வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (06/04/2017)

கடைசி தொடர்பு:12:20 (20/06/2018)

"நம்மாழ்வாரின் புத்தகங்கள்தான் எனக்கு வழிகாட்டி!" சிலிர்க்கும் கரூர் விவசாயி

 விவசாயி பிரபு

பசுமைப்புரட்சி பரவிய காலகட்டத்தில் அதற்கு மாற்றாக இயற்கை, பாரம்பர்ய விவசாயம் சார்ந்த பணிகளில் தனது பயணத்தைத் தொடங்கியவர், நம்மாழ்வார். பசுமைப்புரட்சி என்ற பெயரில் அரசாங்கமே மானிய விலையில் ரசாயன உரங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம். தனி ஒருவனாக இயற்கை விவசாய பயணத்தை துவக்கினார். நம்மாழ்வார் நேரடியாக விவசாயிகளைச் சந்தித்து ரசாயன உரங்களின் தீமைகள் பற்றியும், இயற்கை விவசாயத்தின் நன்மை பற்றியும் தெளிவாக விளக்கினார். இதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டவர்கள் நம்மாழ்வாரைப் பின் தொடரத் தொடங்கினர். செம்மை நெல் சாகுபடி தமிழருக்கே சொந்தம், மரபணுமாற்று கத்தரிக்குத் தடை மற்றும் மீத்தேன் எதிர்ப்பு எனப்பல வழிகளிலும் விவசாயிகளுக்காகப் பாடுபட்டவர். கடைசி வரை எதற்காகவும் தனது கொள்கைகளில் இருந்து மாறாதவர். இயற்கை விவசாயத்துக்காக 2009-ம் ஆண்டு ஜூன் மாதம், கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சியில் உள்ள சுருமான்பட்டியில் 'வானகம்' என்ற இயற்கை பண்ணையை தொடங்கினார். நம்மாழ்வார். வானகத்தில் பயிற்சி பெற்று, இன்று இயற்கை விவசாயம் செய்யும் பலர் நம்மாழ்வாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள்தான். நம்மாழ்வாரின் புத்தகங்கள் அவரது கொள்கையை அதிகமாக விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்த்தது. அப்படி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர்கள் பலர். அதில் ஒருவரை  சந்தித்தோம்.

ஸ்பிரிங்ளர் பாசனத்தில் விவசாயம்

கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த பிரபு தர்மலிங்கம். நம்மாழ்வாரின் கொள்கைகளின் வழியில் தான் செய்துவரும் இயற்கை விவசாய முறைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நான் டீச்சர் டிரெயினிங் முடிச்சிருக்கேன். எனக்கு வயசு 29 ஆகுதுங்க. பரம்பரையா எங்க குடும்பமே விவசாயம்தான் செய்துகிட்டு வர்றோம். அப்பா காலத்துல இருந்தே ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செய்துட்டு இருந்தோம். 2012-ம் வருஷம் எங்க மாவட்டத்துல அதிகமா வறட்சி ஏற்பட்டுச்சு. அந்த வருஷம் தண்ணியில்லாம விவசாயம் பண்ண முடியலை. அப்போதான் இயற்கை விவசாயத்தை பத்தி எனக்கு தெரிய ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி எனக்கு இயற்கை விவசாயத்தை பத்தி தெரியாது. எங்க ஊருக்கும் நம்மாழ்வார் ஐயாவோட பண்ணைக்கும் 55 கி.மீ தான் இருக்கும். ஒருமுறை சென்னையில இருக்குற நல்லகீரை சார்புல கரூர்ல கூட்டம் நடத்துனாங்க. அவங்க நடத்துன கூட்டத்துல கலந்துகிட்ட பின்னாடிதான் எனக்கு நம்மாழ்வார் ஐயாவை பத்தின செய்தி கிடைச்சது. அதுக்கபுறமா வானகத்துக்கு போகும்போது நம்மாழ்வார் ஐயாவை பார்க்க முடியாம போயிடுச்சு. அவர் எழுதின புத்தகங்கள் எனக்கு கிடைச்சது. அவரோட புத்தகம் எனக்கு இயற்கை விவசாயம் பத்தின புரிதலை கத்துக்கொடுத்தது. அதுல எந்நாடுடைய இயற்கையே போற்றிங்குற புத்தகம்தான் என்னை அதிகமா பாதிச்சது. முழுசா இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வந்தது நம்மாழ்வாரோட புத்தகங்களும், அதுல இருந்த அவரோட கொள்கைகளும்தான். அப்புறமா நான் ஒரு பசுமை விகடன் வாசகனும் கூட. அப்படியே கத்துக்கிட்டுத்தான் இயற்கை விவசாயத்துக்கு வந்தேன்" என்றவர், தொடர்ந்தார்.

