Published:Updated:

`பிரேக் தி ரூல்ஸ்' இளவரசி டயானா... 60-வது பிறந்தநாளுக்குத் தயாராகும் சிலை!

Diana
Diana

இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, அவரது சிலையை லண்டன் அரண்மனையில் நிறுவவிருக்கின்றனர், அவரின் மகன்கள் மற்றும் இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹாரி.

பிரிட்டிஷ் இளவரசி டயானா, உலகம் முழுக்கப் பலரால் விரும்பப்பட்டவர். எளிய குடும்பத்தில் பிறந்து, 20 வயதில் இளவரசர் சார்லஸின் காதல் மனைவி ஆன பின்னர், ராஜ குடும்பத்தில் அதுவரை யாரும் செய்யாத பல விஷயங்களைச் செய்தார் டயானா. `இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற ராயல் பாரம்பர்யத்தைப் பொருட்படுத்தாமல், தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை, எளிமையான சூழலை, அன்பால் இணைந்த உலகை உருவாக்கிக்கொண்டார். இன்று, ஹாரியின் மனைவி மேகன் அரச குடும்பத்து பகட்டுகளிலிருந்து விலகிச் செல்லும் தைரியத்தை அவருக்குக் கொடுத்தது, அதை ஏற்கெனவே செய்துகாட்டிய டயானாவின் துணிவுதான்.

அரச குடும்பத்து பகட்டு மரபுகளை மீறுவதாக அமைந்தது, டயனாவின் அப்போதைய வாழ்க்கைமுறை. பொதுவாக, ராயல் திருமணத்திற்கு என்று ஸ்பெஷலாக மோதிரம் செய்து வாங்குவார்கள். ஆனால், டயானா, ஏற்கெனவே கடையில் விற்பனைக்கு இருந்த ஒரு மோதிரத்தை தன் திருமணத்துக்கு என்று தேர்வு செய்தார். `ராணி அணியும் மோதிரம் சாமான்ய மக்களுக்கும் கிடைக்க இது வாய்ப்பாகிவிடும்' என்று இது குறித்து அப்போது சர்ச்சைகள் எழுந்தன. பல வருடங்கள் கழித்து, இந்த மோதிரத்தைத்தான் இளவரசர் வில்லியம், தன் திருமணத்தின்போது மனைவி கேட் மிடில்டனுக்கு அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண உறுதிமொழியில், `கணவருக்குக் கீழ்ப்படிகிறேன்' என்றிருந்த வாக்கியத்தை நீக்கிய, ராயல் குடும்பத்தின் முதல் பெண்ணியவாதி டயானா. அவர் மருமகள்களும் தங்கள் திருமணங்களின்போது, `கீழ்ப்படிகிறேன்' என்பதைத் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan

பொதுவாக, அரச குடும்பத்தினருக்கு அரண்மனையில்தான் பிரசவம் நடக்கும். ஆனால், மருத்துவமனையில் பிறந்த முதல் பிரிட்டிஷ் அரசு குடும்ப வாரிசு, ப்ரின்ஸ் வில்லியம். தொடர்ந்து, ஹாரியும் மருத்துவமனையில் பிறந்தார். ஹோம் ஸ்கூலிங் தவிர்த்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய முதல் அரச குடும்ப அம்மா என்ற புதுமையான பெருமையையும் டயானா ஏற்படுத்திக்கொண்டார். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தன் மகன்களுக்கென நேரம் ஒதுக்கத் தவறியதில்லை அம்மா டயானா. அவர்களுக்கு ராஜ வாழ்க்கை அல்லாத வேறு ஓர் உலகம் இருப்பதைக் காட்டினார்.

அரச குடும்பத்தின் உடைக்கட்டுப்பாடுகளை மீறி, ஆஃப் ஷோல்டர் ஆடைகள், ஸ்லிம் ஃபிட் உடைகள் என, டயானா சர்வதேச ஃபேஷன் ஐகான் ஆனார். துக்க நிகழ்வுகள் தவிர, பொது நிகழ்வில் கறுப்பு ஆடை அணியக் கூடாது என்ற அரச மரபையும் உடைத்து, பிளாக் அண்ட் பியூட்டிஃபுல் லுக்கில் உலக ரசிகர்களை ஈர்த்தார் டயானா.

டயானாவுக்கு அஞ்சலி
டயானாவுக்கு அஞ்சலி

இப்படி டயானாவின் `பிரேக் தி ரூல்ஸ்' குணத்துக்கு மட்டுமல்ல, தொண்டு நிறுவனம் மற்றும் மனித நேய செயல்களுக்கும் அன்பான அணுகுமுறைக்கும், `லவ்லி மதர்' குழந்தை வளர்ப்பு முறைக்கும், மனநலம் பற்றி அன்றே பேசிய முதிர்ச்சிக்கும் என, உலகம் முழுக்க அவருக்குத் தனி ரசிகர் கூட்டமே உருவானது, இன்றளவும் இருக்கிறது.

வரும் திங்களோடு, டயானா கார் விபத்தில் இறந்து 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அம்மாவை இழந்தபோது 15, 12 வயதிலிருந்த அவர் மகன்கள், இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு அப்பாவாகிவிட்டார்கள். என்றாலும், தன் அம்மா டயானாவின் இன்மையை அவர்கள் வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்நிலையில்தான், அம்மாவின் நினைவு நாளையொட்டிய அறிவிப்பாக, டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, லண்டன் அரண்மனைத் தோட்டத்தில் அவரது சிலை ஜூலை 1, 2021-ல் நிறுவப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

``அம்மா பலரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இந்தச் சிலை அவர் வாழ்ந்த அழகான வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமையும்'' என்றிருக்கிறார்கள் வில்லியமும் ஹாரியும்!

காலம் கடந்தும் வாழும் ஆளுமை... டயானா!

அடுத்த கட்டுரைக்கு