Published:Updated:

பாராசைட் படத்துக்கு ஆஸ்கர் விருது... கேலி செய்த அதிபர் ட்ரம்ப்!

 அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

``அவரால் சப்-டைட்டிலைப் படிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று படத்தின் விநியோஸ்தகர் கேலியாகப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கொரியாவைச் சேர்ந்த `பாராசைட்' என்ற திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, வெளிநாட்டுத் திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. உலகின் சினிமா ரசிகர்கள் பலரும் தற்போது இந்தப் படத்தைக் கொண்டாடி வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் இந்தப் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து கேலி தெரிவித்துள்ளார்.

பாராசைட் படத்துக்கு ஆஸ்கர் விருது... கேலி செய்த அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலரோடாவில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான பேரணி ஒன்றில் ட்ரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``ஆஸ்கர் விருதுகள் இந்த ஆண்டு எவ்வளவு மோசமாக இருந்துள்ளன என்று பார்த்தீர்களா? தென்கொரியாவுடன் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் அமெரிக்காவுக்கு உள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டிலிருந்து வந்த படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வழங்கியுள்ளனர்" என்றார்.

`பாராசைட் நன்றாக இருக்கிறதா?' என்ற கேள்வியுடன் தொடர்ந்து பேசிய அவர், ``அது குறித்து எனக்குத் தெரியவில்லை. கான் வித் தி வின்ட்' போன்ற திரைப்படங்கள் கிடைக்குமா என தேடிக்கொண்டிருக்கிறேன். `கான் வித் தி வின்ட்' , `சன்செட் பவுல்வெர்ட்' போன்ற பல சிறந்த திரைப்படங்கள் உள்ளன" என்றார். மேலும், ``கொரியாவிலிருந்து ஒரு சிறந்த திரைப்படம்! சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை அது பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வாறு நடந்தது இல்லை என நினைக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

`ஜோக்கர்', `பாராசைட்', `ஜூடி'... ஆஸ்கர் வென்ற படைப்பாளிகளும் அவர்களின் கதைகளும்!

ட்ரம்ப் பேசியது தொடர்பாக பாராசைட் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் நியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அவரால் சப்-டைட்டிலைப் படிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று கேலியாகப் பதிவு செய்துள்ளார்.

`ஒன்ஸ் அபான் எ டைம்' திரைப்படத்துக்காக துணை நடிகர் விருதை வென்ற பிராட் பிட் விருதைப் பெற்றுக்கொண்ட பின் செனட் அதிகாரிகளை விமர்சித்துப் பேசினார். அவர் பேசும்போது, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் விசாரணை ஒன்றில் தன்னுடைய பேச்சை கேட்க மறுத்தார் என்பதைக் குறிப்பிட்டு ``என்னிடம் 45 விநாடிகள் மட்டுமே உள்ளது என இங்கு கூறினர். இது, ஜான் போல்டன் எனக்கு வழங்கிய நேரத்தைவிட 45 விநாடிகள் அதிகம்'' என்று பேசியிருந்தார். மேலும், ``க்வென்டின், இதைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கலாம் என நினைக்கிறேன். பெரியவர்கள் எப்போதும் சரியானதைச் செய்வார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய ட்ரம்ப் அந்தப் பேரணியில் பிராட் பிட்டையும் விமர்சித்துப் பேசினார். அதில், ``பிராட் பிட்டிற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. நான் பிராட் பிட்டின் மிகப்பெரிய ரசிகன் கிடையாது. மேடையில், கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேசியுள்ளார். கொஞ்சம் புத்திசாலித்தனமா..!'' என விமர்சித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் குறித்து ட்ரம்ப் பல ஆண்டுகளாக தனது விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்.

``ஆஸ்கருக்கு கொரியன் மேல ஏன் இவ்ளோ கரிசனம்னு தெரியல!" - ஆஸ்கர் பற்றி வசந்தபாலன்   
அடுத்த கட்டுரைக்கு