வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (03/03/2017)

கடைசி தொடர்பு:15:22 (03/03/2017)

‘சட்டமன்றத்தை இளைஞர்கள் கைப்பற்ற வேண்டும்!’ - எழுத்தாளர் தமயந்தி

தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. இயக்கம் முதல் ஒளிப்பதிவு வரை சகல துறைகளிலும் பெண்கள் களமிறங்கி கலக்குகிறார்கள். அப்படியான பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் எழுத்தாளர் தமயந்தி. தெற்கத்தி மண்ணின் ஈர வாசனையோடு எழுதும் தமயந்தி பாடலாசிரியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்து உரையாடினேன். 

எழுத்தாளர் தமயந்தி

 

"சிறுவயது முதலே தனிமையிலும் மனநெருக்கடியிலும் வாழ்ந்தவள் நான். அப்போதெல்லாம் இசை மட்டுமே எனக்குத் துணையாக இருந்தது. என் தனிமையை பாடல்கள் இனிமையாக மாற்றின. இலங்கை வானொலியில் ஒலிப்பரப்படும் பாடல்கள்தான் எனக்கு ஆறுதல். அந்த நேரத்தில் இசை என்பது, எனக்கு இன்னொரு உலகமாகிப்போனது. இப்போதுவரை அந்த உலகம் அப்படித்தான் இருக்கிறது. என்னையும் அறியாமல், என் பேச்சில் பாடல்களும் இசையுமே நிறைந்திருக்கின்றன.."- கவிதை போலவே பேசுகிறார் தமயந்தி.  

பாடல் உங்களுக்குப் பிடிக்கும்... சரி, உங்களுக்குள் இருந்த பாடலாசிரியரை அடையாளம் காட்டியது யார்? 

"ம.வே.சிவகுமார் என்ற எழுத்தாளரோடு பாடல்கள் பற்றி நிறையப் பேசுவேன். 'நீங்க இந்த அளவுக்குப் பாடல்களைப் பத்தி பேசுறீங்க... ஏன் பாடல் எழுதக்கூடாது..."ன்னு அவர் தான் கேட்டார். அப்போதெல்லாம் என் குடும்பச்சூழல் காரணமாக, சினிமாவுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் பாடல்கள் எழுதப் பயிற்சி எடுத்துக்கொண்டே இருந்தேன். இப்போதுதான் கதவு திறந்திருக்கிறது. 

சினிமா பெண்களுக்கு உகந்த களமாக இருக்கிறதா? விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

எழுத்துக்காக அதிகம் விமர்சிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி. பல நேரங்களில் விமர்சனங்கள் எழுத்தைக் கடந்தும் நீள்வதுண்டு. தொடக்கத்தில் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். போகப்போக பழகி விட்டது. என்னுடைய வாழ்க்கையை என்னைத் தவிர யாரும் வாழப்போவதில்லை. எப்படி வாழ்ந்தாலும், ஏதோ ஒரு வகையில் விமர்சனங்களை நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதனால் எனக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே விரும்புகிறேன். ஆரம்பத்தில் எப்படி வாய்ப்பு கேட்பது என்ற தயக்கமும், அதனைத் தொடர்ந்து சில போராட்டங்களையும் சந்தித்தது உண்டு. இப்போதெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. 

திரைப்படத்தில் உங்கள் முதல் பங்களிப்பு எது? முதல் பாடல் எது? 

"என்னை முதன் முதலில் நம்பி வாய்ப்பளித்த இயக்குநர் மீரா கதிரவன். அவர் இயக்கிய 'விழித்திரு' படத்தில் அவரோடு இணைந்து வசனங்களை எழுதினேன். அதே படத்தில்தான், என்னுடைய முதல் பாடலும் வந்தது. அது ஒரு பெண்ணுடைய உணர்ச்சி சார்ந்த பாடல். ஜி.வி.பிரகாஷ், என்.எஸ்.கே.ரம்யா சேர்ந்து பாடினார்கள். பெண்ணின் காமம் என்பது இதுவரையில், ஆணின் பார்வையில்தான் பார்க்கப்பட்டிருக்கிறது. பெண்ணின் பார்வையில் பெண்ணின் உணர்ச்சிகளை எதிர்கொள்கிற பாடல் அது. என்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்துக் குட்டி ரேவதி இயக்க உள்ள திரைப்படத்தை, நான் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். பெற்றோர்கள் தங்கள் மகளின் தேர்வுகளை நிறைவேற்றாமல் போகும் போதான உறைந்தநிலை மௌனங்களை அழகாகச் செதுக்கியிருக்கிறோம். இது இசை சார்ந்த படம். ஆனால், மெளனங்களை மொழிபெயர்க்க வேண்டுமென்பதால் பாடல்களை எழுதும் போதான சவால் அதிகமிருக்கும்.

