Published:Updated:

விகடன் மேடை - கே.பாலசந்தர்

விகடன் மேடை - கே.பாலசந்தர்

விகடன் மேடை - கே.பாலசந்தர்

விகடன் மேடை - கே.பாலசந்தர்

Published:Updated:

த.சத்தியநாராயணன், சென்னை.

  ''மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்காதது ஏன்? விருப்பம் இல்லையா? (அ) வாய்ப்பு கிடைக்கவில்லையா?''

  ''நீங்கள் ஓர் ஓவியர் என்று வைத்துக்கொள்ளுங்கள். வானத்தைவிடப் பெரிய கேன்வாஸை உங்களால் காட்ட முடியுமா? வானம் இல்லாத இடமோ, காணாமல் போகிற நேரமோ உண்டா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் மேடை - கே.பாலசந்தர்

என் சித்திரங்கள் என்னைப்போலவே எளியவை. அவற்றைத் தீட்ட வானம் எதற்கு? ஒரு சின்ன காகிதம் போதும். அதற்கு மேல் என்னால் முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன்.

விருப்பம் என்பது நம்முடைய வரம்புக்கு உட்பட்டே எழும்போது, கிடைக்கும் மகத்தான வாய்ப்புகளையும் நாகரிகமாக மறுத்துவிடலாம். அப்படித்தான் எனக்கு மக்கள் திலகம்.

அவர், என் நாடகங்களை விரும்பிப் பார்த்தவர். 'மெழுகுவத்தி’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க விரும்பியவர். அவருடைய 'தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதச் சொல்லி என்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர். அவர் பாணி, அவர் உயரம் வேறு. என் தளம், என் திறமை வேறு. என்னால் 'நான் ஆணையிட்டால்’ பாட்டை எடுக்க முடியாது. அவரால் 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு’ என்று பாட முடியாது.

இதை அவரும் நன்கு புரிந்துகொண்டதால், இறுதி வரைக்கும் எங்கள் தொடர்பு இனிமையாகவே இருந்தது.''

மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்.

##~##
 ''உங்கள் படங்களுக்கான விகடன் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

 ''விடைத்தாளில் ஆசிரியர் போடும் மதிப்பெண்கள், சிவப்பு மையில் எழுதும் வாக்கியங்கள், இவற்றை எப்படி எடுத்துக்கொண்டேனோ அப்படித்தான் விகடனின் விமர்சனங்களையும். பாலம் தாண்டி அக்கரைக்கு வந்து காத்திருந்து விகடனை வாங்கிப் படித்த பால பருவத்தில் இருந்து இன்று வரை விகடன் என் இணை பிரியா தோழனாகத்தான் இருந்து வருகிறான். நண்பன் சொல்வது எல்லாம் நன்மைக்குத்தானே? வெற்றுப் புகழுரைகளின் நடுவே நண்பனின் விமர்சனம்தானே நம்மை விழுந்துவிடாமல் காப்பாற்றுகிறது?

அந்த விதத்தில், விகடன்... நான் கேட்க மறந்த என் மனசாட்சியின் குரல்தான்!''

வெ.கிருஷ்ணன், இடைப்பாடி.

 ''கமலை கதாநாயகனாகவும் ரஜினியை வில்லனாகவும் வைத்து இப்போது ஒரு ஹிட் அடிக்க உங்களால் முடியுமா?''

 ''அது கமல் படமாகவோ, ரஜினி படமாகவோ இல்லாமல், பாலசந்தர் படமாக இருந்தால், அதில் நடிக்க அவர்களுக்குச் சம்மதமா? நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள் அவர்களிடம்!''

விகடன் மேடை - கே.பாலசந்தர்

கல்பனா, கோயம்புத்தூர்.

  ''உங்கள் அனைத்துப் படங்களிலும் ஏதோ ஒரு கேரக்டர் சமூக ஒழுக்க நெறிகளை மீறுகிறதே... ஏன்?''

