Published:Updated:

சந்திர கிரகணத்துக்கும் டிராகனுக்கும் என்ன தொடர்பு? நம்பிக்கைகள்- மூடநம்பிக்கைகள்! #LunarEclipse

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

கிரகணம் என்பது சூரிய ஒளியோ சந்திர ஒளியோ நம்மீது விழாமல், ஒரு மரம் நிழல் தருவது போன்ற சாதாரண நிகழ்வுதான் என்றாலும், இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தீய நிகழ்வாக, காலங்காலமாகக் கருதப்பட்டுவருகிறது. இன்றுவரை இந்தக் கிரகணங்களுடன் கூடவே பயணிக்கும் சுவாரஸ்யமான கதைகள் உண்டு.

சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் வான்வெளி கண்ணாமூச்சி (hide and seek) விளையாட்டில் சிறிது நேரம் சூரியன் ஒளிந்து கொள்வதே சூரிய கிரகணம். அதேபோல், சந்திரன் சிறிது நேரம் ஒளிந்து கொள்வதுதான் சந்திர கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் கடக்கும்போது, அது சூரிய ஒளியை பூமிக்கு வராமல் மறைக்கும். அதைச் சூரிய கிரகணம் என்றும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதை சந்திர கிரகணம் என்றும் சொல்கிறோம்.

சூரியன் -சந்திரன் -பூமி
சூரியன் -சந்திரன் -பூமி

'கிரகணம்' (Eclipse) என்ற சொல்லுக்கு, 'மறைக்கப்பட்ட' அல்லது 'கைவிடப்பட்ட' என்பது பொருளாகும். ஆனால், கிரேக்க மொழியிலிருந்தும் லத்தீன் மொழியிலிருந்தும் பெறப்பட்ட இதன் வேர்ச் சொல்லான 'Ekleipsis' என்பதற்கு, உண்மையான பொருள், 'விண்கோள்கள் கருமையடைவது' என்பதுதான்.

கிரகணம் என்பது, சூரிய ஒளியோ சந்திர ஒளியோ நம்மீது விழாமல் ஒரு மரம் நிழல்தருவது போன்ற சாதாரண நிகழ்வுதான் என்றாலும், ஊரிலும் நாட்டிலும் பெரும் பாதிப்புகளைம், அழிவுகளை ஏற்படுத்தும் தீய நிகழ்வாக, காலங்காலமாகக் கருதப்பட்டுவருகிறது. அதுமட்டுமன்றி இன்றுவரை இந்த கிரகணங்களுடன் கூடவே பயணிக்கும் சுவாரஸ்யமான கிரகணக் கதைகள் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம். சூரியனையும் சந்திரனையும் சாத்தான், டிராகன், பாம்பு, பூதங்கள் அல்லது ராட்சத மிருகங்கள் என ஏதோவொரு தீயசக்தி விழுங்குவதால்தான் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன என்று பல ஊர்களிலும், பல நாடுகளிலும் நம்பப்படுகிறது.

கிரகணம்
கிரகணம்

தென்அமெரிக்காவின் டோபா பழங்குடி மக்களிடம் நிலவிவரும் கதை இது. 'உலகம் முதன்முதலில் தோன்றியபோது, டோபா மக்கள்தான் தோன்றினார்கள். அவர்கள், அருகில் இருந்த மலைக் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்துவந்தனர். ஆண்டிஸ் மலையின்மீது, மூன் என்று முதியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அந்தக் கிழவரும் அவருக்கான உணவைத் தானே வேட்டையாடி, அதைச் சேகரித்துவைத்து உண்பார். அவரிடம் இருக்கும் உணவைப் பொறுத்து அவரது பானை வயிறு பெரிதாகும் அல்லது சிறிதாகும். ஒளிமிகுந்த அவருடைய அந்தப் பானை வயிறுதான் நிலவாகும். முழுமையாக அவர் உணவை உண்ணும் நாளில், அவரது வயிறு அழகான பானையாக மலை உச்சியில் தெரியும். அதுதான் பௌர்ணமி. உணவு குறையக் குறைய தொப்பையும் குறைந்து, ஒருநாள் மறைந்துவிடும். அதுவே அமாவாசை. அன்று மூன் முதியவர் மீண்டும் வேட்டையாடச் செல்வார். அவரையே முன்னுதாரணமாகக் கொண்டு உணவை சேமித்து வாழ்ந்த பழங்குடி மக்கள், ஒரு முழுநிலவு நாளில், உணவை நன்றாக உண்டு உறங்கினர். அமைதியான அந்த இரவில், திடீரென ஏதோ வித்தியாசம் உணர்ந்து அவர்கள் விழித்தபோது, கிரகணம் நேர்ந்திருந்தது. பசியுடன் இருந்த சிறுத்தைப் புலியொன்று அந்த முதியவரின் தொப்பையைக் கடிக்க, அந்த ஒளிமிகுந்த இரவு கருமையானது. கிழவரைக் காப்பாற்றுவதற்காக டோபோ பழங்குடி மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி, பறைகளைக் கொண்டு ஒலி எழுப்பினார்கள். இதனால், அந்தச் சிறுத்தை காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.' இது, டோபா மக்களின் கிரகணம் பற்றிய கதை.