எழுத்தாளர் தமயந்தி

 

தொடக்கத்தி்ல் ஆர்.ஜே.வாக இருந்திருக்கிறீர்கள். இப்போது எழுத்தாளர், பாடலாசிரியர், வசனகர்த்தா என பல முகங்கள்... அடுத்து?

இதுவரை 11 பாடல்கள் எழுதிவிட்டேன். தாஜ்நூர், ஸ்ரீகாந்த் தேவா, அச்சு, சத்யா, ஜஸ்டின் பிரபாகரன் என பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். சமீபத்தில் எங்க அப்பா இறந்து, இரண்டாவது நாள் கரிச்சான் குருவிங்கிற படத்துக்காக 'நான் சாமி புள்ள, நாதியில்ல, உறவு சொல்ல யாரும் இல்ல'-ங்கிற பாடலை  இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் எழுதினேன். அது, உண்மையாகவே தகப்பனை இழந்த மகளுக்களுக்கான பாடலாக இருக்குமென நினைக்கிறேன். அந்தப் பாட்டைக் கேட்டு சவுண்ட் மிக்ஸ் செய்தவர், தன் அப்பாவை நினைத்து அழுததாய் சொன்னார்.

இப்படி என் ஒவ்வொரு பாடலும், எனக்கு மன நிறைவைத் தருகிறது. ஒவ்வொரு பாடல் எழுதி முடிக்கும்போதும், இன்று புதியதாய் பிறந்தது போல் உணர்வேன். இசைக்கேற்றபடி எழுதுவது என்பது நம்மைநாமே திரும்பதிரும்பப் புதுப்பித்துக்கொள்வது போன்ற ஒரு உணர்வு. இதைதான் நான் சிறுவயதிலேயே உணர்ந்தேன். அதன்படி, இப்போது வாழ்க்கையாக மாற்றிக்கொண்டுள்ளேன். இன்னும் இதில் நான் பயணப்பட வேண்டிய தூரம் அதிகம். இனி நான் தினமும் புதிதாய் பிறக்க ஆசைப்படுகிறேன்.

ரேடியோவில் ஆர்.ஜே-வாக இருந்தது அவ்வளவு அற்புதமான தருணம். என்னைச் சுற்றி இசை. இசைக்கு மத்தியில் நான், நான் மட்டும்தான். இப்படித்தான் 11-ஆண்டுகள் கடந்தது. வெளியில் அவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டாலும், ஆர்.ஜே. இருக்கையில் அமர்ந்ததும் இசையுடன் வாழத் தொடங்கிவிடுவேன். இப்போது நினைத்தாலும், ஒரு கனவைப்போல இருக்கிறது அந்த வாழ்வு. பெண் எழுதுவதை இங்கே பலர் தவறாக நினைக்கிறார்கள். அல்லது சித்தரிக்கிறார்கள். ஒரு பெண் எழுதுவது என்பது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. என்னுடைய ஒட்டுமொத்த எழுத்திலும், பெண்களின் உலகத்தில் நிகழும் அத்தனை வலிகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். நானும், என்னுடைய எழுத்தும் வேறல்ல. என்னுடைய வாழ்க்கையில் நடந்தவை, என்னுடைய தோழிகளின் வாழ்வில் அரங்கேறியவைதான் என் எழுத்தில் பிரதிபலிக்கிறேன். அடுத்த நான் வெளியிடப்போகும் ''கொன்றோம் அரசியை'' சிறுகதைத் தொகுப்பில் கூட, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தை முன்வைத்து ஒரு கதை இருக்கிறது. 

சமீபத்திய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"நம் கடந்த காலங்களில் பிம்பங்களுக்கு ஆட்பட்டே வாழ்ந்து விட்டோம். நம் சமூகத்தில் துடிப்பான பல லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அரசியலில் நாம் வெறும் பார்வையாளர்களாகத்தான் இருக்கிறோம். வெறும் மீம்ஸ் போடக்கூடிய நபராகத்தான் இருக்கிறோம். ஆனால், சட்டசபையைக் கைப்பற்றிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கும்பல், ஜனநாயகத்தை சாகடித்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தை இந்த இளைஞர் பட்டாளம் கைப்பற்ற வேண்டும். முக்கியமாக இன்று எல்லா இடங்களிலும், சாதி இருக்கிறது. அது ஒழிய வேண்டும். சாதிக்கு எதிராகவும், தமிழக அரசியல் சூழல் குறித்தும், மீண்டும் இளைஞர்கள் திரண்டு எழ வேண்டும்."

- ரா.அருள் வளன் அரசு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்