Published:Updated:

`அவளுக்கு நிறைய கனவுகள் இருந்தன!’ - இரான் விமான விபத்தில் இறந்த மாணவர்களின் நண்பர்கள் கண்ணீர்

நண்பர்கள்
நண்பர்கள் ( பிபிசி )

``எங்களிடம், அவளது திருமணத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வந்துகொண்டிருந்தாள். அதுமட்டுமல்ல, அவள் கூடிய விரைவில் பட்டம் பெறப்போகிறாள்” என்று அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே பிரச்னைகள் நிலவி வரும் சூழலில், கடந்த புதன்கிழமை இரானின் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், இரான், கனடா, உக்ரைன், ஸ்வீடன், ஆப்கான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 176 பயணிகள் இறந்தனர். `தொழில்நுட்பக் கோளாறு’ காரணமான இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

உக்ரைன் விமான விபத்து
உக்ரைன் விமான விபத்து
AP

தெஹ்ரானில் நடந்த இந்த விபத்தில் இறந்த பெரும்பான்மையானவர்கள் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள். கனடாவிலுள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் இதில் அடங்குவர். இறந்த மாணவர்களின் நண்பர்கள், அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நினைவேந்தலை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பிபிசி-யிடம் பேசிய மாணவி ஒருவர்,``நான் எல்லோரிடமும் நெருக்கமாகப் பழகக்கூடியவள். ஆனால், குறிப்பாக, செயினாப் ஆசாதி லாரி (விபத்தில் இறந்த மாணவியின் பெயர்) எனக்கு சிறப்பானவள். அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. எங்களிடம், அவளது திருமணத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வந்துகொண்டிருந்தாள். அதுமட்டுமல்ல, அவள் கூடிய விரைவில் பட்டம் பெறப்போகிறாள். அவளுக்கு அதிகமான கனவுகள் இருந்தன. எல்லாக் கனவுகளும் இப்போது கலைந்துவிட்டன” என்று கண்ணீருடன் கூறினார்.

`ஒரு மணிநேரத் தாமதம்; ஒருவர்கூட பிழைக்கவில்லை!' - இரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இச்சம்பவம் தொடர்பாகப் பேசுகையில், ``மிகவும் பயங்கரமான சோகம் என்பதை நாம் அறிவோம். துன்பத்தை அனுபவிக்கின்ற குடும்பங்களுக்கு ஆறுதல்களைத் தெரிவிக்க வேண்டும். இனி வரப்போகும் நாள்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். கனடாவின் மக்களுக்கு கேள்விகள் உள்ளன. அவை பதில்களைப் பெறத் தகுதியான கேள்விகள். இந்த விபத்து குறித்த முழுமையாக விசாரணையிலும் கேள்விகளுக்கு விடை தேடுவதிலும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து கனடா செயல்படும்” என்றார்.

தெஹ்ரானில் உள்ள ஷெரிஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், ``எங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 முன்னாள் மாணவர்கள் விபத்தில் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடைய அடையாளங்கள் உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளனர்.

கனடா பிரதமர் - ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் - ஜஸ்டின் ட்ரூடோ

லண்டனிலுள்ள இம்பெரிகல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,``இந்தத் துயரமான செய்தியைக்கேட்டு நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். எங்கள் கல்லூரியைச் சேர்ந்த சயீத் தஹ்மசேபி கதேமாசாடி, ஒரு மிகச்சிறந்த பொறியியலாளர். கணினி பொறியியல் துறையில் அவர் செய்த பங்களிப்புகள் அதிக கவனம் பெற்றன. சமூகத்திலுள்ள அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நட்புடனும் இருந்தார்” என்று கூறியுள்ளனர்.

விபத்தில் மரணமடைந்த மற்ற பயணிகளின் குடும்பத்தினரும் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உலகின் முக்கிய பிரபலங்களும் இச்சம்பவத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுலைமானி உடல் அடக்கம்; அடுத்த ஒரு மணிநேரத்தில் பறந்த ஏவுகணை! -அமெரிக்காவுக்கு அதிர்ச்சிகொடுத்த இரான்
அடுத்த கட்டுரைக்கு