Published:Updated:

'நான் செய்தது சிறிய உதவி தான்'- குழந்தையை 3 மணிநேரம் முதுகில் சுமந்து பாடம் எடுத்த பேராசிரியை!

பேராசிரியை ஒருவர் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்ட பாடம் எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ramata Cisse
Ramata Cisse ( Anna Khadejah )

‘அம்மா தான் என் முன்னுதாரணம்’ இந்த கேப்ஷனுடன் பதிவான புகைப்படம் கடந்த சில நாள்களாக இணையத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 3 மணி நேரம் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்ட பாடம் எடுத்த பேராசிரியை ரமடா சிசியின் புகைப்படம் தான் அது. இதனை ட்விட்டரில் பதிவிட்டது ரமடாவின் மகள். வகுப்பறையில் ரமடா சுமந்தது தனது மாணவியின் குழந்தையை. ஒரு தாய்-க்கு தானே குழந்தையின் அருமை தெரியும்.

Ramata Cisse
Ramata Cisse

ரமடா சிசி, சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மாணவி ஒருவர், கைக்குழந்தை இருப்பதால் தன்னால் வகுப்புகளுக்கு சரியாக வர இயலவில்லை. குழந்தையை பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லாததால் சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார். ரமாடா அந்த மாணவியிடம், “ இதற்காக கவலை கொள்ள வேண்டாம், குழந்தையுடன் வகுப்புக்கு வாருங்கள் என அனுமதியளித்துள்ளார். அவரும் தனது கைக்குழந்தையுடன் வகுப்புக்கு வந்துள்ளார். குழந்தையை வைத்துக்கொண்டு மாணவியால் வகுப்பை சரியாக கவனிக்க முடியாது என்பதால் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு சுமார் 3 மணி மணி நேரம் உளவியல் தொடர்பான பாடத்தை எடுத்துள்ளார். இடையே குழந்தைக்கு தேவையான உணவுகளையும் அவரே கொடுத்துள்ளார்.

இதனை வகுப்பில் இருந்த சக மாணவர்கள் க்ளிக் செய்ய இந்த புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்தது. பேராசிரியைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தனது தாயின் செயலைக் கண்டு நெகிழ்ந்த அவரது மகள் ட்விட்டரில் இதனைப் பதிவிட்டுள்ளார். “ அம்மா தான் என் முன்னுதாரணம், உலகை நேசிக்கும் ஒரு பெண்ணுக்கு மகளை பிறந்ததை நினைக்கும் போது நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Ramata Cisse
Ramata Cisse

பேராசிரியை ரமடா பேசுகையில், “ அவர் நன்றாக படிக்கக்கூடிய மாணவி. மிகவும் லட்சியத்துடன் இருப்பதை உணர்ந்தேன். குழந்தையை பற்றி அவர் கவலைகொள்வதை நான் விரும்பவில்லை. அதனை சில நொடிகள் மறந்துவிட வேண்டும் என விரும்பினேன். அப்போது தான் அவரால் வகுப்பில் கவனம் செலுத்த முடியும். அவருக்கு சரியான உதவி தேவைப்படுவதை உணர்ந்தேன். நான் செய்தது சிறிய உதவி தான் இது அவருக்கு சிறிய உந்துதலை கொடுக்கும். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவருக்கு படிப்பதற்கான திறனை கொடுப்பதற்காக குழந்தையை என் முதுகில் சுமந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது”என்றார்.