Published:Updated:

மிஸ் பண்ணக்கூடாத 10 புகைப்படங்களும்... அதன் பின்னணியும்! #WorldPhotographyDay

விகடன் விமர்சனக்குழு
மிஸ் பண்ணக்கூடாத 10 புகைப்படங்களும்... அதன் பின்னணியும்! #WorldPhotographyDay
மிஸ் பண்ணக்கூடாத 10 புகைப்படங்களும்... அதன் பின்னணியும்! #WorldPhotographyDay

ற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனித இனத்தின் ஒப்பற்ற தனித்தன்மைகளுள் ஒன்று தன் வரலாற்றைப் பதிவு செய்யும் குணம். ஆதி மனிதன் குகை ஓவியங்கள் வழி தன் வரலாற்றைப் பதிவு செய்த காலம் முதல் தற்கால மனிதன் செல்ஃபி எடுத்துத் தன் நினைவுகளைப் பாதுகாத்து வைக்கும்வரை அதன் வரலாற்றின் வழி நீளமானது. அதில், மிக முக்கியமானது புகைப்படங்கள். இன்றைய நவீன உலகில் புகைப்படங்களோடு தொடர்பில்லாத மனிதன் என்று யாரையும் சொல்லிவிட முடியாது. உலகில் ஒவ்வொரு நொடியும் யார் மூலமாகவோ, எங்கோ, எப்படியோ, ஏதோ ஒரு வகையில், யாரோ ஒருவரது புகைப்படக் கருவிக்குள் பத்திரமாகச் சேமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதி வைக்கக்கூடிய வரலாற்றைக்கூட ஒரு புகைப்படத்தில் பதிவு செய்துவிட முடியும்.

நம் வாழ்வில் மிக முக்கிய இடம்பிடித்துவிட்ட இந்தப் புகைப்படக் கருவிகளின் தோற்றமும், வளர்ச்சியும் அபரிவிதமானது. 13-ம் நூற்றாண்டில் இருந்து புகைப்படக் கருவிகளின் வரலாறு தொடங்கினாலும் அது உச்சம் பெற்றது 1800-களில்தான். அப்போதுதான், ‘போட்டோகிராபி’ என்ற பெயரே சூட்டப்பட்டது. கிரேக்க மொழியில் அதன் அர்த்தம் என்ன தெரியுமா? ‘ஒளியின் எழுத்து!’

'நல்ல புகைப்படம் என்பது ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் போன்றது. அதை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிறப்பானது எனக் கொள்ள முடியாது' - எது சிறந்த புகைப்படம் என்கிற கேள்விக்கு சொல்லப்படுகிற ஓர் ஆங்கிலப் பழமொழி. புகைப்படங்களின் வழியே கடந்தகால அரசியல் நிகழ்வுகள், வரலாறு, போர் மற்றும் புரட்சி, அவை ஏற்படுத்திய அழிவுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எனப் பலவற்றை வரலாற்றுப் புகைப்படங்களாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்றுவரை மனித இனத்தினுடைய கடந்தகால வரலாறாக, அவலமாக, மகிழ்ச்சியாக அவை ஏதோ ஒரு வகையில்  நிழல் சாட்சிகளாக இருந்துவருகிறது.

அந்த வகையில் உலகின் முக்கியமான 10 படங்கள் இதோ...

ஹிரோஷிமா நாகசாகி குண்டுவெடிப்பு :

இன்றுவரை உலகையே நடுங்கவைக்கும் ஒரு பேரழிவாகச் சொல்லப்படுவது ஹிரோஷிமா - நாகசாகி குண்டுவெடிப்பு.  அமெரிக்க விமானப் படையால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இன்றுவரை ஓர் அழிவின் சாட்சியாக இருக்கிறது. 1945 ஆகஸ்ட்6-ம் மற்றும் 9-ம் தேதிகளில் போடப்பட்ட இந்தக் குண்டுகளினால் உடல் கருகி  சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இறந்திருப்பார்கள். அதுபோக தீக்காயங்கள், கதிர்வீச்சு, உணவுப் பற்றாக்குறை என வருடக்கணக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். அதன் பாதிப்புகளைப் புகைப்படங்களாகப் பதிவுசெய்தவர்கள் யோஷிட்டோ மட்சுஷிக்,யோசுக்கே யமஹாட்டா ஆகிய இரண்டு கலைஞர்கள். நேரடியாக இந்தக் குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டபோதிலும் அதை ஏன் பதிவுசெய்தார்கள் என்பதற்கு யமஹாட்டா சொன்ன காரணம் என்ன தெரியுமா?

"மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக் கூடியது. அதேபோல அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும் காலத்துக்குத் தகுந்ததுபோல மாறிக்கொண்டே வரும். ஆனால், கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும். இப்போது நாம் ஹிரோஷிமா, நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடுகள் இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலமாக அந்தக் கொடூரங்களையும் கோரங்களையும் பார்க்கமுடியும்."  எத்தனை உண்மை வார்த்தைகள் இவை. இன்றுவரை உலகில் இருக்கும் மனிதர்களுக்கு அணு விபத்தின் கோரத்தை முன்வைக்கும் சாட்சிகளாக இவை இருக்கின்றன.

ஆப்பிரிகாவின் விரக்தி :

வறண்ட தேசம் என்று உங்களைக் கற்பனை செய்யச்சொன்னால் எல்லோர் மனதிலும் வரும் சித்திரம் கண்டிப்பாக ஆப்பிரிக்காவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அதன் பாதிப்பு நமக்குள் இருக்கும். 1993-ம் ஆண்டு, 'நியூயார்க் டைம்ஸ்' இதழில் வெளியான இந்தப் புகைப்படத்தின் தாக்கம்தான் அது. அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் பேராசையால் வளங்கள் சுரண்டப்பட்டு, போரால் நிர்க்கதியாக ஆக்கப்பட்ட ஆப்பிரிக்கா, சோமாலியா, கென்யா, சூடான் போன்ற நாடுகளில் மக்கள் பஞ்சத்தால் வாடும் நிலையைக் காட்டியது இந்தப் புகைப்படம். தன்னை இரையாக்க வரும் கழுகினைக்கூட விரட்ட முடியாமல் சுருண்டு விழுந்துக் கிடக்கும் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து இந்த உலகமே கொதித்து எழுந்தது. அதை எடுத்த புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டருக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அவரும் இந்தப் புகைப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.

நிலவின் முதல் காலடி :

இன்று விஞ்ஞான உலகின் எல்லா நாடுகளும் பல எல்லைகளை எட்டி இருந்தாலும், மனித இனத்தின் மைல்கல்லாகப் பார்க்கப்படுவது நிலவின் மனிதன் வைத்த முதல் காலடி. 1969-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் அமெரிக்காவின் மதிப்பைக் கூட்டியது. நிலவில் மனிதனின் சிறிய காலடியாக இருந்தாலும், பூமியில் அது மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாகக் கொண்டாடப்பட்டது.

கறுப்பின வெறியை தகர்த்த நெகிழ்ச்சி :

நிறவெறி கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டமான 1970-களில் வெளியான இந்தப் புகைப்படம் அன்று மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பிரேசிலின் பீலேவும், இங்கிலாந்து கேப்டன் பாபி மூரும் பரஸ்பரம் கட்டிப்பிடித்து தங்களது மேலாடையை மாற்றிக் கொண்டனர். அந்தப் புகைப்படம் உலக அரங்கில் கறுப்பின வெறிக்கெதிரான ஒரு முக்கியப் புள்ளியாக அமைந்தது.

