Published:Updated:

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

##~##

என்.முருகதாஸ், சேலம்.

  '' 'கறுப்பு நாகேஷ்’, 'வைகைப் புயல்’ - இந்த இரண்டு பட்டங்களில் உங்களுக்கு எது பிடிக்கும்?''

''கறுப்பு நாகேஷ், பச்ச நாகேஷ், வயலெட் நாகேஷ், ரோஸ் நாகேஷ்னு யாரும் கெடயாது. நாகேஷ்னா, ஒரே ஒரு நாகேஷ்தான். அடுத்தவங்க பொருளைத் திருடுறதும் ஒண்ணுதான்; அடுத்தவங்க புகழைத் திருடுறதும் ஒண்ணுதான். நெறத்தை வெச்சோ, கொணத்தை வெச்சோ... பெரியவங்களோட பெயர்களைப் பட்டமா போடுறது, அவங்களை அவமானப்படுத்துறதுக்குச் சமம். எம்.ஜி.ஆர்-னா அது மக்கள் திலகம் மட்டும்தான். சிவாஜின்னா, அது அந்த செவாலியே மட்டும்தான். நாகேஷ§ம் அப்படித்தான். அவங்க எடத்தை ஃபில் அப் பண்ற சக்தி வேற யாருக்குமே இல்லங்க. அவர் வானத்துல இருக்கிற வெள்ளி. அந்த வெளிச்சத்துல நெளியிற எறும்புதான் நானு. 'கறுப்பு நாகேஷ்’ங்கிற பட்டத்தை எம் பேருக்கு முன்னால போட்டுக்கிறது என்னோட ரசிகர்களுக்கு வேணும்னா பெருமையா இருக்கலாம். ஆனா, அதை ஏத்துக்கிட்டா என்னய நானே செருப்பக்கொண்டு அடிச்சுக்குறதுக்குச் சமம். வைகைக் கரை ஓரத்துல வாழ்ந்தவனா 'வைகைப் புயல்’ங்கிற பட்டத்தை மட்டும் ஏத்துக்கலாம். அடுத்தவங்களோட பேர்லயோ, புகழ்லயோ பங்கு போடுறதுல எனக்கு உடன்பாடு இல்லைங்க. மக்களாப் பார்த்துக் கொடுக்கிறதுதான் பட்டம். மத்தவங்க பேரைத் திருடி வெச்சுக்கிறதுக்குப் பேரு பட்டம் இல்ல. அதுக்குப் பேரு களவு!''

விகடன் மேடை - வடிவேலு

எம்.கோபால், மதனபுரம்.

 ''உங்ககிட்ட இருக்குற சட்டை எல்லாம் சண்டையில கிழிஞ்சதுதானா?''

 ''கோவாலு... தம்பி கோவாலு... திரையில மட்டுந்தான் நம்ம சட்டை கிழியும். வெளிய, வித் அவுட் பாடிதான். ஊசியும் நூலுமாவே அலையிற ஒன்ன மாதிரி ஆளுகளுக்குத்தான் எஞ் சட்டை மேல எம்புட்டு அக்கறை!''

ச.திலீப்குமார், தென்காசி.

''ஒரு நடிகனின் முக்கிய வரமே உடல்மொழிதான். உங்களுக்கு உடல்மொழியுடன் குரல்மொழியும் (வாய்ஸ் மாடுலேஷன்) வரமாகக் கிடைத்திருக் கிறது. எங்கே படித்தீர்கள் அல்லது பிடித்தீர்கள் அந்தக் கலையை?''

விகடன் மேடை - வடிவேலு

''நா படிச்ச இன்ஷ்ட்யூட்டு ரொம்ப ஒசத்தியானதுண்ணே. இன்ஷ்ட்யூட்டுனு சொன்னதும் ஒடனே ஷாக்காயிடாதீங்க ஷாக்! இங்க இருக்கிறவங்க நடிப்புக்குனு தனியா இன்ஷ்ட்யூட்டு வெச்சிருக்காங்க. ஆனா, மதுரயில அப்புடிலாம் ஏதும் இல்ல. நா திரிஞ்ச தெருதான் என்னோட இன்ஷ்ட் யூட்டு. ரிச்சாக்காரங்க தொடங்கி கைவண்டிக்காரங்க வரைக்கும் அடிமட்ட கேரக்டருங்க அத்தன பேரும் ஈரமுஞ் சாரமுமா வாழ்ற ஊரு அது. பலபல கேரக்டருக அங்க பொழங்கும். அவங்களோடதான் ஒண்ணுமண்ணா வாழ்ந்தேன். குரல்மொழி தொடங்கி குனிஞ்சு நிமிருற முதுகுத்தண்டுமொழி வரைக்கும் நான் கத்துக்கிட்டது அவங்ககிட்ட இருந்து தான். கூடவே, ஹோம் வொர்க்கு பண்ற விதமா நிறைய சினிமாக்களையும் பாப்பேன். தரயில வாழ்ந்தவங்களப் பாத்த மாதிரியே தெரயில வாழ்ந்தவங்களையும் பாத்திருக்கேன்; படிச் சிருக்கேன். சினிமாவுக்கு வந்த பெறவும் நா எல்.கே.ஜி-யாதான் இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாத்தான் வளத்துக்கிட்டேன். 'போடா போடா புண்ணாக்கு’னு உள்ள நொழஞ்ச வன், புலிகேசியா வளந்து நின்னேன். அந்த ரெண்டு வடிவேலயும் ஒப்பிட்டுப் பாத்தீங் கன்னா... நா எவ்வளவு கத்துருக்கேன்னு ஒங்களுக்கே தெரியும்ணே. அன்ட்ராயரோட வந்தவன் அரசனா மாறி நிக்க, உடல்மொழியும் கைமொழியுந்தாண்ணே காரணம். இந்த உடல்மொழி, கொரல்மொழி எல்லாமே நம்ம ஜீனோடவே வந்ததுண்ணே. தொழில் பக்தியில அத இன்னும் நல்லா வளத்துக் கிட்டேண்ணே... எங்கப்பா நடராஜப் பிள்ளை பேசுனார்னா, சுத்துப்பட்டு ஜனமே கூடி நின்னு வேடிக்க பார்க்கும். அம்புட்டு ஜாலியாப் பேசுற மனுஷன். ஆனா, மறந்தும் சிரிக்கவே மாட்டாரு. தகப்பன், தெய்வம், தெருக்காரங்கன்னு பலவிதக் கலவையா வந்ததுண்ணே இந்த மொழி. இதுக்கு ரிஷிமூலம் தேடிப் போனா... வைகைக் கரைதான் டெட் எண்டு!''

வி.ராமன், பூண்டி.

''குண்டக்க மண்டக்கப் பேசி எக்குத்தப்பா மாட்டிக்கிட்ட அனுபவம் உண்டா?''

 ''தரையில் அல்ல; ஒன்லி, திரையில் மட்டும்!''

எம்.பாண்டியன், மதுரை.

 ''உங்களுக்குப் பிடிச்ச காமெடியன் யாருண்ணே?''

விகடன் மேடை - வடிவேலு

''என்.எஸ்.கே., தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், எம்.ஆர்.ராதா, பாலையா, சுருளிராஜன்... அப்புறம் எனக்குப் புடிச்ச காமெடியன் நானேதான். இதத் தலக்கனம்னு நெனச்சிடாதீங்க. தலக்கனம்தான் கலைக் குணம். நல்ல ரசிகனா இருந்தாத்தான், நல்ல கலைஞனா இருக்க முடியும். மொதல்ல எங் காமெடி எனக்குப் புடிக்கணும். எங் காமெடியப் பாத்து நா சிரிச்சாதானே, அப்புறம் நீங்க சிரிக்க முடியும்? 'எனக்குப் பிடிச்சது கண்ணாடிதான். நா சிரிச்சா எங் கண்ணாடியும் சிரிக்கும்; நா அழுதா எங் கண்ணாடியும் அழுவும்’னு சொன்ன சார்லி சாப்ளின் மாதிரி, வடிவேலுங்கிற காமெடி நடிகனை நான் ரசிக்கிறேன். அவன் செய்யிற தவறுகளைத் திருத்துறேன். அவன் செய்யிற குசும்புகளைக் கொண்டாடுறேன். அதனால, வடிவேலுதான் எனக்குப் புடிச்ச காமெடியன்.

வீட்ல ஒக்காந்து குடும்பத்தோட டி.வி. பார்க்குறப்பகூட, 'இது வடிவேலு, இது குப்புசாமி’னு நாங்க பிரிச்சுப் பார்க்க மாட்டோம். பொதுவான காமெடியாத்தான் பார்ப்போம். மத்தவங்க காமெடியப் பார்த்தா மூஞ்சியத் திருப்பிக்கிட்டுப் போற பழக்கம் எங் குடும்பத்துல யாருக்குமே கெடயாது. சிரிப்பு வந்தா சிரிப்போம். இல்லன்னா, இழுத்துப் போத்திக்கிட்டுத் தூங்கிருவோம்!''

க.பிரபு தென்னவன், ஓமலூர்.

 ''அழுகுற குழந்தைகூட உங்களைப் பார்த்ததும் சிரிக்கும்னு நடிக்க வருவதற்கு முன்போ, பின்போ நினைத்தது உண்டா?''

