Published:Updated:

Trump:`குங் ஃப்ளூ.. குறைக்கப்படும் பரிசோதனைகள்?!’ - ட்ரம்ப் பிரசாரக் கூட்ட சர்ச்சை

ட்ரம்ப்
ட்ரம்ப்

``கொரோனா வைரஸ் தொடர்பாக அதிக பரிசோதனைகளைச் செய்யும்போது, வைரஸ் தொற்றுக்கு ஆளான அதிகமான நபர்கள் கண்டறியப்படுவார்கள். புதிதாகக் கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்”

சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் மிகவும் கடுமையானது. பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. அதிகரித்துக்கொண்டே வரும் பாதிப்பு எண்ணிக்கைகளால் `இயல்பு நிலைக்கு எப்போது திரும்புவோம்?’ என்ற கேள்வியும் கவலையும் மக்களிடையே எழுந்துள்ளது. உயிர்களைக் கொல்லும் இந்தக் கொடிய வைரஸால் மிக மோசமாக பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அமெரிக்காவில் 23,30,578 பேர் பாதிப்படைந்துள்ளனர். 1,20,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பரிசோதனைகள் அதிகளவில் செய்யப்படுவதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். இதுவரை சுமார் 27 மில்லியன் மக்களுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான பிரசாரங்கள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. ஒக்லாஹோமாவில் உள்ள துல்சாவில் நேற்று அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீனாவை விமர்சிக்கும் வகையிலும் பரிசோதனை தொடர்பாகவும் சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார். கூட்டத்தில் ட்ரம்ப் உரையாற்றும்போது, ``கொரோனா வைரஸ் தொடர்பாக அதிக பரிசோதனைகளைச் செய்யும்போது, வைரஸ் தொற்றுக்கு ஆளான அதிகமான நபர்கள் கண்டறியப்படுவார்கள். புதிதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பரிசோதனை என்பது இருமுனைகள் கொண்ட வாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நான் பரிசோதனைகளை குறைக்கக் கூறினேன்” என்றார். அவருடைய ஆதரவாளர்களிடம் இதனை விளையாட்டுத்தனமாகக் கூறினாரா அல்லது உண்மையாகவே கூறினாரா என்பது தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.

`கொரோனா, வெல்ல முடியாத எதிரி; ஆனால், அமெரிக்கா அதை தோற்கடிக்கும்!’ - ட்ரம்ப்

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து பரவத் தொடங்கியதால் இதனை அதிபர் ட்ரம்ப் சீன வைரஸ், வுஹான் வைரஸ் எனப் பல பெயர்களுடன் அழைத்து வந்தார். இதனால், பல விமர்சனங்களையும் ட்ரம்ப் சந்தித்தார். இந்த நிலையில், நேற்று பிரசாரத்தில் பேசும்போது கொரோனா வைரஸூக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ``கொரோனாவுக்கு என்னால் `குங் ஃப்ளூ’ எனப் பெயரிட முடியும். இதைப்போல வெவ்வேறு பெயர்களை என்னால் கூற முடியும். பலரும் இதனை வைரஸ் என்று அழைக்கிறார்கள். வேறு சிலர் இதை ஃப்ளூ என்று குறிப்பிடுகிறார்கள். என்ன பெரிய வித்தியாசம். இதைப்போல 19,20 பெயர்கள் எங்களிடம் உள்ளன என நினைக்கிறேன்” என்று கூறினார். அதிபர் ட்ரம்ப் மீண்டும் சீனாவைத் தாக்கும் வகையில் பேசியதற்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. `குங் ஃப்ளூ’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டது சீனாவின் பாரம்பர்யக் கலையாகக் கருதப்படும் `குங் ஃபூ’ வை ஒப்பிட்டே என்றும் இனரீதியில் ட்ரம்ப் விமர்சித்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

தேர்தல் பிரசாரம் நடைபெற்ற இடமான ஒக்லாஹோமா கொரோனா வைரஸால் ஏற்கெனவே கடுமையாகப் பாதிப்படைந்த பகுதியாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் அப்பகுதில் ட்ரம்பின் உரையைக் கேட்கக்கூடியது சர்ச்சையையும் அச்சத்தையும் தற்போது ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் பிரசாரம் தொடர்பாக நேற்று கூடிய மக்கள் கூட்டம் ஆகியவை கொரோனா பாதிப்பைக் கடுமையாக அதிகரிக்கும் என நிபுணர்கள் தங்களது அச்சத்தைப் பதிவு செய்துள்ளனர். டரம்பின் பிரசாரமானது சுமார் 19,000 பேர் அமரக்கூடிய அளவு வசதியுள்ள அரங்கில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளை விட அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் மிகவும் ஆபத்தானவை என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையின் இணை பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் கூறியுள்ளார். பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் மூலமாக வைரஸ் அதிகளவில் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் ஆதரவாளர்கள்
ட்ரம்பின் ஆதரவாளர்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்ததால், மக்கள் திரும்பிச் செல்லும்போது பல இடங்களுக்கும் வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இது ஏற்கெனவே உள்ள பாதிப்புகளை இன்னும் அதிகமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரேனும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்பின் பிராசாரத்தில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகள் கூறுவதுடன் அதற்கான ஒப்பந்தத்திலும் மக்களிடம் கையெழுத்தைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூட்டத்திற்கு வருபவர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் போன்றவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும், மக்கள் இதைப் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. கட்டாயமாக அதைப் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளும் கூறவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அரங்குக்கு உள்ளேயும் தனிமனித இடைவெளிகள் பின்பற்றப்படவில்லை. இதனால், நிபுணர்கள் தங்களது கவலையைப் பதிவு செய்து வருகின்றனர்.

`ட்ரம்ப், மக்களை ஒன்றிணைப்பதாக நடிக்கக்கூட இல்லை!’ - கொதித்த முன்னாள் ராணுவச் செயலர்
அடுத்த கட்டுரைக்கு