போரை நிறுத்துங்கள் :

1967-ல் அமெரிக்க - வியட்நாமுக்கு எதிராகப் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அமெரிக்காவில், மக்கள் போரை நிறுத்தச் சொல்லி போராடிக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு போராட்டத்தில் பெண்டகன் சதுக்கத்துக்கு முன்  நின்றிருந்த வீரர்களைப் பார்த்து ஒரு பெண்மணி, பூ ஒன்றை நீட்டினார். அது, சமாதானத்துக்கான தூதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிஞ்சு முகத்தில் பயம் :

பிஞ்சு முகத்தில் பயம்... அழுகை வெடிக்கும் நிலை... கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. இந்தக் காட்சியைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டுப் பழகிய இந்தக் குழந்தை, படம்பிடிக்க கேமராவைச் சரிசெய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சி இது. சிரியாவின் துயரத்தை விளக்க இந்த ஒரு படம் போதும்.

மாவீரனின் மரணம் :

சேகுவாரா என்ற மனிதர் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் ''எல்லா நாடும் என் தாய்நாடே. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே '' என்ற சேகுவாராவின்  மனிதகுணம்தான். அக்டோபர் 9-ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர், உலக நாளேடுகள் யாவும் தவறாமல் சேகுவாராவின் மரணப் படத்தையே தம் முகப்பில்வைத்து அஞ்சலி செலுத்தியது. இன்றுவரை லட்சக்கணக்கான மக்களின் ஆதர்சமாக விளங்கும் சேகுவாராவின் கடைசிப் படம் இது.

அமெரிக்காவின் அதிர்ச்சி :

உலகையே தன்னுடைய அசுரபலத்தால் மிரட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவை மிரட்சியடைய வைத்த சம்பவம். 2001 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுர தகர்ப்பு. அமெரிக்காவின் உட்சபட்ச பாதுகாப்பு, ராணுவம், உளவுத்துறை என எல்லாவற்றுக்கும் தண்ணி காட்டிவிட்டு நடத்தப்பட்ட சம்பவம்தான் தீவிரவாதத்தின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. அல்கொய்தாவின் இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான் பின்லேடனைத் தேடிக் கொன்றதோடு இல்லாமல், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மீது தன் கோரமான கரங்களைவைத்தது அமெரிக்கா.

உசேன் போல்டின் பெருமித சிரிப்பு :

சமீபத்தில் உலகை மிகவும் ரசிக்கவைத்த புகைப்படம் இது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் நடந்த 100 மீ., ஓட்டப்போட்டியை உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் வெடித்து ஓடிய வீரர்களை மின்னல் வேகத்தில் முந்திய உசேன் போல்ட், தன் பின்னால் ஓடி வருகிற வீரர்களைப் பார்த்து சிரித்த சிரிப்பு இது. அதுதான் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. மின்னலைவிட வேகத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வை புகைப்படமாக்கியவர் கேமரூன் ஸ்பென்ஸர்.

சிரியாவுக்காக உலகம் அழுதது :

அதிகாரத்தைக் கைப்பற்ற சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் சொந்த நாட்டு மக்களே அகதிகளாகி வருகின்றனர். எப்படியாவது எஞ்சிய வாழ்நாட்களைக் கழித்துவிட வேண்டும் என்பதற்காக அண்டை நாடான துருக்கி வழியே பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று வருகிறார்கள். அப்படி ஒரு நாளில் எப்படியாவது தப்பித்துப்போய் வாழ்ந்துவிட வேண்டும் என்று எண்ணித் தப்பித்த ஒரு தந்தையின் கையில் இருந்து தவறி, படகில் இருந்து கடலில் விழுந்த குழந்தைதான் அய்லான் குர்டி. கடற்கரையில் பிணமாக அந்த மூன்று வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்ட புகைப்படம், ஒட்டுமொத்த அகதிகளின் நிர்கதியான வாழ்க்கையின் சாட்சியாக இருந்தது. உலக மக்கள் பலரின் மனச்சாட்சியை உலுக்கிய புகைப்படமாக அது அமைந்தது.

- மா.அ.மோகன் பிரபாகரன்