''சினிமா ஒலகத்துக்கு வர்றதுக்கு முன்னால மனசுக்குள்ள யாரயும் சிரிக்கவைக்க முடியும்கிற நம்பிக்கை இருந்துச்சு. ஆனாலும், சினிமாவுல இவ்வளவு பெரிய ஆளா வருவேங்கிற எண்ணமோ எதிர்பார்ப்போ இருந்தது இல்லண்ணே. அந்தக் கால காமெடி ஸீன்களுக்கு நான் பேரடிமை. ஆனா, இடைப்பட்ட காலத்துல வந்த சில காமெடிகளைப் பார்த்தப்ப, எனக்குப் போரடிச்சிருச்சு. இவங்களவிட நல்லா காமெடி பண்ணலாமேங்கிற வெறி இருந் துச்சு. அதை ஃபில்-அப் பண்றதுக்கான பாதைதான் சரியா மட்டுப்படலை. எப்புடியோ... அங்க புடிச்சு இங்க புடிச்சு கோடம்பாக்கத்துக்கு வந்தாச்சு.

சமீபத்துல ஒரு தாயி பேசினப்ப, என்னையும் அறியாம மனசு லேசாச்சு. 'முன்னால எல்லாம் புள்ளைங்களுக்கு நிலாவக் காட்டித்தான் சோறு ஊட்டுவோம். இப்போ ஒன்னையக் காட்டித்தான் ஊட்டுறோம் வடிவேலு’னு போறபோக்குல அவங்க சொன்ன வார்த்தைக மனசுக்கு அம்புட்டு சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.

விகடன் மேடை - வடிவேலு

'இங்கரு... வடிவேல பாரு... டி.வி-யில பாரு...’ன்னு சொல்லி கொழந்த 'ஆங்’கிற நேரத்துல, தாய்மார்க சோத்த வாயில வெச்சிர்றாங்க. டி.வி-யில தெரியிற என்னயக் காட்டி, 'இது யாரு?’னு கேட்டா, ஒன்றர வயசுக் கொழந்த 'அவ்வ்வ்வ்’வுங்குது. நா பண்ற மாதிரியே வாய சுளிச்சுக் காட்டுது. அதான் நமக்கான எம்பளம். 'அவ்வ்வ்வ்’வுங்கிற வார்த்தைக்கு ஓனரே நம்மதானேண்ணே. ஒரு குழந்தையோட வெளயாட்டு பொம்மையா நா வளந்திருக்குற செறப்பே... இந்த ஜென்மத்துக்குப் போதும்ணே. பெரியவங்கள சிரிக்கவைக்கிறது சுலபம்ணே. ஆனா, பொடுசு களை அவ்வளவு சீக்கிரத்துல சிரிக்கவைக்க முடியாது. 'அவ்’ தாத்தா, 'அவ்’ அங்கிள்னு பாப்பாக்க பேசுற பாஷ என்னமா இருக்கு தெரியுமாண்ணே. வாண்டுக மனசுல பூந்து வெளாடுற அளவுக்கு வளந்திருக்கிறது பெருமையா இருக்குண்ணே. ஒவ்வொருத்தங்க வீட்டு ரேஷன் கார்டுல மட்டுந்தாண்ணே எம் பேரு இல்ல. மத்தபடி, அல்லார் குடும் பங்கள்லயும் அறிவிக்கப்படாத உறுப்பினர்ணே நானு!''

தா.கதிரவன், மடிப்பாக்கம்.

''நீங்களே ரசிச்ச உங்க காமெடி ஸீன் எது?''

 ''நா பெத்த புள்ளைகள்ல எந்தப் புள்ள புடிக்கும்னு கேட்டா, நா யாரய்யா கையக் காட்ட முடியும்? எது நல்ல காமெடி, எது புடிச்ச காமெடி, எது வயிறு வெடிச்ச காமெடிங்கிறத எல்லாம் நீங்கதான்யா சொல்லணும். எம் பார்வையில எனக்குப் புடிச்சிருந்தாத்தானே அந்த காமெடி திரைக்கே தெரிய வரும். விதம்விதமா, ரகம் ரகமா அள்ளி எறைக்கிறதுதான் நம்ம வேலை. மார்க்கு போடுற வேலைகளை எல்லாம் மக்க மகராச நீங்கதான்யா செய்யணும்!''

விகடன் மேடை - வடிவேலு

- அடுத்த வாரம்...

 ''உண்மையாகவே விஜயகாந்த் மீது அப்படி என்னதான் கோபம்?''

 ''ரஜினி உங்களோடு நெருக்கமாகப் பழகுவார் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அவருடனான சுவாரஸ்யமான அனுபவம் ஏதேனும் சொல்லுங்களேன்?''

''படத்தில் நீங்கள் எலி. வீட்டில் எப்படி?''

விகடன் மேடை - வடிவேலு

- இன்னமும் சொல்வாருய்யா டீட்டெய்லு...