 ''நாம் என்ன சாதுக்கள் சங்கத்திலா குடியிருக்கிறோம்? சன்யாசி கிராமத்திலா வாழ் கிறோம்? நாம் எல்லோருமே சாதாரண, சராசரி மனிதர்கள்தானே? முழுக்க முழுக்க நல்லவன், முழுக்க முழுக்கக் கெட்டவன் எனப் படைப்பில் உண்டா? தவறு செய்து திருந்திக் கற்ற பாடம் ஒருவனை, நல்லவனைவிட வலிமையாக்கிவிடுகிறது. 'Every saint has a past and every sinner, a future’ என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? போட்ட விதிகளை மீறுவது தவிர்க்க முடியாதது; புரிந்துகொள்ளக் கூடியது; நியாயப்படுத்த முடியாதது; திருத்தப்பட வேண்டியது. அது சரி, ஒழுக்க விதிகளை மீறுவதே சரி என்று நான் எந்தப் படத்திலாவது சொல்லி இருக்கிறேனா? கல்பனா அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்!''

விகடன் மேடை - கே.பாலசந்தர்

கு.ரத்தினம், ஆண்டிபட்டி.

 ''கலைஞர் கருணாநிதியுடனான நட்பு குறித்துக் கூறவும்?''

 ''அவருடைய அரசியலைவிட்டு விலகியே இருக்கிறேன். அவருடைய கொள்கைகள் சிலவற்றோடு மாறுபட்டே இருக்கி றேன். அவருடைய தமிழோடு ஒன்றுபட்டே இருக்கிறேன்.

'புணர்ச்சி பழகுதல் வேண்டா;
   உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்’
என்பார் திருவள்ளுவர். அதாவது, எல்லாவற்றிலும் ஒத்திசைந்தால்தான் நட்பு கூடும் என்பது இல்லை. சிலஒருமித்த உணர்ச்சிகளே நட்புக்கு வாய்ப்பாக அமையும் என்பது பொருள். கவிதாலயாவின் சின்னமும் கலைஞரின் ஆசானும் ஒருவர்தானே?''

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

 ''உலகத் தரத்துக்குத் தமிழ் சினிமா உயர்ந்துள்ளதா?''

 '' 'சினிமா உலகம் வேறு, உலக சினிமா வேறு’ என்பார் ஜெயகாந்தன். தொழில்நுட்பம் என்று பார்த்தீர்களானால், உலகின் எந்த நாட்டின் சினிமாவுக்கும் தமிழ் சினிமா சளைக்கவில்லை. இது ஒப்பிட்டுப் பார்த்துக் கண்டுபிடித்துவிடக் கூடியதுதான். மற்றபடி 'உலக சினிமா தரம்’ என்று தனியாக ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை. அந்தந்த நாட்டுக்கு என்று ஒரு பண்பாடு, எண்ணப் போக்கு, வாழ்க்கை முறை, வரலாற்று வடு என்று பிரத்யேகமாக இருக்கத்தானே செய்கின்றன? அதைத்தான் அந்தந்த நாட்டுத் திரைப்படங்களும் பிரதிபலிக்கும். ஆங்கிலப் படங்களில் வசனகர்த்தா என்ற ஒருவரின் அவசியமே இல்லை என்னும்படி, சரமாரியாக வரும் கெட்ட வார்த்தைகளை நாம் தரம் என்று கொண்டுவர முடியுமா? நமது பாடல் காட்சிகளைத்தான் நாம் கொண்டாட முடியுமா?

நமது அடிப்படைக் குணங்கள், நடைமுறைப் பிரச்னைகள், நிலவரங்கள்... இவற்றின் சுவாரஸ்யமான பதிவுகளாக அமையும் நமது தமிழ்ப் படங்கள் உலக சினிமாக்களோடு சேர்ந்தவைதான். இந்தப் பதவி, வழங்கப்படுவது அல்ல; நாமே உணர்வது. மற்றவர்களுக்குத் தமிழைப் பற்றிக் கொஞ்சமேனும் தெரியும் வரை, அங்கீகாரத்துக்குக் காத்திருக்க வேண்டியதுதான்!''

விகடன் மேடை - கே.பாலசந்தர்

எம்.செல்லையா, சாத்தூர்.

 '' 'அபூர்வ ராகங்கள்’ ரஜினி - 'எந்திரன்’ ரஜினி ஒப்பிடுக?''

 ''அது ரஜினியின் முதல் படம். இது, ரஜினி தனது முதல் படம்போலவே கருதி உழைத்து நடித்த படம்!''

த.சத்தியநாராயணன், சென்னை.

 '' 'அரங்கேற்றம்’ படத்தை மறுபடியும் தற்போது எடுக்க நினைத்தால், யாரைக் கதாநாயகியாக நடிக்கவைப்பீர்கள்?''

 ''நீங்கள் இதுவரை பார்த்திராத புதுமுகத்தைத்தான். அப்போதும் அதைத்தானே செய்தேன்?!''