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாட்டம்-மலிபா மரபினர் மத்தியில் இன்னொரு அழகிய கதை பேசப்படுகிறது. 'சூரியனும் சந்திரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் மனைவி, குடும்பம் என்று அமைதியாக வாழ்ந்தனர். ஒருநாள், சந்திரனின் மிளிர்ந்த அழகைப் பார்த்து பொறாமைகொண்ட சூரியன், தனது நண்பனை விருந்துக்கு அழைப்பதுபோல அழைத்து, கரடுமுரடான நட்சத்திர நதிக்குள் தள்ளியது. அன்று இரவு முழுவதும் காணாமல்போன சந்திரன், மீண்டும் எழுந்து வெளியே வந்தபோது, முழுப் பொலிவை இழந்திருந்தது. ஆங்காங்கே தழும்புகளும் காணப்பட்டன. இதனால் கோபம் கொண்டு, பழிவாங்கும் எண்ணத்துடன் விருந்துக்கு அழைப்பதுபோல அழைத்து, முதலில் சூரியனின் குழந்தைகளை ஆற்றில் கரையவிட்டு, சூரியனையும் தள்ளிவிட்டது சந்திரன். அப்போது, சிவப்பு நிற சூரிய கிரகணம் தோன்றியது. பின்பு ஒருமுறை, சந்திரன் தோற்றபோது, எங்கும் இருள் உண்டாயிற்று.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

'ஆக, 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படும் சண்டைதான் வானத்தில் இருள் என்ற கிரகணத்தைத் தோற்றுவிக்கிறது' என்று நம்பிய மலிபா மக்கள், இருள் என்ற பெரும் துன்பத்தைத் தடுக்க வேண்டுமென்றால், அனைவரும் பொறாமை குணத்தை விட்டு, சண்டைகள் இல்லாமல் அமைதியுடன் வாழ வேண்டும் என்ற நீதியுடன் இந்தக் கிரகணம் பற்றிய கதையைச் சொல்லிவருகிறார்கள். வியட்நாமிலோ, வேறொரு சுவாரஸ்யமான கதை கூறப்படுகிறது. 'அனைவருக்கும் வளமும் நலமும் விளைவிக்கும் ஹன் மன்னரை, வியட்நாம் மக்கள் கடவுளாக வணங்கிவந்தனர். தங்களது கடவுளான ஹன், ஒருமுறை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடன் எப்போதும் காணப்படும் தங்கச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராட்சச தவளை ஒன்று, அவரைப் போல தானும் பூமியை ஆளவேண்டும் என முடிவுசெய்தது. அது, அதற்காகத் தன்னை அவரிடமிருந்து மெதுவாக விடுவித்துக்கொண்டு, மேலே ஒளிர்ந்து கொண்டிருந்த சந்திரனை விழுங்கியது. இதனால் உலகெங்கும் கிரகணம் என்ற இருள் உண்டானது.

தவளை விழுங்கிய சந்திரனை திரும்பப் பெறுவதற்காக வியட்நாம் பெண்கள் உலக்கை மற்றும் குழவியைக்கொண்டு ஒலியெழுப்பினர். அத்துடன், கடவுளுக்குப் பிடித்த அறுசுவை உணவைப் படைத்து வழிபட, ஹன் கடவுள் விழித்தெழுந்து தவளையை வென்றதாம். அத்துடன் தவளை விழுங்கிய நிலவையும் காப்பாற்றினார்' என்கிறது வியட்நாமியப் பழங்கதை.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

கிரகணத்தை காதல் கதையாகக் கூறுகின்றன தாய்லாந்தின் மரபுக் கதைகள்.

'பூமியின் புதல்வியான ரிலெச்சா என்ற தேவதை, ஒருமுறை தனது பூந்தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, காதல் கொண்ட சூரிய மன்னர், அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். ஆனால், நட்சத்திரக் கடவுள்களின் பொறாமையால், சூரியனின் தேர் சூரியனுடன் மலைகளில் ஒளித்து வைக்கப்பட்டதால், கிரகணம் உண்டானது. பின்பு மீண்டெழுந்த இருவரும் சூரிய சந்திரராக ஒளி தருகின்றனர்' என்று சந்திரன் உருவான கதையையும் சேர்த்துத் தருகிறது தாய்லாந்து காதல் கதை.

