என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

விகடன் மேடை - வடிவேலு

படம் : கே.ராஜசேகரன்

##~##

கா.இசக்கிமுத்து, திருநெல்வேலி.

''உண்மையாகவே விஜயகாந்த் மீது அப்படி என்னதான் கோபம் உங்களுக்கு?''

 ''மறுபடியும் மொதல்ல இருந்தா..?! அரைச்ச மாவையே எத்தனை தடவதான்யா ஆட்டுறது? அடப்போங்கப்பா... போரடிக் குது!''

எஸ்.உதயகுமாரன், பொள்ளாச்சி.

''ரஜினிகாந்த் உங்களோடு நெருக்க மாகப் பழகுவார் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அவருடனான சுவாரஸ்ய மான அனுபவம் ஏதேனும் சொல்லுங்களேன்?''

விகடன் மேடை - வடிவேலு

 '' 'சந்திரமுகி’யில நடிக்கிறப்ப ஒரு மேட்டர்... ஷூட்டிங்ல காமெடி வசனத்தை நான் சொன்னப்ப, ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர், 'இன்னும் பெட்டரா வேணும்’னு சொன்னார். ஒடனே ரஜினி சார், 'இல்ல... இல்ல... இதுவே நல்லா இருக்கு’னு சொல்லி ஓ.கே. பண்ணினார். 'கோபாலு’னு நான் மாடியில் இறங்கி ஓடி வர்றப்ப, அவர் பெர்ஃபார்ம் பண்ண வேண்டிய டைமிங்லாம் கேட்டுக் கேட்டுப் பண்ணார். எல்லா ஹீரோக்களுக்கு உள்ளேயும் ஒரு காமெடியன் இருக்கான். எல்லா காமெடியன்களுக்கு உள்ளேயும் ஒரு ஹீரோ இருக்கான். என்னோட சேர்ந்து நடிக்கும்போது, அவரும் ஒரு காமெடியனாவே மாறிடுவார். நல்லா கம்பெனி கொடுப்பாரு. நாம பெரிய ஆளுங்கிற பந்தா இல்லாம 'இந்த ஸீன்ல நான் என்ன பண்ணணும் வடிவேலு?’னு கேட்டு அப்படி அப்படியே நடிப்பாரு.

'குசேலன்’ படத்துல அவரைப் பாத்து ஒரு ரசிகனா கத்திக் கதறுவேன் நானு. அந்த ஸீன்ல என்னயப் பாத்துச் சிரிச்சு ரசிச்சு உருண்டு, அந்த ஸீனை எங்கிட்ட ஷேர் பண்ணிக்க அவர் எடுத்துக்கிட்ட டைமிங் இருக்கு பாத்தீங்களா.... வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம்ணே!

சில ஸீன்ல நம்ம விரிச்சுச் சொல்றப்ப 'என்ன ஓவராப் போறானே’னு நினைக்க மாட்டார். டைரக்டரு காதுக்குள்ள போய் முணுமுணுக்க மாட்டார். 'நல்லா இருக்கு வடிவேலு... பிரமாதம்’னு டைரக்டர்களோட சேந்து நம்மளத் தட்டிக் கொடுப்பாரு. சுருளிராஜன், நாகேஷ்னு பெரிய பெரிய ஜாம்பவான்களோட நடிச்ச ஆள் இல்லியா. அதனால, காமெடியன்களை எப்படி டீல் பண்ணணும்கிற பக்குவத்தை அவர் பக்காவா கத்துவெச்சிருக்காரு!''

கா.மாணிக்கம், மதன்பட்டவூர்.

''சினிமாவில் நீங்கள் எலி. வீட்டில் எப்படி?''

 ''வீட்டில்... மதுர மீனாட்சி அம்மன் கையில இருக்கும் கிளி!''

பி.ஐஸ்வர்யா, அடையாறு.

விகடன் மேடை - வடிவேலு

''எந்த வேடத்தில் நடிக்க ஆசை?''

 ''தெனாலிராமன் வேஷத்துல நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஆனா, அதுக்குச் சரியான கதை ஆசிரியர் கள் இப்போ இல்ல. தேடிக்கிட்டு இருக்கேன். ஒங்க கண்ணுல பட்டா புடிச்சுக் கொடுங்கம்மா!''

சு.சுந்தர்ராஜ், நடுவிக்கோட்டை.

''போகணும்னு நெனச்சுப் போகாத ஊர்... பார்க்கணும்னு நெனச்சுப் பார்க்க முடியாத விஷயம்... பேசணும்னு நெனச்சுப் பேச முடியாத  ஆள்... வாங்கணும்னு நெனச்சு வாங்க முடியாத பொருள்?''

 ''போகணும்னு நெனச்சுப் போக முடியாத ஊரு, இன்னைய வரைக்கும் அமெரிக்காதான்.

பார்க்கணும்னு நெனச்சுப் பார்க்க முடியாத தரிசனம், தாய் மூகாம்பிகையோட மொகம்.

பேசணும்னு நெனச்சுப் பேச முடியாத ஒரே ஆளு யாருன்னா, இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.

வாங்கணும்னு நெனச்சு வாங்க முடியாத பொருள்... அப்பா இருக்குறப்ப வீடு வாச வாங்கணும்னு நெனச்சேன். ஏழையா இருக்கும்போதே அவர் இறந்துட்டாரு. இப்ப வாங்கிட்டேன். சின்ன வயசுல அப்பாவோட இதயம் பழுதாயிடிச்சு. அத சரிபண்ணக்கூட என்னால முடியல. இப்ப இருக்கிற வசதி அப்ப இருந்திருந்தா, அப்பாவுக்குப் புது இதயத்தையே வாங்கிப் பொருத்திப் பார்த்துப் பூரிச்சி இருப்பேன். ஒண்ணப் பறிச்சுட்டுத்தான் இன்னொண்ண ஆண்டவன் கொடுக்கு றான். அந்த வேதனைய ஒங்க கேள்வி ஞாபகப்படுத்திருச்சுங்க சுந்தர்ராஜ்!''

விகடன் மேடை - வடிவேலு

பா.குமார், அறந்தாங்கி.

''உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகைகள் யார் யார்?''

 ''நிறையப் பேர் இருக்காங்க. டி.ஏ.மதுரம், தங்கவேலு வொய்ஃப் எம்.சரோஜா, முத்துலட்சுமி அம்மா, சச்சு அம்மா, மனோரமா, காந்திமதி அம்மானு பெரிய பட்டியலே போடலாம்ணே!''  

த.அய்யாத்துரை, முக்கூடல்.

''உங்களுக்குப் பிடித்த கைப்புள்ள யாரு?''

 ''ஏம்புள்ளதான்!''

இரா.இராம்குமார், நெடுவாசல்.

விகடன் மேடை - வடிவேலு

 '' 'தேவர் மகன்’ படத்தில் நடித்த போது செவாலியே சிவாஜி கணேசனுட னான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?''

 ''நா நேஷனல் அவார்டு வாங்கலனு ரொம்பப் பேரு வருத்தப்படுவாங்க. நா அவருகிட்ட அப்பவே அத வாங்கிட்டேன். 'தேவர் மகன்’ படத்தை தேவிஸ்ரீ தியேட்டர்ல ப்ரிவியூ போட்டுக் காண்பிச்சாங்க. அப்போ, கமலா அம்மாளக் கூப்புடுற மாதிரி கமல் சாரை, 'டே கமலா, இங்க வாடா’னு கூப்புட்டாரு சிவாஜி சார். 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரைப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா’னு என்னயக் காட்டிச் சொன்னாரு. என்னைய பக்கத்துல அழைச்சு 'நல்லா வருவேடா’னு அழுத்தமா ஒரு முத்தம் கொடுத்தாரு. 'இத இப்புடியே வளத்துக்கடா. காமெடியில மட்டும் இல்ல... கழுவுற கையில திங்கணும்... திங்குற கையில கழுவணும்னு பேசி, சிம்பதி கேரக்டரையும் சிறப்பா பண்ணுன பாரு... லேசா என்னயவே ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுட்டேடா. நல்லா வருவடா’னு வாழ்த்தினாரு. காதாரக் கேட்டவன் அப்புடியே அவரு கால்ல நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டேன். விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல. 'யேய், அவன் தூங்கிட்டான்போல இருக்கு. எழுப்பி வுடுங்கப்பா’னு சொன்னாரு சிவாஜி சார். அவரோட வாய் குளிர்ந்த வாழ்த்து வேர்ல்டு அவார்டுக்குச் சமம்ணே. அந்த மகராசனோட வாழ்த்து இன்னிக்கு வரைக்கும் நெலச்சு நிக்குது. வசிஷ்டர் கையால வாங்கிய வரம்ணே அது.

