Published:Updated:

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

Published:Updated:
##~##

பி.எஸ்.கிருஷ்ணகுமார், சென்னை-63.

 ''கவுண்டமணி குறித்துச் சொல்லுங் களேன்..?''

''எனக்கு முன்னால தமிழ்நாட்டு மக்கள் ஆரோக்கியமா இருந்தாங்கன்னா... அதுக்கு அவரும் ஒரு காரணம்ணே. கவுண்டமணி அண்ணன் சாதனைகளை கவுன்ட் பண்ண முடியாதுண்ணே... அவரு அவருதாண்ணே!''

விகடன் மேடை - வடிவேலு

கே.ஆதி, நாகப்பட்டினம்.

''விஜயகாந்த் தமிழக முதல்வராகி விட்டால்..?''

''அப்போ, நான் பிரதமரா இருப்பேன்!''

கே.முஹமது முனாப், நாகூர்.

''சினிமாவில் உங்களின் நெருங்கிய நண்பர் யார்?''

 ''24 யூனியன்ல இருக்கிற எல்லா தொழிலாளிகளும் எனக்கு நண்பர்கள்தான். அவங்களப் பத்திப் பூரா வெவரங்களையும் எழுதணும்னா 40 ஆனந்த விகடன்களை ஃபுல்-அப் பண்ணாலும் பத்தாது. 25-வது யூனியனா நா நெனைக்கிற ரசிக மகா ஜனங்களும் என்னோட நண்பர்கள்தான்!''

எஸ்.விநோதகன், பரமத்திவேலூர்.

''மற்ற காமெடி நடிகர்களைப் போல் எல்லோரையும் அனுசரித்துப்போகாமல், ஏன் எல்லோரிடமும் சண்டை போடுகிறீர்கள்?''

 ''எங்க ஊரு பக்கம் யாருக்காவது கொழந்த பொறந்தா, ஒறவுக்காரங்க ஓடோடி வந்து பார்ப்பாக. கொழந்தை ஆணா, பொண்ணானு பாக்குற ஆர்வத்துல இல்ல. அந்தக் கொழந்த அழுவுதா இல்லையானு பாக்குறதுக்கு! காரணம், அழுவுற கொழந்ததான் ஆயுசு முச்சூடும் கோபம், ரோஷம், சூடு, சொரணை, வெட்கம், மானம் எல்லாத்தோடவும் இருக்கும்கிறது அவங்க எண்ணம். நான் பொறந்தப்ப ஊரே கேட்குற அளவுக்கு அழுத பய. பொறுக்க முடியாம வெடிக்கிறதுக்குப் பேரு கோபம் இல்ல... அது ரோஷம்!

அப்புறம் அப்பு... ஒனக்கு வயசு என்ன பதினஞ்சுதான் ஆகுதா? காமெடி நடிகர்கள் எல்லாரும் எப்படிப்பட்ட கோபக்காரங்களா இருந்தாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? என்.எஸ்.கே., சந்திரபாபு, நாகேஷ் மாதிரி யான காமெடி கலைஞர்களோட கோபத்தைப் பத்திக் கேள்விப்பட்டு இருக்கியா நீயி? புத்தகங்களைப் படிச்சாச்சும் கருக்கு மட்டை யப் பழுக்கக் காய்ச்சிய மாதிரி அவங்க காட்டிய கோபத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க. நாங்க படத்துல மட்டும்தான் காமெடி பண்றோம். மத்தபடி எங்களுக்கும் வீடு வாசல் இருக்கு; வெட்கம், மானம் இருக்கு. காமெடியன்கிறதால கண்ணையும் காதையும் மூடி வெச்சு ஆண்டவன் எங்களை அனுப்பலை. ஒன்னைய ஒருத்தன் ஏதாச்சும் பேசினா ஒனக்கு எப்புடிக் கோபம் வருமோ, அதே மாதிரிதான் எனக்கும். நல்லா கேட்குறய்யா டீட்டெய்லு!''

விகடன் மேடை - வடிவேலு

பி.எஸ்.கிருஷ்ணகுமார், சென்னை-63.

''எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந் தால் என்ன செய்திருப்பீர்கள்?''

 ''வணங்கத்தக்க அந்த வாத்தியாரைக் கண்ணாரப் பார்த்துக்கிட்டே இருந்திருப்பேன் ராசா. படத்துலயும் புகைப்படத்துலயும் பார்க்குறப்பவே அந்த ஒலக மகா உத்தம னோட சிரிப்பு சொக்க வெச்சிடுதே... நேர்ல பார்த்திருந்தா என் நெஞ்சார நெடுஞ்சாண்கிடையா விழுந்து கெடந்திருப்பேன் ராசா. ஒரு கலைஞனாவும் ரசிகனாகவும் அவர் மனசுல நீங்காத எடத்தைப் புடிச்சிருப்பேன். ஆனா, அதுக்கெல்லாம் பாக்கியம் இல்லாமப் போச்சே இந்தப் பட்டிக்காட்டுப் பயலுக்கு?''

எஸ்.கண்மணி, நடுவிக்கோட்டை.

விகடன் மேடை - வடிவேலு

''காமெடி நடிகர் என்பதையும் தாண்டி... வடிவேலுவிடம் உங்களுக்குப் பிடித்தவை, பிடிக்காதவை?''

 ''பிடிச்சது... திரையில் நான் போடுற வேஷம்... பிடிக்காதது, தரையில் என்னிடம் சிலர் போடுற வேஷம்!''

கீர்த்தனா, சூளைமேடு.

''உங்களால் மறக்க முடியாத பரிசு எது?''

''சேலத்துல 13 வயசுப் பெண் கொழந்தை ஒண்ணு கோமாவுல கெடந்திருக்கு. பலவித சிகிச்சையையும் கொடுத்துப் பார்த்த டாக்டர் ஒருகட்டத்துல, 'கொழந்தைக்கு என்ன புடிக்கும்’னு கேட்டிருக்கார். 'வடிவேலு ஜோக்குன்னா விரும்பிப் பார்ப்பா’னு பெத்தவுக சொல்லி இருக்காக. ஒடனே, என்னோட காமெடி சி.டி-யில 30, 40 வாங்கியாந்து டெய்லி அந்தக் கொழந்தைக்கு போட்டுக் காட்டி இருக்காக. திடீர்னு ஒரு நாள் கொழந்தை விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிடுச்சாம். பெத்த வயிறு குளிர்ந்து போயி கண்ணீரும் கம்பலையுமா என்னோட வீடு தேடி வந்தவுக, 'எங்க குலசாமியே நீங்கதான்’னு சொல்லி அழுதாக. கோமாவுல கெடந்த பாப்பா என்னைத் தேடி வந்து 'மாமா’னு சொன்ன வார்த்தைதான்யா இந்த ஆயுசுல எனக்கு கெடச்ச அற்புதமான பரிசு!''  

பி.ஆர்.முருகன், கும்பகோணம்.

''நீங்கள் கதாநாயகனாக நடித்த 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படம் தோல்வி அடைந்தபோது துடிச்சுப் போயிருப்பீங்களே?''

 ''அந்தப் படம் ஓடலைனு யாருங்க சொன்னது? ஊருக்கு ஊரு நல்லாத்தானே ஓடினுச்சு. முந்தியெல்லாம் ஒரு தியேட்டர்ல படம் ரிலீஸானா 100 நாட்கள் ஓடினாத்தான் வெற்றி. ஆனா, இப்போ அப்புடி இல்ல. இன்னிக்கு ஒரே படம் ஊருக்கு அஞ்சு தியேட்டர்ல ரிலீஸாகுது. தியேட்டருக்கு 25 நாளு ஓடினாக்கூட அஞ்சு தியேட்டருக்குச் சேர்த்து 125 நாளு ஓடியதுக்குச் சமம். திருட்டு வி.சி.டி. மூலமா ஓடியதையும் சேர்த்தீங்கன்னா அந்தப் படம் ஆயிரம் நாட்களைத் தாண்டிருச்சுன்னுதான் அர்த்தம். படம் எத்தனை நாள் ஓடுதுங்கிறது முக்கியம் இல்ல... எத்தனை தியேட்டர்ல ஓடுதுங்கிறதுதான் கணக்கு. முருகன்கிற பேரை வெச்சுக்கிட்டு வடிவேலன்கிட்டயே வம்பா... நீ என்ன பால் போட்டாலும் இந்த பேட்டு சிக்ஸராக்கிடும். புரிஞ்சுக்க தம்பி!''

அ.பிரகாஷ், காரைக்குடி.

''சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் அதிகம் வருவதைப் போல் நகைச்சுவை நடிகைகள் அதிகம் வருவது இல்லையே... ஏன்?''

 ''அத எங்கிட்ட ஏன்யா கேட்குற? நா என்ன எம்ப்ளாய்மென்ட் ஆபீஸா நடத்திக்கிட்டு இருக்கேன்? நடிகர் சங்கத்துலயோ தயாரிப்பாளர் சங்கத்துலயோ போய் விடாப்புடியா கேளுய்யா... விடை சொல்ற எடத்துல அவங்கதான் இருக்காங்க. நாட்டுல எதை நெனச்செல்லாம் மனுஷ மக்க கவலைப்படுறாக?!''

விகடன் மேடை - வடிவேலு

ஆர்.முத்துமணி, திருவனந்தபுரம்.

சார்லி சாப்ளின் - வடிவேல் ஒப்பிடுங்களேன்?''

''ஏம்ப்பா முத்துமணி... எப்புடிப்பா ஒனக்கு இப்புடிலாம் ஒப்பிடத் தோணுது. அவரு ஒலகம்பா... நான் உள்ளூரு.

விஞ்ஞானம் வளராத காலத்துல உடல்மொழியால ஒலகத்தையே சிரிக்கவெச்ச ஜீனியஸ் அவரு. விஞ்ஞானம் வளர்ந்த காலத்துல உடல்மொழியோட வாய் மொழியையும் சேர்த்து தமிழ் ஒலகத்தைச் சிரிக்கவைக்கிற ஆளு நானு. எந்தவிதத்துலயும் ஒப்பிட முடியாத ஒசரத்தைத் தொட்ட மனுஷன் அவரு. ஒரே ஒரு விஷயத்துலதான் அவரை யும் என்னையும் ஒப்பிட முடியும். ரெண்டு பேருமே வறுமைக்கு வாக்கப்பட்டு வாழ்ந்த வங்க... வளர்ந்தவங்க!''

மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்.  

''நாகேஷ் நடித்த 'காதலிக்க நேரமில்லை’, 'சர்வர் சுந்தரம்’, 'திருவிளையாடல்’ ஆகிய மூன்று படங்களையும் ரீ-மேக் செய்தால், எந்தப் படத்தில் நடிப்பீர்கள்?''

 ''மூணுமே சூப்பர்தான். இருந்தாலும், 'சர்வர் சுந்தரம்’தான் நமக்கு இஷ்டம். எந்த ஒதவி ஒத்தாசையும் இல்லாம தன்னம்பிக்கை யோட போராடி ஜெயிக்கிற கேரக்டர் அது தானே தம்பி. அதுல காமெடி நடிகராகவே நாகேஷ் வருவாரு. அந்தக் கதைதானேப்பா இந்த அண்ணனோட சொந்தக் கதை. நான் கடந்து வந்த பாதைய அந்தக் காலத்துலயே கதையா கற்பனை பண்ணிப் பார்த்தாரு பாருங்க பாலசந்தர் சாரு... ஒரு மனுசனோட வாழ்க்கைய உரிச்சுவெச்ச அந்தப் பாத்திரத்துல நான் எப்ப வேணும்னாலும் நடிப்பேம்பா!''

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

''மன்னிப்பது சரியா... தவறா?''

 ''மன்னிப்பது மனிதனின் மாண்பு. இருந்தாலும், செஞ்ச தவறைப் பொறுத்து தான் மன்னிப்பதும் மன்னிக்காததும்.

'மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலம்மா... இதை மறந்தவன் யாரும் தடந்தெரியாமல் மறந்தே போகுமம்மா’னு முன்னாலயே பாடி இருக்காங்க. அதுக்காக எல்லாத்தையும் மன்னிச்சிட முடியாது. தாயைக் கெடுக்கிறவனும் இருக்கான். பொறந்து கெடக்கிற பூவைக் கெடுக்கிறவனும் இருக்கான். அவனுங்களை எல்லாம் எப்படி மன்னிக்க முடியும்? மன்னிப்பதா வேணாமாங்கிறதை பாதிக்கப்பட்டவனோட மனசாட்சிதான் முடிவு பண்ணணும்கிறது எங்கருத்து!''

ச.கதிரவன், திருநெல்வேலி.

''சட்டென்று எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு, மதுரையில் சுற்றித் திரிந்த பழைய வடிவேலு உங்களுக்கு நினைவுக்கு வருவாரா?''

 ''அவரு எங்கேயும் போகலய்யா... எந்நேரமும் உள்ளார கொட்டகை போட்டு அரிக்கேன் லைட் பிடிச்சுக்கிட்டு இருக்கிற அவர்கிட்டதான்யா நல்லது கெட்டதுகள கேட்டுக்கிட்டு இருக்கேன். தெரையில பார்க்குற வடிவேலுதான் வேற. ஆனா, தரையில வாழ்ற வடிவேலு உண்மையானவன்; தன்மையானவன்யா. மனசுக்குள்ள ஒரு ஓரத்துல மதுரக்காரனுக்கான எடம் இருந்துகிட்டே இருக்குய்யா. 'மாற்றம் ஒன்றுதான் மாற்றமே இல்லாதது’னு புலிகேசியா ஒரு டயலாக் பேசுவேனே... அந்த மாதிரி எத்தனையோ மாற்றங்களைக் கடந்து வந்தாலும், மாறாத ஒரு ஆளுன்னா, அந்த மதுரைக்கார வடிவேலுதான். அங்கிட்டு இங்கிட்டு சுத்திக்கிட்டு, ஒலக அனுபவங்களையே கரைச்சுக் குடிச்சுட்டு ஒக்கார்ந்து இருக்கான்யா அவன். எல்லாத்தையும் மொத்தமா ஸ்டாக் பண்ணி வெச்சிருக்கிற அவன்கிட்ட இருந்து நெய் மாதிரி வேணுங்கிறப்ப எல்லாம் ரெண்டு கரண்டி எடுத்து ஊத்திக்க வேண்டியதுதான். அவனப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும்னா, விகடன் பிரசுரத்துல வந்திருக்கிற 'வடி வடிவேலு... வெடிவேலு!’ புத்தகத்தை வாங்கிப் படிங்க. அல்லது 'அவள் விகடன்’ வாங்கிப் படிங்க. 'வேலு பேசுறேன் தாயி’னு மணக்க மணக்க மதுரயப் பத்தி தொடர் எழுதிக்கிட்டு இருக்கான். அந்த மதுரைக்காரப் பயலோட வாழ்க்கை வரலாற்றை அதுல, நீங்க அப்புடியே பார்க்கலாம்; படிக்கலாம்; பதிவு பண்ணிக்கலாம்!''

வி.புவனா, சென்னை.

''உங்களால் மறக்க முடியாத ரசிகர் யார்?''

 '' 'அவ்வ்வ்வ்!’ சொல்லி என்னைய ரசிக்கும் பாப்பா தொடங்கி பல்லுப்போன பாட்டய்யா, பாட்டி வரைக்கும் எல்லாருமே எனக்கு ரசிகர்கள்தான். இதுல யாரைக் குறிப்பிட்டுச் சொல்றது என்னயப் பெத்த ஆத்தா... டி.வி-யில இந்த வடிவேலப் பாத்தாலே 'சேனல மாத்தாதீங்கப்பா’னு சொல்ற அளவுக்கு இந்த மண்ணுல அன்பைச் சம்பாதிச்சு வெச்சிருக்கிறவன் நான். கடலுக்கு நடுவுல வாழுறவன்கிட்ட வந்து ஒரு துளி உப்பு கேட்கிற மாதிரி இருக்கு தாயி ஒங்க கேள்வி!''

- அடுத்த வாரம்...

விகடன் மேடை - வடிவேலு

உங்களுக்கு கோவை சரளாவைவிடப் பொருத்தமான ஜோடி யார்?

நீங்க டைரக்ட் பண்ணினால் யார் ஹீரோ... யார் காமெடியன்?

எம்.ஜி.ஆர். பாடல்களை இம்புட்டு ரசிக்கிறீங்களே... சிவாஜிக்கு நிகரா தத்துவார்த்தமா எம்.ஜி.ஆர். பாடிய ஒரு பாடலை உம்மால் சொல்ல முடியுமா?

- இன்னமும் சொல்வாருய்யா டீட்டெய்லு...

விகடன் மேடை - வடிவேலு