Published:Updated:

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

Published:Updated:
##~##

த.வித்யாதரன், மறைமலைநகர்.

 ''ஏதோ ஒரு விஷயத்தில் அழகிரியிடம் லாக் ஆகிட்டீங்களாமே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''அய்யா, நான் அன்புக்கு மட்டும்தான் லாக்கு... இப்புடிக் கௌப்பிவுடுறதெல்லாம் பொறளிக்குப் பொறந்த நாக்கு!''

சி.தர்மராஜ், அனந்தகோபாலபுரம்.

''மறைக்காமல் சொல்லுங்கள்... அரசியலுக்குப் போற மாதிரி ஏதாவது திட்டம் வெச்சிருக்கீங்களா?''

 ''அது காலம் போற போக்கவெச்சுப் பாத்துக்கலாம் ராசா...''

விகடன் மேடை - வடிவேலு

வேணி, குன்றத்தூர்.

''திரும்பவும் உங்க இடம் கிடைக் கும்னு நினைக்கிறீங்களா?''

''என்னோட எடம் எங்கேயும் போகாதுங்க... அத யாரும் திருட முடியாது. அந்த எடத்தைப் போட்டுட்டு, நா எங்கே வேணும்னாலும் போகலாம். அந்த எடத்தைப் ஃபுல்-அப் பண்றதுக்கு புதுசா ஒரு புலிகேசிதான் வரணும்!''

யு.விஷ்ணு, மதுரை.

''சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று இருந்தால், உங்கள் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்?''

 ''அப்படியே நடந்திருந்தாலும், எனக்குக் கொம்பு மொளைச்சு நான் யாரையும் குத்தப் போறது கெடயாது. றெக்கை மொளச்சு வானத்துக்கும் பூமிக்குமா பறக்கப்போறதும் கெடயாது. வாலு மொளச்சு குரங்கு மாதிரி மரத்துக்கு மரமா தாவப்போறதும் கெடயாது. எப்பவும் வடிவேலு வடிவேலாத்தான் இருப்பேன், எஞ்சாமி!''

சியாமளா ஈஸ்வரன், சேலம்.

''தேர்தல் பிரசாரம் வரை வந்து விட்டீர்கள். அப்படியே கட்சி ஆரம்பித்துவிட வேண்டியதுதானே?''

 ''கட்சி ஒண்ணும் பஜ்ஜி இல்லப்பா... நெனச்ச ஒடனே வாழக்காய சீவிப்போட்டு வறுத்தெடுக்கிறதுக்கு! நீங்க ரொம்ப விருப்பப்பட்டீங்க... ஆசைப்பட்டீங்க... அவசரப்பட்டீங்கன்னா... அடுத்த படத்துல ஆரம்பிச்சிட்டாப்போச்சு!''

கு.ரத்தினம், ஆண்டிபட்டி.

''அன்று அன்னை மடியில்... இன்று சென்னை மடியில்... எப்படி உணர்கிறீர்கள்?''

 ''பெத்தது என் அன்னை... வளர்த்தது சென்னை... இடையில் தவழ்ந்ததோ திண்ணை. எப்பூடி இருக்கு நம்ம எதுகை மோனை?!''

விகடன் மேடை - வடிவேலு

இரா.பழனியப்பன், பலாகொல்லைமேடு.

''சின்ன வயதில் சாதிக்க நினைச்சது சினிமாதானா... இல்ல வேறயா? நினைச்சதைச் சாதிச்சிட்டீங்களா?''

 ''சினிமாவ நானு நெனைக்கவே இல்லண்ணே... திடீர்னுதான் சினிமாக்குள்ள வந்து நின்னேன். நா பாட்டுக்கு செவனேனு தெருவுல திரிஞ்ச பய. வைகைக் கரையில வானத்த வெல பேசித் திரிஞ்சவனுக்கு, திடீர்னு வாய்ப்புத் தேடி ஓடுற சூழ்நிலை வந்துச்சுண்ணே... ஃபர்ஸ்ட்டு டி.ராஜேந்தர் கிட்ட வந்து நின்னேன். அப்புறம் ராஜ்கிரண் கிட்ட படம் பண்ணேன். அப்படியே திடீர்னு டேக் ஆஃப் ஆயிருச்சுண்ணே நம்ம வண்டி. முயற்சி, பயிற்சினு தெறமைய வளர்த்துக் கிட்டுப் போராடியவனுக்கு இப்போ மகிழ்ச்சியா இருக்குண்ணே!

ஊர்ல திரிஞ்சப்பவே சினிமாவுல செய்யிற அத்தன சேட்டைகளயும் செஞ்சிருக்கேன். ஆனாலும், சினிமாங்கிற சொர்க்க பூமிக்கு வருவோம்னு கனவுகூடக் கண்டது இல்லண்ணே. சினிமாங்கிறது ஒரு கிரகம்ணே... அதுவும் பெரிய கிரகம்.அதுல சாட்டிலைட்டு வுடுறது சாதாரண காரியம் இல்ல. இன்னிக்கு நெனச்சாலும் கிள்ளிப் பாத்துப் பெருமப்பட்டுக்கிற அளவுக்கு இந்த ஒசரம் எனக்குத் திருப்தியக் கொடுத்திருக்குண்ணே!''

விகடன் மேடை - வடிவேலு

முத்து ஆனந்த், வேலூர்.

''தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்த தால், உங்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?''

  ''கோடிக்கணக்கான மக்களை நேர்ல பார்க்குற பாக்யம் கிடைச்சதுதான்! செத்தா நம்ம பின்னால எத்தனை பேரு வாராங்கனு பாடையில இருந்து எந்திரிச்சுப் பார்க்க முடியாது. வாழுறப்பவே அதப் பார்க்கக் கெடச்ச வாய்ப்புங்க அது!''

கு.ரத்தினம், ஆண்டிபட்டி.

''அன்று முதல் இன்று வரை மாறாத தங்களின் பண்பு என்ன?''

  ''கேமராவைத் தவிர வெளியில நான் நடிக்கிறது இல்லங்க... இந்த ஒண்ணுலயே எல்லாமே அடங்கிருச்சா தங்கம்... ஸாரி ரத்தினம்!''

பி.எஸ்.கிருஷ்ணகுமார், சென்னை-63.

''தேசிய விருது வகைகளில் நகைச் சுவை நடிகர்களைச் சேர்க்காமல் விட்டு விட்டார்களே?''

  ''நாலு பேரை வயிறு குலுங்கச் சிரிக்கவெக்கிறதே தேசிய விருதுதானே... விருதுக்கு ஏண்ணே விருது?''

கே.குணாளன், திருச்சி-14.

'அவ்வ்...’, 'வரும் ஆனா வராது’, 'வட போச்சே’ என்று நீங்கள் சொன்ன பஞ்ச் டயலாக்குகள் தமிழக மக்களிடத்தில் சகஜமாகப் புழங்குகின்றனவே? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

 ''அது தமிழுக்கு நான் ஆற்றிய தொண்டு. எதிர்கால வரலாற்றில் இதுக்கு நிச்சயம் தவிர்க்க முடியாத எடம் உண்டு. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!''

கு.அன்பு, செய்யாறு.

''உங்கள் மகன் நடிப்பதாக இருந்ததே... என்னாச்சு?''

''இப்போ வீட்ல நடிச்சுக்கிட்டு இருக்கார். விரைவில் திரையில்!''

ஆதிமூலம், சென்னை.

''வீர விளையாட்டுகள் ஏதாவது தெரியுமா?''

''நா பெரிய மாஸ்டருய்யா... அதுவும் கும்பூ மாஸ்டர்யா... என்ன ஷாக்காயிட்டீரா... சந்தேகமா இருந்தா 'போக்கிரி’ படத்தப் பாரும் சங்கிமங்கி.''

ஆர்.மலர், கோவிலூர்.

''முதன்முதலில் பின்னணி பாடியபோது எப்படி இருந்தது?''

  '' 'எட்டணா இருந்தா எட்டூரு எம் பாட்டக் கேட்கும்’ பாட்டுதான் நான் மொத மொதலா எனக்காகப் பாடின பாட்டு. இந்த அளவுக்கு முன்னணிக்கு வந்ததுக்கு அன்னிக் குப் பாடிய பின்னணிதான் பிள்ளையார் சுழி. புண்ணியவான் இளையராஜா சார் கொடுத்த மகத்தான வாய்ப்புங்க அது. வாய்தான் பாடிக்கிட்டு இருந்துச்சு... ஒடம்பு ரெண்டு பக்கத்திலயும் றெக்கைகளைச் சொருகிவிட்ட மாதிரி மிதந்துக்கிட்டே இருந்துச்சு!''

எம்.சதீஷ்குமார், சூளைமேடு.

''எம்.ஜி.ஆர்.பற்றிச் சொல்லுங் களேன்..?''

விகடன் மேடை - வடிவேலு

  ''ஆககககககா... அருமையான கேள்வியா இருக்கே. அவரப்பத்தி வார்த்தை களால சொல்றது சாத்தியமா என்ன? ஒரு ஊர்ல பல பள்ளிகள் இருக்கு; பல வகுப்புகள் இருக்கு; பல வாத்தியாருங்க இருக்காங்க. இந்த மாதிரி நாடு முழுக்கவும் பல பள்ளிகள் இருக்கு; பல வகுப்புகள் இருக்கு; பல வாத்தியாருங்க இருக்காங்க. மொத்த பள்ளிகளுக்கும் வகுப்புகளுக்கும் ஒரே வாத்தியார்னா, அது எம்.ஜி.ஆர்-தாங்க. அவரோட பாட்டு, ஒலக சமுதாயத்துக்கே பாடம்.

'நல்ல பேரை வாங்க வேண்டும்   பிள்ளைகளே...
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே...
கிளி போலப் பேசு... இளங் குயில்    போலப் பாடு
மலர் போலச் சிரித்து நீ குறள் போல
  வாழு!’

இந்த ஒரு பாட்டுப் போதாதா ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும்!

அவரு ஒரு அட்டகாசமான வாத்தி யாருங்கிறதுக்கு அவரோட வரிகளே உதாரணம்ணே...

'பெற்றால்தான் பிள்ளையா’ங்கிற படத்துல பாடுவாரு பாருங்க... எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுதான். ஆனா, பாடப் பாட மனசுக்குள்ள நல்ல எண்ணங்கள ஊத்தெடுக்கவைக்கிற பாட்டுங்க அது...

'அன்னையிடம் நீ
அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை   வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை   வாங்கலாம்!’

பாடிக்கிட்டே இருக்கலாம்ல இந்தப் பாட்டை. எம்.ஜி.ஆரோட ராஜபாட்டைன்னே சொல்லலாம்.

'ஆயிரத்தில் ஒருவன்’ல பாடுவாரு பாருங்க...

'தோன்றும்போது தாயில்லாமல் 
 தோன்றவில்லையே...
சொல்லில்லாமல் மொழியில்லாமல் 
 பேசவில்லையே...
வாழும்போது பசியில்லாமல் 
 வாழ்வதில்லையே
போகும்போது வேறு பாதை
  போவதில்லையே
கோடி மக்கள் சேர்ந்து வாழ
வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண
வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப் பாட
வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும்
வேண்டும் விடுதலை!
’னு ஒலகத்துக்கே கிளாஸ் எடுத்த வாத்தியாருங்க அவரு. எம்.ஜி.ஆருங்கிற ஒருத்தர் லட்சக்கணக்கான புத்தகங்களுக்குச் சமமானவர்ங்க... அவரைப் பொரட்டப் பொரட்ட பாடம்தாங்க!''

அடுத்த வாரம்...

விகடன் மேடை - வடிவேலு

கவுண்டமணி குறித்துச் சொல்லுங்களேன்?

விஜயகாந்த் தமிழக முதல்வராகிவிட்டால்?

சினிமாவில் உங்களின் நெருங்கிய நண்பர் யார்?

விகடன் மேடை - வடிவேலு

- இன்னமும் சொல்வாருய்யா டீட்டெய்லு...