விகடன் மேடை - வடிவேலு

'தேவர் மகன்’ படம் கமல் சார் எனக்குக் கொடுத்த லைஃப். என்னோட டேர்னிங் பாய்ன்ட்டே அதுதான். இனிமே, அப்புடி ஒரு படம் கிடைக்குமானு தெரியல. பெரிய இமயங்களான சிவாஜி சார், கமல் சார் ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்து வார பாக்கியம் அந்தப் படத்துலதான் எனக்கு அமைஞ்சது. வளர்ற நேரத்துல அந்த மகத்தான வாய்ப்பக் கொடுத்த கமல் சாருக்கு நா காலா காலத்துக்கும் கடமப்பட்டு இருக்கேன். 'தேவர் மக’னுக்குப் பெறகு, 'பசும்பொன்’ படத்துல சிவாஜி சாரோட நடிச்சேன். அதுக்கப்புறம் சிவாஜி சாரோட வீட்ல எடுத்த 'சந்திரமுகி’ படத்துல நடிச்சேன். தரயில மண்ணக் குமிச்சு சிவாஜி சாரைப் பாத்த வடிவேலு, அந்த மன்னவனோட ஒண்ணா நின்னு தெரயில நடிப்போம்னு நெனச்சதுகூட இல்ல. அவரு கண்ண மூடினப்ப அவரோட கால்மாட்டுலயே நின்னு கதறினேன். அது அழுகை இல்லங்க... அத்தன சொட்டுக் கண்ணீரும் நா மிச்சம் வெச்சிருந்த நன்றிங்க!''

விகடன் மேடை - வடிவேலு

ஆர்.ராஜேஸ்வரி, வாண்டான்விடுதி.

'' 'இவர் படத்தில் நடிக்கவில்லை’ என வருத்தப்பட்டது உண்டா? அது யார்?''

 ''அடுத்த கேள்வியே சொல்லிவெச்ச மாதிரி இருக்கே தங்கச்சி. சிவாஜி சாரோட நடிச்சது எனக்கு கெடைச்ச பாக்யம்னா, இதய தெய்வம் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடிக்க முடியாதது என்னோட துரதிர்ஷ்டம்!''

எஸ்.வளர்மதி, திருச்சி.

''வடிவேலண்ணா... உங்க வாழ்க்கை யில மறக்க முடியாத மனிதர் யாராவது உண்டா?''

 ''என்னப் பெத்த தந்தை நடராஜப் பிள்ளை!''

அகிலன், சென்னை-4

''காதலித்தது உண்டா?''

''ஆமா, சத்தியமா காதலிக்கிறேண்ணே... காதலிகளோட கதைகளை எடுத்துவுடப்போறேன்னு நெனச்சு காதப் பொளந்துக்கிட்டு வராதீக. நா லவ் பண்றது என்னோட தொழிலத்தான். என் மனைவியைவிட அதிகமா நா செய்கிற நகைச்சுவைத் தொழில மதிக்கிறேன்; மனசார நெனைக்கிறேன்!''

அடுத்த வாரம்...

ஏதோ ஒரு விஷயத்தில் அழகிரி கிட்ட நீங்க லாக் ஆகிட்டீங்களாமே?

உண்மையைச் சொல்லுங்கள்... அரசியலுக்குப் போற மாதிரி ஏதாவது திட்டம் வெச்சிருக்கீங்களா?

திரும்ப உங்க இடம் கிடைக்கும்னு நினைக்கிறீங்களா?

விகடன் மேடை - வடிவேலு

- இன்னமும் சொல்வாருய்யா டீட்டெய்லு...