Published:Updated:

இந்தியாவுக்கு புதிய வாசல்களைத் திறப்பாரா ஜோ பைடன்? - சவால்களும் எதிர்பார்ப்பும்

ஜோ பைடன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோ பைடன்

பொருளாதாரம் மீட்பது, வேலை இல்லாத் திண்டாட்டம் போக்குவது உள்ளிட்ட சவால்களை பைடன் சந்திக்க வேண்டும்!

``நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடனான உறவை மேம்படுத்து வதுடன், இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு தீவிரவாதத்தையும், சீனா போன்ற எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம். இரு நாடுகளுக்கான பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்போம்” - அதிபராவதற்கு முன்பாக, `இந்தியா-வெஸ்ட்’ என்னும் வார இதழில் ஜோ பைடன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை.

எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவுடனான நட்பு எப்படி இருக்கும் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி. இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பிற விஷயங்களில் அவர் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருந்த அதே சமயம், முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் இந்தியாவின் மீது வைத்திருக்கும் நட்பு போலியானது என்பதையும் கொஞ்சம் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் பைடன்.

வ. நாகப்பன்
வ. நாகப்பன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியா மீது அமெரிக்க அதிபர் வேட்பாளர் பைடன் இப்படிப் பாச மழை பொழிந்திருந்தாலும், வல்லரசு நாட்டின் அதிபர் சிம்மாசனத்தில் புதிய அதிபராக அமர்ந்திருக்கும் அவருக்கு அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்பது, வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது உள்ளிட்ட கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அமெரிக்காவில், கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியிருக்கிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படிப் பல சவாலான விஷயங்கள் அவர் கண்முன்னால் கொட்டிக் கிடக்கும்போது, இந்தியாவின் பக்கம் அவரின் பார்வை திரும்புமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்தியா-அமெரிக்கா பொருளாதாரக் கொள்கைகளில் பைடன் மாற்றத்தை உருவாக்குவாரா, H1B விசா விவகாரத்தில் அவரின் செயல்பாடு எப்படி இருக்கும், ஏற்றுமதி இறக்குமதி விவகாரத்தில் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்ற பல கேள்விகளுடன் பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் பேசினோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

``அமெரிக்காவில் 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையைத் தன் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் அப்போதைய அதிபர் ஒபாமா சமாளித்தார். அப்போது துணை அதிபர் என்ற வகையில், ஜோ பைடன் பெற்ற அனுபவம், தற்போதைய பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க கைகொடுக்கும். தன்னை அதிபராக்கிய அமெரிக்க மக்களுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லது செய்வதில்தான் அவருடைய முதல் கவனம் இருக்கும். பிறகுதான் மற்ற விஷயங்களைப் பற்றி அவர் யோசிப்பார் என நான் நினைக்கிறேன். அதேசமயம், இந்தியா - அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் அவருடைய செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

ஏனெனில், பராக் ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராவதற்கு முன்பே, பைடன் இந்தியாவுடன் ஒரு வலுவான உறவை ஆதரித்தார். உதாரணமாக, ``2020-ல் உலகில் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இந்தியா - அமெரிக்கா விளங்கும் என்ற கனவை நான் கொண்டுள்ளேன்” என்று 2006-ல் பைடன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு ஒபாமா ஆதரவு கொடுக்க தயங்கிய நிலையில், பைடன் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்தார். இப்படிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்திருக்கும் இந்த நேரத்தில், அதைத் தூக்கி நிறுத்தவே பைடனும் கமலா ஹாரிஸும் பாடுபடுவார்கள். வேலை இல்லாத் திண்டாட் டத்தைக் குறைப்பதிலும், கொரோனா பரவலைத் தடுப்பதிலும்தான் அவர்களுடைய முனைப்பு அதிகமாக இருக்கும். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, மற்ற விஷயங்களைக் கவனிக்க வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் உலக மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போன நிலையில், பைடனின் ஆட்சியில் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. H1B விசா நடைமுறையில், ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த சில அதிரடி முடிவுகள் இந்தியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தாராளமயமான குடியேற்றத்தை மதிப்பதால், அமெரிக்காவுக்குச் சென்று படிப்பதற்கும் வேலை செய்வதற்கும், அங்கு வாழ்வதற்கும், சிறந்த வாழ்க்கைக்காக ஆசைப்படுபவர்களுக்கும் பைடன் ஏதுவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்தை ஆதரிப்பதாகவும், நிரந்தர வேலை அடிப்படை யிலான குடியேற்றத்துக்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப் பதாகவும், உயர்திறன், சிறப்பு வேலைகளுக்கான தற்காலிக விசா முறையைச் சீர்திருத்துவதாகவும், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு வரம்புகளை நீக்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான இயல்பான நடைமுறையை மீட்டெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் விதிகளைக் கடுமையாக்கியதால், கடந்த நான்கு ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட சில அணுகுமுறைகளை பைடன் மாற்றி அமைப்பது மிகவும் எளிதானதல்ல” என்றார்.

ஆக, அமெரிக்காவின் நடவடிக்கை எதுவாக இருந்தாலும், அது உலக நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில் பல விஷயங்களில் பிரதிபலிக்கும். அதனால் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் ஆட்சிக் காலம் இந்தியாவுக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. நமது இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை இன்னும் சில காலம் பொறுத்திருந்து பார்ப்போம்!