Published:Updated:

`ஆபரேஷன் அலமேலம்மா' படத்தைப் பார்த்து விபரீதத்தில் ஈடுபட்ட சிறுவன்... `ஷாக்' ஆன பெற்றோர்!

கடத்தல்
கடத்தல்

இந்தத் தகவலை தீபக்கின் தந்தை போலீஸாரிடம் தெரிவிக்க, போலீஸ் உடனடியாகத் திருப்பதிக்கு விரைந்தது. அங்கே, போலீஸுக்கும் தீபக்கின் பெற்றோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

`ஆபரேஷன் அலமேலம்மா' எனும் கன்னட திரைப்படத்தைப் பார்த்துவிட்டு 16 வயதுச் சிறுவன் விபரீத சம்பவத்தில் ஈடுபட்டது அந்தச் சிறுவனின் குடும்பத்தினரை கதிகலங்க வைத்திருக்கிறது.

பெங்களூரு கனக்புராவைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன், தீபக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தீபக்கின் தந்தை சிறிய அளவிலான ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6-ம் தேதி, `போட்டோ' வாங்கச் செல்வதாகப் பெற்றோரிடம் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிய தீபக் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. எப்படியும் வந்துவிடுவான் என்று காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. மகன் வீடு திரும்பாததால் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

 குழந்தைக் கடத்தல்
குழந்தைக் கடத்தல்
representational image

இந்நிலையில், 7-ம் தேதி காலையில் தீபக்கின் தந்தையின் வாட்ஸ் அப்புக்கு தீபக்கின் புகைப்படம் வந்திருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், அரை நிர்வாணமாகவும் பீதி நிறைந்த முகத்துடனும் இருந்திருக்கிறான் தீபக். அடுத்த சில நொடிகளில், 'உங்கள் மகன் கடத்தப்பட்டிருக்கிறான். அவனை விடுவிக்க வேண்டுமென்றால் 5 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் தீபக்கின் பெற்றோர் பதற்றத்தின் உச்சத்துக்குச் சென்றனர்.

இந்தத் தகவலை தீபக்கின் தந்தை போலீஸாரிடம் தெரிவிக்க... மெசேஜ் அனுப்பப்பட்ட எண் இருக்கும் இடத்தை ஆராய்ந்தது போலீஸ். திருப்பதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து அந்த மெசேஜ் வந்திருப்பதைக் கண்டுபிடித்த போலீஸ் உடனடியாக திருப்பதிக்கு விரைந்தது. அங்கே...

போலீஸுக்கும் தீபக்கின் பெற்றோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! தீபக்கின் தந்தையும் போலீஸாரும் நினைத்ததைப்போல, தீபக்கை ஏதோ மர்ம கும்பல் கடத்தியிருக்கவில்லை. தந்தையிடமிருந்து பணம் கறப்பதற்காக தீபக் நடத்திய நாடகம்தான் அது. 6-ம் தேதி, போட்டோ வாங்கச் செல்வதாக வீட்டிலிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்த தீபக், நயன்டஹள்ளி மெட்ரோ ஸ்டேஷனில் தனது பைக்கை பார்க் செய்துவிட்டு அங்கிருந்து மெஜெஸ்டிக் பேருந்துநிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து பஸ் பிடித்து திருப்பதிக்கு வந்து ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி தன் பெற்றோரையே மிரட்டியிருக்கிறார் என்று விசாரணையில் அம்பலமானது.

Kidnapped / Representational image
Kidnapped / Representational image

மேலும் தீபக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "பள்ளி செயல்படாதபோது தீபக்கின் பெற்றோர் அவனை படிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், அவனுக்கோ படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில்தான், கன்னட திரைப்படமான 'ஆபரேஷன் அலமேலம்மா' படத்தைப் பார்த்துள்ளான். அந்தப் படத்தைப் பார்த்து ஏற்பட்ட பாதிப்பில்தான் இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான்" என்பது தெரியவந்தது. இதையடுத்து தீபக்கை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மனநல ஆலோசகர் திவ்யபிரபாவிடம் பேசினோம், ``இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் அந்தச் சிறுவன் இந்தச் செயலைச் செய்ததற்கு என்ன காரணம் என்று நமக்குத் தெரியாது. ஏனென்றால் படிப்பு மட்டும்தான் பிரச்னை என்றால் அவன் ஏன் பணம் கேட்கிறான் என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாது படம் பார்த்து அவன் இப்படிச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவனுக்கு ஏதாவது தேவைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக்கூட பணம் கேட்டிருக்கலாம். இதுபோன்ற விஷயங்களைத் தடுக்க வேண்டுமென்றால் ஆரம்பத்திலேயே நம் வளர்ப்பு முறையை சரியாகக் கையாள வேண்டும் பிறந்ததிலிருந்து 8 வயது வரை குழந்தையை எப்படி வளர்க்கிறோமோ அதை அடிப்படையாக வைத்துதான் வளரிளம் பருவத்தில் குழந்தைகளின் நடத்தை அமையும். எனவே, அந்தக் காலகட்டம் மிகவும் முக்கியம்.

திவ்யபிரபா
திவ்யபிரபா

வளரிளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் பொதுவாகவே `ரிஸ்க் பிஹேவியர்' அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பயம் இருக்காது. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற வேகம் அதிகமாக இருக்கும். எனவே, வளரிளம் பிள்ளைகளைப் பக்குவமாகக் கையாள வேண்டும். அவர்களை சரிசமமாக நடத்த வேண்டும் அவர்களின் தேவைகளை, குறைகளை, பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். எவ்வளவுதான் பணம் முக்கியமாக இருந்தாலும் பிள்ளைகள் அதைவிட முக்கியமல்லவா, எனவே அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்ன செய்கிறார்கள் எனக் கண்காணிக்க வேண்டும். அதற்காக அவர்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது நண்பர்களைப் போல அணுக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு