Published:Updated:

இத்தாலி முதல் இந்தியா வரை.. குறையாத கொரோனா வீரியம்..! - `இன்று, நேற்று’ ஒப்பீடு

கொரோனா
கொரோனா

வீட்டிலே இருக்கும் மக்களின் பெரும் கேள்விகளில் ஒன்று, இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் நேற்றைவிட இன்று குறைந்திருக்கிறதா என்பதுதான்?

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்று ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில், குறிப்பாக வுகான் நகரத்தில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பெரும் பாதிப்புகளைச் சந்தித்த அந்த நகரத்தில் அடுத்த மாதம் 8 -ம் தேதி முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த அம்மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

அதேநேரத்தில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் எனப் பல உலக நாடுகள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் லாக்-டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள்களுக்கு மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

`21 நாள் ஊரடங்கு ஏன்?; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்!’ -  பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

வீட்டிலே இருக்கும் மக்களின் பெரும் கேள்விகளில் ஒன்று இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் நேற்றைவிட இன்று குறைந்திருக்கிறதா என்பதுதான்? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் `இல்லை’ என்பதே பதில். கொரோனா பரவல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கொரோனா
கொரோனா
AP

இத்தாலி!

சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நாடாக இருந்த இத்தாலி, பாதிப்புகளில் சீனாவை எப்போதோ முந்திவிட்டது. ஒட்டுமொத்தமாக இத்தாலியில் 69,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6,820.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 743. இதுவே இதற்கு முந்தையை 24 மணிநேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 601 ஆக இருந்தது. கொரோனா நோயாளிகளின் புதிய எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது அந்நாட்டை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

'Formula One' - அடுத்த 21 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி! #21dayslockdown

ஸ்பெயின்:

இத்தாலிக்கு அடுத்து கொரோனாவால் பாதிப்புகளைச் சந்திக்கும் நாடாக ஸ்பெயின் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 680 மரணங்கள். இதற்கு முந்தைய 24 மணிநேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 539 ஆக இருந்தது. ஸ்பெயினில் கொரோனாவால் நிகழ்ந்த மொத்த மரணம் என்பது 2,991 ஆக உள்ளது.

கொரோனா
கொரோனா
AP

அமெரிக்கா:

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களை ஒப்பிட்டால் இத்தாலி மற்றும் ஸ்பெயினைவிட குறைவுதான். ஆனால் அமெரிக்காவில் கொரோனாவின் பரவல் என்பது இந்த இரு நாடுகளையும் விஞ்சும் அளவில் இருக்கிறது. ஒட்டுமொத்த அமெரிக்காவில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்கள் 775. கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த மரணங்கள் மட்டும் 222. இதற்கு முந்தைய 24 மணிநேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 140. அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,074.

கடந்த 48 மணிநேரத்தில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 22,000 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலியில் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவிலே உள்ளது, அனைத்துத் தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ்:

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களில் இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாடு பிரான்ஸ். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 240 மரணங்கள். இதன் மூலம் கொரோனா காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை பிரான்ஸில் நேற்று ஆயிரத்தைக் கடந்தது.

கொரோனா
கொரோனா
AP

இந்தியா:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 -ஐ கடந்துள்ளது. இதில் 40 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 புதிய நபர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது அதற்கு முந்தைய 24 மணிநேரத்தை ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை குறைவு என்பது ஆறுதலான விஷயம். மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 21 நாள் ஊரடங்கு உத்தரவை மக்கள் தங்கள் நலனுக்காக எனப் புரிந்துகொண்டு செயல்படுவது மிக அவசியம்.

இத்தாலி முதல் இந்தியா வரை.. குறையாத கொரோனா வீரியம்..! -  `இன்று, நேற்று’ ஒப்பீடு
AP

மோடி நாட்டு மக்களிடம் பேசும்போது ஒன்றைச் சொன்னார்.... ``அடுத்த 21 நாள்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான நாள்கள். இந்த 21 நாள்கள் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், நாம் 21 வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டி இருக்கும்..”

அடுத்த கட்டுரைக்கு