வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (18/07/2015)

கடைசி தொடர்பு:13:12 (19/07/2015)

'ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டுக்கு காரணம் கண்ணகி!'

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர்களில் ஒருவர், மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

'மதுரையின் கிழக்கு வாயில் வழியே கணவனுடன் நுழைந்த நான், இப்போது அநாதையாக மேற்குத் திசை வழியே செல்கிறேன்' (கீழ்த்திசை வாயில் கணவனோடு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கின்றேன்) என்று புலம்பிவிட்டுக் கண்ணகி புறப்படுவதையும், கரடுமுரடான பாதையில் மேற்குத்திசை நோக்கி நடந்து,  நெடுவேள் குன்றம் ஏறி, மலர்ந்த ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நிற்பதையும், பதினான்காம் நாளன்று வான ஊர்தியில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களோடு, கோவலனும் வந்து கண்ணகியைப் பணிந்து உடன் அழைத்துச் செல்வதையும் எடுத்துரைக்கிறது சிலம்பு.

அப்படி கண்ணகி மலைமேல் ஏறி, வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் இந்நூற்றாண்டில் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவர் சி.கோவிந்தராசனார்.

தர்ம சத்தியநெறி மிகுந்த ஒரு பத்தினியின் வாழ்வு என்பதால், அது அழியாக் காவியமாக, இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்னும் சிலிர்க்க வைக்கிறது. அதுமட்டுமல்ல; கண்ணகி சிலம்பைப் பாண்டியச்சபையில் ஓங்கி அடித்தபோது சிதறிய மணிகள் அங்குமட்டுமல்ல, தமிழ் மண் எங்கும் விதையாக விழுந்து விழுதாக இன்றும் எழுந்து நிற்கிறது. தமிழ் மண்ணில் கண்ணகிக்கெனத் தனிக்கோயில் பிரபலமாக இல்லை என்றாலும், அவளே பல்வேறு பழைமையான ஆலயங்களிலும், அம்மன் வடிவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.

தமிழ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்: கண்ணகியின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தது எல்லாம் ஆடி மாதத்து வெள்ளிக்கிழமைகளில்தான் என்று. (தமிழறிஞர் மு.வரதரசனார்)

அவள் மதுரையை எரித்ததும் ஓர் ஆடி வெள்ளியில்தான். கி.மு. சுப்ரமணியம் பிள்ளை கணிப்பின்படி கி.பி. 144ஆம் ஆண்டு ஆடிமாத 17ஆம் நாள், தேய்பிறை வெள்ளிக்கிழமையன்று மதுரையை எரித்த கண்ணகி, பதினான்கு நாட்கள் நடந்து வந்து சேர்ந்த இடமே இந்த மங்கலதேவிக் கோட்டம் ஆகும். அதனாலே பிற்காலத்தில் அம்மன் கோயில்கள், ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் முக்கியத்துவம் பெற்றன. வெவ்வேறு பெயர்களில் எழுப்பப்பட்டுள்ள அம்மன் கோயில் பலவும் கண்ணகியின் அமைதி வடிவத்தின் அடையாளமாகவே அமைக்கப்பட்டன.

அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நடைபெறும் விழாக்களில் சிலம்பு ஒரு இசைக்கருவியாக சேர்க்கப்பட்டது. சிலம்பு வழிபாட்டிலும் இடம்பெற்றுள்ளது. கண்ணகி அணிந்த கால் சிலம்பு பொன்னால் ஆனது என்பதால் தமிழ்மரபுப் பெண்கள் இன்றளவும் காலில் பொன்னால் ஆன சிலம்பு, தண்டை, கொலுசு அணிவதில்லை. தமிழர்கள் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. இன்றளவும் தவிர்த்தே வருகின்றனர்.  அதுமட்டுமல்லாது ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படும் மரபு தோன்றியதற்குக் காரணம், குழந்தை சித்திரை வெயிலில் பிறக்கும் எனக் கூறப்பட்டாலும், கண்ணகி கணவனை இழந்த மாதம் என்பதே பிரதான காரணம். கண்ணகித் தாய் துயரமுற்றுயிருந்த மாதத்தில் புதுமணத் தம்பதியர்கள் மகிழ்ந்து குலாவ வேண்டாம் என கருதினர், தமிழர்கள்.

கண்ணகி கோபத்தால் பொங்கி எழுந்தது இயற்கை. பற்றிய தீயை நாலாப்பக்கமும் எடுத்து வீசியது காற்று. அதுதான் இன்றளவும் ஆடி மாதம் வந்தால், காற்று ஆவேசம் கொள்கிறதோ?
ஆடிக் காத்துல அம்மியும் அசையும் என்பார்களே...! அது நினைவில் வந்து போகிறது.

கண்ணகி இட்ட சாபத்தை நிறைவேற்ற வந்த தேவதை, கண்ணகியிடம் தீயில் யாரெல்லாம் மாண்டு போக வேண்டும்? யாரெல்லாம் தப்பிக்க வேண்டும்? என உத்தரவு கேட்டதாம். அப்போது அவள், ‘தீயவரை விடாதே’ எனக் கண்டிப்பு காட்டிவிட்டு, நல்லோரை விட்டுவிடுமாறு கூறுகிறாள். மதுரை எரிகிறது; அங்கிருந்த நல்ல சக்திகள் வெளியேறுகின்றன.

நிலைமை மோசமாவதை அறிந்த மதுரை மண்ணின் காவல் தெய்வமான மதுராபதி, கையைப்பிசைந்தபடி வந்து கண்ணகி முன் தோன்றி,  கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவனது முற்பிறவி வினையே எனக்கூறி, பாதி எரிந்த மதுரையில் மிச்சத்தைக் காப்பாற்றுகிறாள்.

இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாகவே திரௌபதி அம்மன் ஆலய திருவிழாக்களில் தீக்குழியைக் கடந்து செல்லுதல் (தீமிதித் திருவிழா) ஒரு சடங்காக உருவானது என தமிழ் ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

-யாணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்