும் ஆபத்தான மனிதனை எங்களது குடும்பம் எவ்வாறு உருவாக்கியது’ என்று இருப்பதால் இந்தப் புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேரி இந்தப் புத்தகத்தில் ட்ரம்ப் வளர்ந்த சூழல், அவர் பெற்றோர்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் தெரிவித்துள்ளார். ஆதிக்கங்கள் நிறைந்த செயலற்ற குடும்பம் என்ற தொனியிலேயே புத்தகத்தை மேரி எழுதியுள்ளார். இதனால், ட்ரம்ப்பின் வாழ்க்கையில் நடந்த சில மோசமான விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளன எனலாம்.

`அதிபர் தேர்தலில் உதவ ஜின்பிங்கிடம் கெஞ்சிய ட்ரம்ப்?!’ -ரகசியம் நிறைந்த அதிகாரியின் புத்தகம்

மேரி அந்தப் புத்தகத்தில், ``ட்ரம்ப்பின் தந்தையான ஃப்ரெட் ட்ரம்ப் ரியல் எஸ்டேட் வணிகத்துக்கான வாரிசை உருவாக்க விரும்பினாரே தவிர, தனது பிள்ளைகளின் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை. தனது அலுவலகங்களில் ட்ரம்ப் ஆணவத்தோடு மற்றவர்களை கொடுமைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஃப்ரெட் ஊக்குவித்து வந்தார். தன்னலம் சார்ந்தவர் ட்ரம்ப் என்று சொல்வதில் எந்த மாறுபாடும் எனக்கு இல்லை. அதிபர் தனது செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதில் இருந்தும் மற்றவர்கள் மீது பரிவுகாட்டுவதில் இருந்தும் விலகி நிற்கும் நோய்க்கூறுகள் உடையவர். அப்பாவின் செயல்களால் மனதளவில் கடுமையாகப் பாதிப்படைந்தார். கற்றல் மற்றும் தூக்கம் தொடர்பான குறைபாடுகளும் அவருக்கு உண்டு” எனப் புத்திகத்தில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

ட்ரம்ப்பின் குடும்ப உறுப்பினர் ஒருவர் எழுதிய வாழ்க்கை வரலாறு என்பதும் இதற்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதற்கான காரணமாக உள்ளது. இந்தப் புத்தகம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்ததில் இருந்தே கடுமையான எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன. இந்தப் புத்தகத்தை தடை செய்யவும் அதிபர் ட்ரம்ப்பின் சகோதரர் ராபர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் கெய்லீ இந்தப் புத்தகத்தை `பொய்யான புத்தகம்’ என்று குறிப்பிட்டார். நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரை விமர்சனம் செய்யும் வகையில் இந்தப் புத்தகம் வெளிவருவதால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேரி எல். ட்ரமொ
மேரி எல். ட்ரமொ

அரசியல் சூழலில் ட்ரம்ப்பின் மனநிலை தொடர்பான விமர்சனங்கள் சாதாரணமான ஒன்று. ஆனால், அவரது குடும்ப உறுப்பினராக இருந்து உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மேரி அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை முன்வைத்து அவரின் மனநிலை தொடர்பான தனது கண்ணோட்டத்தை முன்வைப்பது பலராலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. `ட்ரம்ப் ஒருபோதும் நேசிக்கப்படவில்லை என்பது அவருக்கே தெரியும்” என்றும் அவர் கூறுகிறார். பல தடைகளைக் கடந்து வெளியான இந்தப் புத்தகம் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே சுமார் 1 மில்லியன் பிரதிகள் விற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பதிவுகள், ஆடியோ மற்றும் வீடியோ பதிப்புகள் என சுமார் 9,50,000 புத்தகங்கள் புத்தகம் வெளியான செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் விற்றுத்தீர்ந்துள்ளன. அதிகம் விற்பனையாவதால் இந்தப் புத்தகத்தை மேலும் அச்சிடவும் பதிப்பகத்தினர் முடிவு செய்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்லாது கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் அமேசான் விற்பனைப் பட்டியலிலும் இந்தப் புத்தகம் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா:`நம்ப முடியாத வாக்கு எண்ணிக்கையுடன் வெற்றி!’ - அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை
அடுத்த கட்டுரைக்கு