இந்தியாவில் வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. 'பாற்கடலைக் கடைந்து, அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் பங்கு போட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட பிணக்கில் சுவர்ணபானு என்ற அரக்கனை, மோகினி வடிவில் இருந்த விஷ்ணு, தலை வேறு உயிர் வேறாகப் பிரித்தார். அப்போது, பாம்பின் தலை மற்றும் உடலைக்கொண்டு இரு உடல்களை ஒட்ட வைத்ததில் உருவானதே (சாயா கிரகங்களான) ராகு மற்றும் கேது.

தங்களது இந்த நிலைக்கு முக்கியக் காரணமான சூரிய, சந்திரர்களைப் பழிவாங்குவதற்காக பிரம்மனிடம் தவமிருந்து, ஆண்டுக்கு நான்கு முறை, சூரிய சந்திரரின் ஒளியை விழுங்கும் வரம் பெற்றனர். ஆக, கிரகணங்கள் மூலம் உலகின் பெரிய ஒளிசக்தியை ராகு மற்றும் கேது மட்டுப்படுத்தினர்' என்கிறது ரிக் வேதம் உள்ளிட்ட இந்திய வேதங்கள். சூரியனை விழுங்கிய ராகுவை, வெடி மற்றும் வானவேடிக்கைகளுடன் வெளியேற்றுவது இன்றும் இங்கு சில சமூகங்களில் வழக்கமாக உள்ளது.

சந்திரன்
சந்திரன்

இதைப் போலவே மாயன் நாகரிகத்தில் மலைப்பாம்பு, சீனாவில் டிராகன், ஜெர்மனில் வைகிங் மரபில் நரிகள், ஹங்கேரியில் ராட்சசப் பறவை. அமெரிக்கப் பழங்குடியில் கரடி, கொரியாவில் நாய் என வான்வெளியில் விழுங்கும் பல கதைகள் கிரகணங்களுக்குக் கூறப்படுகின்றன.

இதுபோன்ற கதைகள் மட்டுமன்றி, பழங்காலந்தொட்டே மக்களிடையே கிரகணம்குறித்த பல்வேறு மூட நம்பிக்கைகளும் நிலவிவருகின்றன.

கி.பி 1133-ம் ஆண்டு சூரிய கிரகணத்தின்போது, இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றி இறந்துபோனார். இதனால், கிரகணங்கள் அரசாட்சியையே வீழ்த்தும் சக்தி வாய்ந்தது என நம்பப்பட்டது. இதைப் போலவே கிரகணத்தன்று பாபிலோனியர்கள், ஒருநாள் முதல்வரை ஏற்பாடுசெய்து, நிரந்தர மன்னரைக் காப்பாற்றினர் என்கிறது வரலாறு. அந்த ஒருநாள் முதல்வரும், நிரந்தர அரசரைப்போன்று உடை அணிந்துகொண்டு உணவு உண்டு, ஒருநாள் மட்டும் அரசாட்சி செய்யும்போது, கிரகண துர்சக்திகள் குழம்பி வெளியேறிவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பே சீனா மற்றும் இந்தியக் குறிப்பேடுகளிலும் கிரேக்கம், பாபிலோனிய கலாசாரங்களிலும் குறிப்பிடப்பட்டுவந்த இந்தக் கிரகணங்களின் அறிவியலை முதன்முதலாக உலகுக்கு எடுத்துரைத்தது, இந்தியரான நமது ஆரியபட்டாதான். தனது வானவியல் கணக்கீடுகள் மூலம், கோள்கள் பற்றிய அறிவியலை எடுத்துரைத்து பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் ஆரியபட்டா. 'உலகம் உருண்டை' என்றும், 'ராகு கேது விழுங்கிய சூரிய சந்திர கிரகணங்கள் வெறும் நிழல்களே' என்றும் கி.பி.476-ம் ஆண்டே அவர் கணித்தார்.

செவ்வாய்க்கிழமை பூரண சந்திர கிரகணம்... செய்யவேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்! #Astrology

அப்போது மறுக்கப்பட்ட ஆரியபட்டாவின் அறிவியல், பிறகு படிப்படியாக முன்னேறி, இன்று கிரகணங்கள் வாயிலாக ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடுகளை உறுதி செய்தது. அத்துடன், கரோனா என்ற சூரியனின் வளிமண்டலத்தை ஆராயவும் ஹீலியம் போன்ற மந்த வாயுக்களை (Inert Gases)க் கண்டறியவும் பெருமளவில் உதவியது. ஆனாலும், கிரகணங்கள் பற்றி எவ்வளவோ அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும், கிரகணங்கள் சார்ந்த மூட நம்பிக்கைகள் இன்றைக்கும் உலகெங்கும் இருக்கிறது என்பதே நிதர்சனம்..!

அடுத்த கட்டுரைக்கு