Published:Updated:

ஏவுகணைகளைத் தோற்கடித்த மனிதம்! - நெகிழ வைக்கும் இஸ்ரேல் திருமணங்கள்

Wedding in Israel
Wedding in Israel ( REUTERS/AMIR COHEN )

இஸ்ரேல் மீது 2 நாளில் 450 ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மனிதத்தின் உதவியால் பல ஏவுகணைகளைத் தாண்டி மக்களின் ஒற்றுமை ஜெயித்துள்ளது.

பயங்கரவாதத்தின் மேலான பயத்தால் ரத்து செய்யப்படவிருந்த திருமணங்கள், பல நல்ல மனிதமனங்களின் உதவியால் வெகுவிமரிசையாக நடந்தேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இஸ்ரேலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான போரில் பாலஸ்தீனத்தின் இஸ்லாமியத் தலைவர் பஹாத் அபு அல் அடா கடந்த செவ்வாய்க்கிழமை காஸாவில் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலின் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை அனுப்பி வான்வெளித் தாக்குதலை நடத்திவருகிறது பாலஸ்தீனம்.

பஹா அபு அல்-அடா
பஹா அபு அல்-அடா
Twitter

வான்வெளித் தாக்குதலுக்கு அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கின்றனர் இஸ்ரேல் மக்கள். இதனால் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலின் தெற்குப்பகுதியில் தாக்குதல் நடக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வெளியே வர பயப்படுவதால் இந்நாள்களில் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் பலவும் தடைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அபு அல் அடா கொல்லப்பட்ட வீடு
அபு அல் அடா கொல்லப்பட்ட வீடு
Twitter

திங்கள்கிழமை காலை, இஸ்ரேலின் வானொலியில் மறுநாள் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஒரு பெண் தாங்கள் பதிவு செய்திருந்த ஹால் இருக்கும் இடத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் தாங்கள் கனவு கண்ட திருமணம் நடைபெறாது என்பதைச் சொல்லி உடைந்து அழுதிருக்கிறார்.

பலரின் மனதையும் உருக்கிய இவ்வானொலி உரையைக் கேட்ட வடக்குப் பகுதியில் உள்ள டெல் அவிவ் என்கிற திருமண ஹாலுக்குச் சொந்தக்காரர் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்பெண்ணுக்குத் தன்னால் உதவ முடியும் என்பதைக் கூறி அவரிடம் பேசியும் உள்ளார். திருமண ஹால் மட்டுமே மாற்றப்பட்டு அவர்களது திருமணம் திட்டமிட்டபடியே அதே நாளில் நடந்துள்ளது.

இதுமட்டுமன்றி செவ்வாய் மாலையில் திருமணம் செய்துகொள்ளவிருந்த யானிவ் மற்றும் மோரன் என்கிற ஜோடி தாங்களாகவே முன்வந்து தெற்குப் பகுதியில் பயங்கரவாத தாக்குதலின் காரணமாக நிற்கவிருந்த திருமண ஜோடிகளையெல்லாம் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். தங்கள் திருமணம் நடைபெறவிருக்கும் ஹாலிலையே செலவின்றி அவர்களது திருமணத்தையும் நடத்திக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.

ஏவுகணைகளைத் தோற்கடித்த மனிதம்! - நெகிழ வைக்கும் இஸ்ரேல் திருமணங்கள்

`சேனல் 12'க்குப் பேட்டியளித்த யானிவ், உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொள்வதில் சிக்கல் இருப்பதால் யாரும் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாமென்றும் தங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுமாறும் கூறியுள்ளார்.

மோரன் அளித்த பேட்டியில், ``எங்களுடன் சேர்ந்து பிற ஜோடிகளும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படுகிறோம். இந்தநாள் மறக்க முடியாததாக சந்தோஷம் நிறைந்த ஒரு நாளாக இருக்கும். தெற்குப்பகுதியிலிருந்து வரவிருக்கும் ஜோடிகள் வேரெதுவும் கொண்டுவரத் தேவையில்லை. குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு வந்தால் போதும்" என்றார்.

wedding - Representational image
wedding - Representational image
pixabay

இந்தத் திருமண ஹாலின் உரிமையாளர் எய்டன் சபீர், யானிவ் மற்றும் மோரனின் திருமணத்துடன் இணைந்துகொள்ள பல ஜோடிகளிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளார்.

``ஹால் பிரச்னையால் தன் வீட்டிலேயே திருமணம் செய்துகொள்ளவிருந்த நபர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். உறவினர்கள் வரமுடியாததால் திருமணத்தை நிறுத்தப்போவதாகக் கூறிய அவரிடம் பேசினோம். நாங்கள் இடம் தருகிறோம், இங்கே வந்து மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். தெற்கிலிருக்கும் மக்களுக்கு உதவ நாங்கள் தயார். திட்டமிடப்பட்ட அனைத்து திருமணங்களும் நடக்க நாங்கள் ஆசைப்படுகிறோம். எங்கள் மக்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை இந்த உலகுக்குச் சொல்ல விரும்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.

wedding - Representational image
wedding - Representational image
pixabay

திருமணங்கள் வெகுசந்தோஷமாக நடந்தேறிக்கொண்டிருக்க இஸ்ரேலின் பாப் பாடகர் நெட்டா பர்சிலாய் திடீர் விசிட் அடித்து அங்கிருந்த அனைவரும் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடச் செய்திருக்கிறார். ராக்கெட் தாக்குதலால் பயந்து போயிருந்த மக்கள் இசைமழையில் நனைந்து அந்த முழுநாளையும் உற்சாகமாய் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். இஸ்ரேல் மீது 2 நாளில் 450 ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மனிதத்தின் உதவியால் பல ஏவுகணைகளைத் தாண்டி மக்களின் ஒற்றுமை ஜெயித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு