Published:Updated:

`நோ ஜஸ்டிஸ்.. நோ பீஸ்..’ - காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்; பற்றியெரியும் அமெரிக்கா

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம் ( AP )

``ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்த சம்பவம் மிகவும் வேதனையைத் தருகிறது. அந்த வீடியோவைப் பார்த்ததும் நான் அழுதுவிட்டேன். எனது மனதை மிகவும் உடையச் செய்தது” - ஒபாமா

``என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னைக் கொன்றுவிடாதீர்கள்” என்ற ஜார்ஜ் ஃப்ளாய்டின் கடைசிக் குரல் உலக மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மீது வெள்ளையின மக்கள் காட்டும் நிறவெறி தீண்டாமைக்கு மற்றொரு உதாரணமாக காவலர்களால் குரல்வளை நசுக்கப்பட்டு.. ஜார்ஜ் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

காவலர்கள், ஜார்ஜின் கழுத்தில் முழங்கால்களை வைத்தபடி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு பலரையும் மூச்சுத் திணற வைத்துள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸால் திணறிக்கொண்டிருக்கும் அமெரிக்கா, தற்போது கறுப்பின மக்களின் கோபத்தால் வெடித்த போராட்டங்களால் திணறிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

என்ன நடந்தது?

அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி திங்கள் கிழமை அன்று இரவு 8 மணியளவில் கப் ஃபுட்ஸ் எனும் கடையில் அமெரிக்க மக்களில் ஒருவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் சிகரெட் பாக்கெட் வாங்கச் சென்றுள்ளார். கடையில் அவர் கொடுத்த 20 டாலர் பணத்தைக் கள்ளநோட்டாக அங்கு வேலை செய்த வந்தவர்கள் கருதியுள்ளனர். இதனால், காவலர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். கடைக்கு வெளியே ஜார்ஜ் தன்னுடைய காரில் அமர்ந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், கடைக்காரர்கள் கூறிய அடையாளங்களின்படி அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

காரில் இருந்து இறங்கும்படி காவலர்கள் அவரிடம் கூறியதாகவும் அதற்கு ஜார்ஜ் மறுத்ததாகவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர், அவரை இழுத்து காரின் டயர் அருகில் படுக்க வைத்து காவலர்களில் ஒருவரான டெரெக் சவுவின் தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்துள்ளார். அப்போது, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் பலமுறை கூறியும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார், டெரெக் சவுவின்.

தாமஸ் லேன், டோ தாவோ மற்றும் அலெக்சாண்டர் குயெங் ஆகிய மூன்று காவலர்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகில் நின்றுள்ளனர். சிறிது நேரத்தில் ஜார்ஜ் பேச்சுமூச்சின்றிக் கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் வரும் வரையிலும் டெரெக், அவருடைய கழுத்துப் பகுதியிலிருந்து தனது காலை எடுக்கவில்லை என்கின்றனர். மருத்துவமனைக்கு ஜார்ஜைக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை வீடியோவாக 17 வயதுப் பெண் டேர்னெல்லா ஃப்ரேசியர் பதிவு செய்துள்ளார். வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவலர்களின் நிறவெறியே இத்தகைய கொடுஞ்செயலுக்குக் காரணம் எனக் கூறி பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

டேர்னெல்லா ஃப்ரேசியர் :

ஜார்ஜ் ஃப்ளாய்டை காவலர்கள் துன்புறுத்தும்போது அதில் தலையிடாமல் இருந்ததற்காக சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``நான் சிறியவள். எனக்கு 17 வயதுதான் ஆகிறது. நிச்சயமாக என்னால் ஒரு காவலரை எதிர்த்து நிற்க முடியாது. எனக்குப் பயமாக இருந்தது. நானும் ஒரு கறுப்பினப் பெண்ணாக இருப்பதால் அந்தச் சூழலில் காவலர்களுடன் பேசுவது சரியாக இருக்காது. நான் பதிவிட்ட வீடியோ இன்று உலகம் முழுவதும் பகிரப்பட்டுள்ளது. இல்லையென்றால், காவல்துறையினர் இதனை நிச்சயமாக மூடி மறைத்திருப்பார்கள். என்மீது கோபப்படுபவர்கள் ஜார்ஜின் நெருங்கிய உறவினராக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.

மேலும், ``ஜார்ஜ், இறப்பதை நான் பார்த்தேன். அங்கு நடந்த முழு விஷயத்தையும் நான் பதிவு செய்திருந்தேன். நான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்த அனைவரும் என்னிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்கின்றனர். எனக்கு அதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனால், மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

Vikatan

ஜார்ஜ் ஃப்ளாய்டின் சகோதரி மற்றும் சகோதரர்:

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களைப் பணிநீக்கம் செய்த பின்னர் பேசிய பிரிட்ஜெட் ஃப்ளாய்ட், ``எனக்கோ அல்லது என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கோ காவலர்களைப் பணிநீக்கம் செய்த நீதி போதுமானதாக இல்லை. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றே நாங்கள் நினைக்கிறோம். அவர்கள் என்னுடைய சகோதரரைக் கொலை செய்துள்ளனர்” என்றார்.

அவருடைய சகோதரர் பிலோனிஸ் ப்ளாய்ட், ``மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், கறுப்பின மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதைப் பார்த்து அவர்கள் சோர்வடைகிறார்கள். மக்களை இப்போது தடுக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் வலியுடன் போராடுகிறார்கள். நான் உணரும் அதே வலியை அவர்களும் கொண்டிருக்கின்றனர். அவர்களை அமைதியாக இருக்க வைக்க என்னால் முடியாது. எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஒபாமா
ஒபாமா
AP

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா :

``ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்த சம்பவம் மிகவும் வேதனையைத் தருகிறது. அந்த வீடியோவைப் பார்த்ததும் நான் அழுதுவிட்டேன். எனது மனதை மிகவும் உடையச் செய்தது. அவருடைய கழுத்தின் மீது வைக்கப்பட்டிருந்த முழங்கால், உதவிக்கான அழுகையைப் புறக்கணித்துவிட்டு கறுப்பின மக்களைக் கீழே வைத்திருப்பதற்கான உருவகமாக உள்ளது. உண்மையிலேயே மிகவும் சோகமான விஷயம்.

நம்மைச் சுற்றித் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இருக்கும் நிலையில், இயல்பு நிலைக்குத் திரும்ப மக்கள் விரும்புவது இயற்கையானது. ஆனால், இனத்தைக் காரணம் காட்டி மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் வித்தியாசமாக நடத்தப்படுவது வலியைத் தரக்கூடிய இயல்பான விஷயமாக உள்ளது. அமெரிக்காவில் 2020-ம் ஆண்டில் இது இயல்பானதாக இருக்கக்கூடாது. ஒரு நாட்டில் குழந்தைகள் உயர்ந்த லட்சியங்களுடன் சிறப்பாக வளர வேண்டும் என்றால் அது இயல்பாக இருக்கக்கூடாது” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் :

``ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்துக்கு நாட்டின் சார்பாக இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிந்த அளவுக்கு விரைவுபடுத்த வேண்டும் என நீதித்துறையைக் கேட்டுக்கொண்டேன். இது உள்ளூர் அளவிலான பிரச்னை. இதனை, மிகப்பெரிய பிரச்னையாக மாற்றுகிறோம். இது பயங்கரமான விஷயம். நாம் பார்த்ததை மட்டும்தான் கருத்தில் கொள்ள வேண்டும். பார்க்காத விஷயங்கள் குறித்துப் பேசக்கூடாது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குடும்ப உறுப்பினர்களுடன் நாங்கள் பேசியுள்ளோம். வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜார்ஜின் குடும்பத்திற்கு நீதியைப் பெற உரிமை உண்டு” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடும் மக்களைக் கண்டதும் சுட ட்ரம்ப் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் வன்முறையைத் தூண்டுவதாகவும் ட்விட்டர் நெறிமுறைகளை மீறுவதாகவும் கூறி ட்விட்டர் நிறுவனம் இந்த ட்வீட்டுகளை நீக்கியது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் அதிபர் ட்ரம்புக்கும் இடையில் மோதல் சென்றுகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் போராட்டங்கள்:

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் உள்ள கறுப்பின மக்கள் நியூயார்க், அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டங்களை இரவுபகலாக நடத்தி வருகின்றனர். ``நாங்கள் சுவாசிக்க கஷ்டப்படுகிறோம், எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள், எங்களுக்கு நீதி வேண்டும்” உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்தியபடி மக்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் வன்முறைகளும் அதிக அளவில் நடந்துள்ளன. அட்லாண்டா பகுதியில் காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது பாட்டில்களை எறிந்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கப் பிரபலங்கள் பலரும் இந்தச் சம்பவத்துக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ``நோ ஜஸ்டிஸ், நோ பீஸ்” என்று முழங்கியபடி மக்கள் போராடி வருகின்றனர்.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

விவாகரத்து கோரிய டெரெக் சவுவின் மனைவி :

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மீது முழங்கால்களை வைத்து அவரைக் கொன்ற காவல் அதிகாரியின் மீது கொலை வழக்குக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மனைவி கெல்லி சவுலின், டெரெகிடமிருந்து விவாகரத்துப் பெற நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஜார்ஜின் மரணத்தால் அவர் மிகவும் கவலைக்கு ஆளாகி உள்ளார். அவருடைய குடும்பத்தை நினைத்து மிகவும் அனுதாபப்படுகிறார். டெரெக் உடனான திருமண உறவை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலம்காலமாக பல தலைவர்கள் கறுப்பின மக்களுக்காகவும் நிறவெறிக்கு எதிராகவும் போராடிவரும் நிலையில் அம்மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு அம்மக்களுக்கான வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து கேள்விகளையும் எழுப்புகின்றன.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு