Election bannerElection banner
Published:Updated:

`சிலையை அடித்துநொறுக்கி, ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்!’ - இங்கிலாந்திலும் தீவிரமடையும் போராட்டம்

நதியில் எறியப்படும் சிலை
நதியில் எறியப்படும் சிலை

`எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்', 'இனவெறிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்', 'அமைதி என்பது வன்முறை’ உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் கையில் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில், மின்னெபொலிஸ் பகுதியில் ஜார்ஜ் ப்ளாய்ட் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் இன்று உலகம் முழுவதும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது. நியூயார்க், வாஷிங்டன், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் என அமெரிக்காவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்துடனும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும் ஆட்சியாளர்கள் திணறிவருகின்றனர். ஆனால், ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் காலம் காலமாக தாங்கள் ஒடுக்கப்பட்டுவருவதற்கு எதிராகத் தங்களது குரல்களை வலிமையாக எழுப்பிவருகின்றனர். இதையடுத்து, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் இங்கிலாந்து, பிரேஸில், ஆஸ்திரேலியா, ஜப்பான் எனப் பல நாடுகளிலும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகளில் சில இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டம்
போராட்டம்

`பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ போராட்டம் தற்போது இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பிரிஸ்டலில் தீவிரமாக மாறியுள்ளது. இப்பகுதியில், அம்மக்களை அடிமைப்படுத்தி வியாபாரம் செய்து வந்த எட்வர்ட் கோல்ஸ்டன் என்பவரின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்துநொறுக்கி, கயிறுகளைக் கட்டி சாலைகளில் இழுத்துச் சென்று அங்கிருந்த நதியில் வீசிய சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17-ம் நூற்றாண்டில் உள்ளூரில் அடிமைகள் வர்த்தகத்தில் ஈடுபட்ட கோல்ஸ்டன், இதன்மூலம் அதிக அளவில் லாபம் அடைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 1895-ம் ஆண்டில் இவருடைய சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. போராட்டகாரர்களின் இந்தச் செயல்களால் அரசாங்க அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரிதி படேல், ``போராட்டக்காரர்களின் இந்தச் செயல் முற்றிலும் இழிவானது” என்று விமர்சித்துள்ளார்.

`ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழப்பு;  விஸ்வரூபம் எடுத்த போராட்டம்!’ - கலைக்கப்படும் மின்னெபொலிஸ் காவல்துறை

பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மக்கள் அமைதியான முறையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த உரிமை இல்லை. போராட்டக்காரர்கள் சில குண்டர்களால் திசை திருப்பப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார். இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினரான சஜித் ஜாவித், ``நான் பிரிஸ்டலில் வளர்ந்தேன். அடிமைகள் வர்த்தகம் மூலமாக எட்வர்ட் கோல்ஸ்டன் லாபம் அடைந்ததைப் பற்றி எண்ணும்போது வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால், இந்த மாதிரியான செயல்கள் சரியானது இல்லை. ஒரு நினைவுச் சின்னத்தை அகற்ற விரும்பினால், அது ஜனநாயக ரீதியில் இருக்க வேண்டும். இந்த மாதிரியான செயல்களால் அதை செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.

சர்ச்சில் சிலை
சர்ச்சில் சிலை
AP

இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்த காந்தி சிலை அருகே போராட்டக்காரர்கள் இனவெறிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தனர். காந்தி சிலை அங்கு 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது. வின்ஸ்டன் சர்ச்சில், ஆபிரகாம் லிங்கன் மற்றும் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட 12 பேரின் சிலைகளில் காந்தியின் சிலையும் ஒன்றாக நிறுவப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலையின் கீழ் `Was a racist' என்ற வாசகம் எழுதிவைக்கப்பட்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் போராட்டங்கள் தீவிரமடைவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எட்வர்டின் சிலையை நதியில் எறிந்தவர்கள் பற்றிய விசாரணைகளைக் காவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்தப் போராட்டங்களில் காவல்துறையினரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. `எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்', 'இனவெறிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்', 'அமைதி என்பது வன்முறை’ உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் கையில் ஏந்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

`நிறவெறிக்குப் பலியான 5 வயதுச் சிறுவன்?!’ பிரேசிலையும் அசைத்த #BlackLivesMatter போராட்டம்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு