Published:Updated:

`இனி சாதாரண விஷயங்களைப் பார்த்தும் சிரிப்பாள்!' -சிரிய குழந்தையை மீட்ட துருக்கி அதிகாரிகள்

அப்துல்லா மற்றும் சல்வா

``சிரியாவில் பலர் இன்னும் கஷ்டங்களை அனுபவித்து வரும் சூழலில் நாங்கள் மட்டும் வெளியே வந்தது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், நீங்கள் ஒரு மனிதனைப்போல நடத்தப்படும் வாழ்க்கையைக் கேட்பது மிகையில்லை என்று நினைக்கிறேன்"

`இனி சாதாரண விஷயங்களைப் பார்த்தும் சிரிப்பாள்!' -சிரிய குழந்தையை மீட்ட துருக்கி அதிகாரிகள்

``சிரியாவில் பலர் இன்னும் கஷ்டங்களை அனுபவித்து வரும் சூழலில் நாங்கள் மட்டும் வெளியே வந்தது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், நீங்கள் ஒரு மனிதனைப்போல நடத்தப்படும் வாழ்க்கையைக் கேட்பது மிகையில்லை என்று நினைக்கிறேன்"

Published:Updated:
அப்துல்லா மற்றும் சல்வா

சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 2011-ம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப்போரில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். சிரியாவுக்கு துருக்கி மற்றும் ரஷ்ய நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை நட்பு நாடுகளுடன் இணைந்து சிரிய அரசுப்படைகள் கைப்பற்றியது. தற்போது, கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் இத்லிப் பகுதியைக் கைப்பற்ற படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால், இத்லிப் பகுதியில் கடுமையான தாக்குதல்கள் இருதரப்பினருக்கும் இடையே நடந்து வருகிறது. சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சிரியா மற்றும் துருக்கி எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர்.

இத்லிப் மாகாணத்திலிருந்து வெளியேறிய குடும்பங்களில் அப்துல்லா அல் முகமது என்பவரின் குடும்பமும் ஒன்று. இவர், சர்மதா எனும் நகரிலுள்ள தன்னுடைய நண்பரின் வீட்டில் தன் 3 வயதுக் குழந்தையுடன் சில நாள்களுக்கு முன்புவரை வசித்து வந்தார். இந்தப் பகுதியிலும் குண்டுகள் விழும் சப்தங்கள் கேட்டு வந்ததால், அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து குழந்தை சல்வாவைக் காப்பாற்ற அப்துல்லா சிரிக்க வைக்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் வைரலாகி உலகைக் கலங்க வைத்தது.

இதையடுத்து, அப்துல்லா அவரின் மகள் சல்வா மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பாக எல்லையைக் கடக்க துருக்கி அரசாங்கம் உதவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``இத்லிப் பகுதியிலிருந்து துருக்கி பகுதிக்கு 3 வயது சல்வாவும் அவரின் பெற்றோர்களும் பாதுகாப்பாகச் சென்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். அப்துல்லா சால்வாவை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்க, வெடிகுண்டுகள் விழும் சப்தங்களை விளையாட்டாக மாற்றியிருந்தார். சல்வா எல்லையைக் கடந்துள்ளதால், முதல் முறையாக சாதாரண விஷயங்களைப் பார்த்து சிரிக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்துல்லா கார்டியனிடம் பேசும்போது, ``இனிமேல் நாங்கள் பயப்படத் தேவையில்லை. சல்வாவுக்கு முற்றிலுமாக வேறு எதிர்காலம் உள்ளது" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், ``எனது உடன் பிறப்புகளையும் உறவினர்களையும் விட்டுச் செல்வதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. சிரியாவில் பலர் இன்னும் கஷ்டங்களை அனுபவித்து வரும் சூழலில் நாங்கள் மட்டும் வெளியே வந்தது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், நீங்கள் ஒரு மனிதனைப்போல நடத்தப்படும் வாழ்க்கையைக் கேட்பது மிகையில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் சல்வாவை தினமும் பூங்காவுக்கு அழைத்துச் செல்வேன். அவள் ஏற்கெனவே மகிழ்ச்சியாக இருக்கிறாள்" என்று கூறியுள்ளார்.

அப்துல்லா மற்றும் சல்வா
அப்துல்லா மற்றும் சல்வா

முன்னதாக, அந்த வீடியோவில் அப்துல்லா தன்னுடைய 3 வயதுக் குழந்தை சல்வாவிடம் வீட்டின் வெளியே கேட்கும் சப்தத்தைக் குறிப்பிட்டு, `இது ஜெட்டா அல்லது குண்டா?' என கேட்கிறார். அதற்கு சல்வா, `குண்டு' என்கிறார். `குண்டுகளின் சப்தம் கேட்கும்போது நாம் சிரிப்போம்' என அப்துல்லா கூறிய உடனேயே மீண்டும் குண்டுகளின் சப்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் சல்வா தன்னுடைய குழந்தை சிரிப்பை வெளிப்படுத்துகிறாள். `உனக்கு சிரிப்பு வருதா?' என அவர் மீண்டும் கேட்க. `ஆமாம்' என சிரித்தபடியே கூறுகிறாள். பலரின் ஆன்மாவையும் அசைத்துப் பார்த்து மனதை கவலைக்குள்ளாக்கும் சிரிப்பாக சல்வாவின் சிரிப்பு இருந்தது.

தெற்கு துருக்கியில் உள்ள ஓர் அகதிகள் முகாமில் இருவரும் தங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலால் நெட்டிசன்கள் பலரும் சல்வாவின் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், சிரியாவின் போர் சூழலில் கஷ்டப்படும் மற்றக் குழந்தைகள் குறித்தும் தங்களது கவலையைப் பதிவு செய்துள்ளனர்.