Published:Updated:

`மரண பயம், வறுமை பயமாக மாறியுள்ளது!' - 10-வது ஆண்டாகத் தொடரும் சிரிய போரால் கலங்கும் மக்கள்

சிரியா போர் ( Represent image )

``என்னுடைய வாழ்க்கை முழுவதும் யுத்தம் மற்றும் சாலையில் இருந்ததைத் தவிர வேறொன்றும் இல்லை என நினைக்கிறேன்."

`மரண பயம், வறுமை பயமாக மாறியுள்ளது!' - 10-வது ஆண்டாகத் தொடரும் சிரிய போரால் கலங்கும் மக்கள்

``என்னுடைய வாழ்க்கை முழுவதும் யுத்தம் மற்றும் சாலையில் இருந்ததைத் தவிர வேறொன்றும் இல்லை என நினைக்கிறேன்."

Published:Updated:
சிரியா போர் ( Represent image )

சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் உள்நாட்டுப் போரில், இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் போர், தற்போது 10-வது ஆண்டுக்குள் நுழைகிறது.

நட்பு நாடுகளின் உதவியுடன், சிரிய அரசுப்படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். தற்போது, கிளர்ச்சியாளர்கள் வசம் எஞ்சியுள்ள இத்லிப் என்ற பகுதியைக் கைப்பற்ற அரசுப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்திவருகின்றன.

சிரியா தாக்குதல்
சிரியா தாக்குதல்
AP

நாட்டின் முக்கியப் பகுதியான டமாஸ்கஸ் நகரில், 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் சற்று அமைதி திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டமாஸ்கஸைச் சேர்ந்த பூக்கடைக்காரர் ஒருவர், போருக்கும் தனது வாழ்வுக்குமான உறவை நினைவுகூர்கிறார்.

``டமாஸ்கஸ் நகரைச் சுற்றி துப்பாக்கிகளின் சப்தங்கள் ஓய்ந்திருக்கலாம். ஆனால், போரினால் ஏற்பட்ட ஆறாத வடுக்கள் உள்ளன" என்று பேசத் தொடங்குகிறார், 42 வயதான அப்தெல்காதர் காசெம். 2013-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த காசெம் பேசுகையில், ``போரை மறப்பது எப்போதும் எனக்கு கடினமாக இருக்கும். நான் நேசித்த எல்லாவற்றையும் என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. என்னுடைய மகன், என் இடது கை என எல்லாவற்றையும்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்துவரும் காசெம் போன்ற குடியிருப்பாளர்கள், பல வருட வன்முறைகளுக்குப் பிறகும் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பப் போராடி வருகின்றனர். டமாஸ்கஸில் உள்ள சந்தை ஒன்றில், மரத்தின் விதைகள் மற்றும் பூக்களை விற்பனை செய்யும் வியாபாரியாக இன்று இருக்கிறார். பூக்களுக்கு மத்தியில் அமர்ந்தபடி, ``டமாஸ்கஸில் பலருக்கும் போர் இன்று முடிந்துவிட்டது. ஆனால், நான் இறப்பது வரை என்னுடன் இருக்கும்" என்று கூறினார்.

சிரியா தாக்குதல்
சிரியா தாக்குதல்
AP

உளவியல் ரீதியிலான பாதிப்புகளைக் கடந்து, அப்பகுதி மக்கள் பொருளாதாரரீதியில் தங்களது அன்றாட வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 15 சவாரி ஓட்டும் 63 வயதான டாக்ஸி டிரைவர் நபில் அல் ஷெரிஃப் பேசுகையில், ``என்னுடைய காரில் பயணிக்கும் ஒவ்வொருவரும், போரால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து புகார் அளிக்கத் தவறியதே இல்லை. என்னுடைய கார், மக்களின் கவலைகளால் நிரம்பியது. போர் முடிந்தாலும் மக்கள் இன்னும் பாதிப்பில் உள்ளனர். மக்கள் கவலைப்படுகிறார்கள். மரண பயம் வறுமையின் மீதான பயமாக மாறியுள்ளது" என்கிறார். தன்னுடைய பயணிகள், அதிகமாக சமையல் எரிவாயு மற்றும் அதிகரித்த அன்றாட செலவுகளைப் பற்றி கவலைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

போர் தொடங்கிய 2011-ம் ஆண்டு முதல், நாட்டில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதங்களின் ஒட்டுமொத்த செலவு, கிட்டத்தட்ட 400 பில்லியன் டாலர் என ஐக்கிய நாடுகள் சபை கணக்கிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிரியா மீதான பொருளாதாரத் தடைகள், பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணிகள், சிரிய மக்களின் வாழ்வை இன்னும் போராட்ட நிலைக்குத் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களைப் போலவே போரினால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக ஜராமனா எனும் நகரத்துக்குச் சென்றவர்களில் அகமது ஹம்மாதா மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர். ``போர் நடந்துகொண்டிருந்தபோது, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, குறைந்தது 10 தடவை தப்பி ஓடிவிட்டோம்" என்கிறார், அகமது.

தொடர்ந்து பேசிய அவர், ``வடக்கு சிரியாவிலுள்ள வீட்டை விட்டு கிளம்பினோம். இந்தப் பகுதிக்கு வருவதற்கு 100 மைல்களுக்கும் மேலாக நடந்தோம்" என்கிறார். கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தில் குளிரில் இருந்து தப்பிக்க, பிளாஸ்டிக்குகளால் மூடப்பட்ட ஜன்னல்கள், இல்லாத மின்சாரம், தண்ணீர்ப் பிரச்னை ஆகியவற்றுடன் வசித்துவருவதாகக் கூறியுள்ளனர்.

சிரியா
சிரியா

மேலும் அவர், ``என்னுடைய வாழ்க்கை முழுவதும் யுத்தம் மற்றும் சாலையில் இருந்ததைத் தவிர வேறொன்றும் இல்லை என நினைக்கிறேன். எனது வீடு அழிக்கப்பட்டது. என்னுடைய குழந்தைகள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். எங்களுக்கு எதுவும் மிச்சமில்லை" என்கிறார். அவருடைய மனைவி, ``என்னுடைய கடைசி ஆசை என்னவென்றால், யாரும் வெளியேற வற்புறுத்தாத வீட்டில் வசிக்க வேண்டும் என்பதுதான். வீட்டை விட்டு வெளியேறி மிகவும் சோர்வடைந்துவிட்டேன்" என்கிறார்.

Credits : AFP