கீரைத் தோட்டத்தில்

"என் நிலத்தில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் சென்னையில் ஒன்றரை வருஷமா நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயம் செய்தேன். அப்போ இயற்கையில விளைஞ்ச காய்கறிகளை சென்னையில இருக்குற அனந்து சார்கிட்ட விற்பனை செய்தேன். எல்லா அறிமுகங்களுக்கும் பின்னால நம்ம ஊர்லயே இயற்கை விவசாயம் செய்யலாமேனு தோணுச்சு. இது எல்லாத்துக்குமே காரணம் நம்மாழ்வார் ஐயாதான். அவர சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் யுடியூப், புத்தகங்கள்னு அதிகமா பார்த்து படிச்சு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறமா 2014-ம் வருஷம் மறுபடியும் சொந்த ஊர்ல விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன். அப்போ ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் இயற்கை விவசாயம்தான். என் நிலத்தில் விளையுற காய்கறிகள்தான் சென்னைக்கு கொடுத்து விற்பனை செய்கிறேன். கீரை வகைகளில் இதுவரைக்கும் 20 கீரை வகைகள் பயிர் செய்திருக்கிறேன். 15-க்கும் மேற்பட்ட காய்கறிகளை பயிரிட்டிருக்கேன்.

தோட்டத்தில் பிரபு தர்மலிங்கம்

மொத்தமா ஒரு காய்கறியை பயிர் செய்யாமல் செண்ட் செண்டா பிரிச்சு வித விதமான காய்கறிப் பயிர்களையும், கீரைகளையும் பயிர் செய்யணும்ங்குறதுதான் நான் இங்க கத்துகிட்ட முக்கியமான விஷயம். இயற்கையில் விளையிற பொருட்கள் விற்பனை செய்யும்போது, கொஞ்சமாவும் விதவிதமான காய்கறிகளாவும் கேக்குறாங்க. அதுக்கு ஏற்ற மாதிரி கொஞ்சமா நிலம் இருப்பதால், குறைஞ்ச பரப்புல அதிகப்படியான காய்கறிகளை விளைய வச்சு விற்பனை செய்யுறேன். நம்மாழ்வார் சொன்ன "இயற்கை விவசாயம்ங்குறது நம்மோட நிலத்துல மட்டும் இயற்கை இருந்தா பத்தாது. நம்ம நிலத்தை சுத்தியும் இயற்கையான சூழல் இருக்கணும். அப்போதான் முழுமையான இயற்கை விவசாயம் சாத்தியம்"ங்குற வார்த்தையை இன்னமும் கடைபிடிக்கிறேன்.

கீரைத்தோட்டத்தில்

அமிர்தக்கரைசல், பூச்சி விரட்டினு நம்மாழ்வார் சொன்ன இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்துறேன். மார்கெட்ல நேரடியா விற்பனை செஞ்சா நல்ல லாபம் கிடைக்குது. வியாபாரிகள்கிட்ட விற்பனை செஞ்சா வருமானம் கொஞ்சம் குறைவா கிடைக்கும். நான் மட்டுமல்ல, என்ன மாதிரி நம்மாழ்வார் ஐயாவோட கொள்கைகளை பிடிச்சுகிட்டு இங்க அதிகமான விவசாயிகள் இருக்காங்க. நம்மாழ்வார் இயற்கை விவசாயியா மட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் ஆர்வலராவும் இருந்திருக்கார். அவர் ரசாயனத்துக்குதான் எதிரியே தவிர, தொழில்நுட்பங்களுக்கு எதிரி கிடையாது. அவரோட புத்தகங்களிலேயும் இதை தெளிவா சொல்லியிருப்பார். "இயற்கை விவசாயம் செய்யணும்னா கண்டிப்பா ஒரு மாட்டையாவது அந்த விவசாயி வச்சிருக்கணும்"னு அடிக்கடி சொல்லுவதாக வானகத்து நண்பர்கள் சொல்லும்போது கேட்டிருக்கேன். இதையெல்லாம் நான் நம்மாழ்வார் ஐயாவின் புத்தகங்களை பார்த்து படிச்சு தெரிஞ்சுகிட்டது மட்டும்தான். அவருக்கு பின்னாடியும், அவரோட கொள்கைகள் என்னைக்குமே நிலைச்சு நிற்கும். முழுமையான திருப்தியே இயற்கை விவசாயம்தான்னு இப்போ தோணுது" என்றார்.

- துரை.நாகராஜன்.

படங்கள்: தே. தீட்ஷித்.


டிரெண்டிங் @ விகடன்