Published:Updated:

`கொரோனா குறித்த தெளிவு உங்களுக்கு இல்லை!' - சீன அதிபரை விமர்சித்த சமூக ஆர்வலர் கைது

சமூக ஆர்வலர் ஜூ ஜியோங்
சமூக ஆர்வலர் ஜூ ஜியோங்

நாட்டில் அரசியல் தொடர்பான சவால்கள் நிலவும்போது, ஆட்சியாளர்கள் அடக்குமுறையில் இறங்குகிறார்கள். சீனாவின் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது மிகவும் அவநம்பிக்கையாக இருக்கிறது" என்று ஜியோங்கின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதலால் மோசமான சூழல் நிலவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 72,500-க்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் சுமார் 1,870 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11,500-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸுக்கு எதிராக சீன அரசு முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில், சீன அதிபரை விமர்சித்த அந்நாட்டின் சமூக ஆர்வலர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஜூ ஜியோங், சீனாவின் பிரபல சமூக ஆர்வலராக அறியப்படுகிறார். சட்டக் கல்லூரி ஒன்றின் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரையில், ``கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை வெளியிட நீங்கள் விரும்பவில்லை. தற்போது, இது தேசிய அளவில் பேரழிவாக மாறியிருக்கிறது. நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது, அதுகுறித்த எந்தத் தெளிவும் இல்லாமல் இருக்குறீர்கள். உங்களை தீய மனிதராக நான் எண்ணவில்லை. உங்களால் சரியாக நிர்வாகம் செய்ய முடியவில்லை. தயவு செய்து பதவி விலகுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வர்த்தகப் போர், ஹாங்காங் தொடர்பான விஷயங்கள், கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கட்டுரையில் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். மருத்துவப் பொருள்கள் தட்டுப்பாடு போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் ஆகியன குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

`லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி

அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் ஜியாமென் எனும் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதிகாரிகளின் கவனத்திற்கு இது சென்றபிறகு, பல்வேறு சமூக ஆர்வலர்கள் காணாமல் போனதாகவும் தலைமறைவாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தக் கூட்டத்தில் ஜியோங்கும் பங்கு வகித்துள்ளார் என்றும் இதைத் தொடர்ந்து சீனக் காவல் அதிகாரிகள் ஜியோங்கை கைது செய்ய முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவரும் தலைமறைவாக இருந்துள்ளார். எனினும் சமூகப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில்தான் சீன அதிபர் மீதான விமர்சனக் கட்டுரையையும் எழுதி வெளியிட்டுள்ளார். 2012- ல் சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து அங்கு கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக ஜியோங் குரல் கொடுத்து பலமுறை சிறைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன அதிபர் - ஜி ஜின்பிங்
சீன அதிபர் - ஜி ஜின்பிங்

ஜியோங்கின் நண்பர்கள் அங்கு நிலவும் சூழல் தொடர்பாக பேசும்போது, ``நாட்டில் அரசியல் தொடர்பான சவால்கள் நிலவும்போது, ஆட்சியாளர்கள் அடக்குமுறையில் இறங்குகிறார்கள். சீனாவின் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது மிகவும் அவநம்பிக்கையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். பொது அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும்விதமாக, இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவதை நிறுத்தும்படி அந்நாட்டின் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் இவரை எச்சரித்தனர்.

வைரஸின் கடுமையான தாக்கத்திற்குப் பின் மருத்துவர் லீ எச்சரித்த செய்தியை அறிந்த மக்கள் பலரும் அரசின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதையடுத்து சீன அதிபரும் களத்தில் இறங்கி சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

`வைரஸ் பற்றி முன்னரே அதிபருக்குத் தெரியும்!?’ - சீனாவில் பரவும் புதிய சர்ச்சை #corona
அடுத்த கட்டுரைக்கு