கே.கமலக்கண்ணன், திருமழிசை.

 ''முரண்பாடான கதாபாத்திரங்கள் சித்திரிப்பு, வியாபாரத்துக்கான வியூகமா?''

 ''உண்மையில் சொல்லப்போனால், இந்த முரண்பாடு என்பது சில நேரங்களில் விலைபோவது இல்லை. வியாபாரத்துக்கான வியூகத்துக்கே இது எதிரானது. விநியோகஸ்தர்கள் அருகே நெருங்கவே மாட்டார்கள்.

முரண்பாடுகள் என்பது சமூகத்திலோ அல்லது கதாபாத்திரங்களின் தன்மையிலோ நாம் அவ்வப்போது சந்திக்கின்றவை. சில குறைபாடுகள் எல்லாம் முரண்பாடுகள் ஆகாது. முரண்பாடு என்பது கெட்டது அல்ல. சில மாற்றங்கள் முரண்பாடுகள் என்று நினைக்கப் பெறும்.

என்னைப் பொறுத்தவரை எனது பிடிவாதமான 'மாத்தி யோசி’ என்கிற கொள்கை, நான் தொடர்ந்து கடைப்பிடித்து வந்த ஃபார்முலா.

ஓர் உதாரணம் சொல்கிறேன்... 'பார்த்தாலே பரவசம்’ படம்.

விவாகரத்தான கணவன் மனித நேயத்தோடு தனது மாஜி மனைவிக்கே வேறு திருமணம் செய்துவைக்க முயல்கிறான். இதில் தவறு என்ன இருக்கிறது. மாத்தி யோசித்ததைப் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. 10 ஆண்டுகள் முன்னதாக இந்தப் படம் எடுத்துவிட்டேன். ஆனால், இதே கருத்து இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் வரவேற்கப்பட்டு இருக்கும் என்று திடமாக நம்புகிறேன்.

ஏன் 'கல்கி’ திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். 'கல்கி’யின் சவால் இன்று பெரிதாகப் போற்றப்பட்டு இருக்கும்!''

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

''நீங்கள் டென்ஷன் பார்ட்டியா... கூல் டைப்பா?''

 ''வீணையைப் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே? அதில், நரம்புகள் டென்ஷனாக இருக்க வேண்டும். விரல்கள் டென்ஷனாக இருக்கக் கூடாது!

நான் எப்போதெல்லாம் வீணையாக இருந்தேன் அல்லது விரல்களாக இருந்தேன் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!''

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

 '''சர்வர் சுந்தரம்’ கதை வசனம் எழுதும் போது நாகேஷ் என்ற உன்னதமான கலைஞனை நினைத்துக்கொண்டு எழுதினீர் களா?''

  ''ஆம். நாகேஷ் என் நண்பன். அடிக்கடி என் அலுவலகத்துக்கு வந்து தனக்கு என் நாடகத்தில் பங்கு கேட்பான். நான் அவனுக்காகவே எழுதியதுதான் 'சர்வர் சுந்தரம்’ நாடகம். அவனுடைய கவர்ச்சியற்ற முகவெட்டு, உடல்மொழி, அழவும் சிரிக்கவும் வைக்கக் கூடிய அவன் திறமை, இவற்றை எல்லாம் மனதில் வைத்துத்தான் நான் சுந்தரத்தை உருவாக்கினேன். ஒவ்வொரு நாளும் கொட்டகை நிரம்பி வழிந்தது. அதை ஏவி.எம். நிறுவனம், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் திரைப்படமாக்கியது. ஒரு நகைச்சுவை நடிகனைக் கதாநாயகனாக நடிக்கவைத்து வெற்றி கண்டேன்!''

ஜெ.ஞானசேகர், திருச்சி.

 ''தாங்கள் கடைப்பிடித்து பிறருக்குக் கூற விரும்புகிற அட்வைஸ் என்ன?''

'' 'அட்வைஸ்’ சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. இன்றும் நான் கற்றுக்கொள்ளும் மாணவன்தான். ஆனால், நான் கடைப்பிடித்த 'அட்வைஸ்’களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:

உழைப்பே கௌரவம்
விடா முயற்சியே வெற்றி
செய்யும் தொழிலே தெய்வம்
பன்முக ஆற்றலே திறமை
தெய்வ நம்பிக்கையே மனிதனை
முழுமைப்படுத்தும்!''

விகடன் மேடை - கே.பாலசந்தர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism