Published:Updated:

கால்பந்து வீராங்கனையும் குட்டி ரசிகரும்! - ரசிகர்களின் மனதை வென்ற புகைப்படம்

ராம் பிரசாத்

நான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியை என் போன்றோர்களுக்குப் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.

கால்பந்து வீராங்கனையும் குட்டி ரசிகரும்
கால்பந்து வீராங்கனையும் குட்டி ரசிகரும் ( instagram/Carson Pickett )

கால்பந்து வீராங்கனையும் அவரின் குட்டி ரசிகரும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் புகைப்படம் இணையத்தை வட்டமடித்து வருகிறது. கார்சன் பிக்கெட் (Carson pickett) அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை. பிறவியிலே இடது கை குறைபாடுடன் பிறந்தவர். தனக்கு இருந்த தடைகளை படிகளாகக் கொண்டு கால்பந்தில் சாதித்துவருகிறார். தன்னைப் போல் இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

ஜோசப் டிட்
ஜோசப் டிட்

கார்சன் பிக்கெட் அவரின் குட்டி ரசிகருமான ஜோசப் டெட்டுடன் இருக்கும் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் உள்ளவர்களால் கொண்டாடப்படுகிறது. ஜோசப் டெட் 21 மாத குழந்தை. இந்தக் குழந்தை பிறக்கும்போது இடது கை குறைபாட்டுடன்தான் பிறந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஒரு கால்பந்து போட்டியின்போது டெட் மற்றும் கார்சன் பிக்கெட் சந்தித்துக்கொண்டனர். கார்சனின் இடதுகையைப் பார்த்த டெட்டுக்கு அவரைப் பிடித்துவிட்டது. அதன்பின் கார்சனின் ரசிகர் ஆகிவிட்டார் டெட். கார்சனுக்கு இந்தக் குட்டி ரசிகரின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் இடையே பாசம் பிணைப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

நான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியை என் போன்றோர்களுக்குப் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். என் கைகளினால் என்னால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னால் முடியாது என்று எதையும் நினைக்கமாட்டேன் என்பதை கார்சன் பிக்கெட் எப்போதும் கூறுவார்..

கார்சன்
கார்சன்

கார்சன், ஜோசப் டெட் சந்திப்பு மறக்கமுடியாதது என அவரின் தந்தை கூறியுள்ளார். `ஏப்ரல் மாதத்தில் கார்சன் என் மகனிடம் வந்து அவரது கையைக் காண்பித்தார். அவர்களுக்கு இடையே உடனடியாக நடந்த அந்த பிணைப்பை எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த கால்பந்துப் போட்டியில் கார்சன் அணியை உற்சாகப்படுத்துவதற்காக ஜான்சன் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்தப் போட்டியின் நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.