Published:Updated:

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

பிரீமியம் ஸ்டோரி
விகடன் மேடை - வடிவேலு

முத்து ஆனந்த், வேலூர்.

''உங்களுக்கு கோவை சரளாவைவிடப் பொருத்தமான ஜோடி யார்?''

 '' 'பாட்டாளி’ படத்தில் வடிவுன்னு ஒரு பொண்ணு நடிச்சுச்சே ஞாபகம் இருக்கா? பார்க்க கறுப்பா, கெச்சலா இருந்தாலும் நல்ல களையான பொண்ணு அது. அதுதான் நமக்குச் சரியான ஜோடியா இருக்கும். அந்தப் பொண்ணோட போன் நம்பர் கெடச்சா கொஞ்சம் சொல்லுங்க தம்பி... அடுத்த படத்துல அந்த அம்மணியையே ஜோடியா பிடிச்சுப் போட்டுருவம்!''

ஆ.அண்ணாதுரை, நல்லாலம்.

''நீங்க டைரக்ட் பண்ணினால் யார் ஹீரோ? யார் காமெடியன்?''

 ''ஏம்ப்பா, 'புலிகேசி’ படம் பாக்கலையா நீயி. ஹீரோவாவும் காமெடியனாவும் பட்டையக் கௌப்பிய அந்தப் படத்தைப் பாத்துப்புட்டு இப்புடி ஒரு கேள்வி கேட்கலாமா? நானே இயக்கினாலும் நம்ம படத்துக்கு நாந்தான் ஹீரோ... நாந்தான் காமெடியன்!''

வி.இரவிச்சந்திரன், கோவிலூர்.

##~##

''எம்.ஜி.ஆர். பாடல்களை இம்புட்டு ரசிக்கிறீங்களே... சிவாஜிக்கு நிகரா தத்துவார்த்தமா எம்.ஜி.ஆர். பாடிய ஒத்தப் பாடலை உம்மால் சொல்ல முடியுமா?''

 ''என் வாயைக் கிளர்ற மாதிரி நீங்க கேள்வி கேட்டாலும், எம்.ஜி.ஆர். மேல உள்ள பாசத்துலதான் கேட்குறீங்கனு நல்லாப் புரியுது. புலமைப்பித்தன் எம்.ஜி.ஆருக்காகப் போட்ட ஒத்தப் பாட்டுப் போதும்யா... எம்.ஜி.ஆரோட தத்துவத்தைச் சொல்ற துக்கு.

'நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
உறவார் பகையார்
உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ
வருவார் இருப்பார்
போவார் நிலையார்
வாழ்வார் யார் யாரோ...’

இந்தப் பாட்டுல இல்லாத தத்துவமா ஒலகத்துல இருக்குது. எம்.ஜி.ஆர். தத்துவத்தைச் சொன்னவரு மட்டும் இல்லண்ணே... அந்தத் தத்துவமாவே வாழ்ந்துகாட்டியவருண்ணே!''

அ.ஜேம்ஸ், போரூர்.

''ஆங்கிலம் பேசத் தெரியாமல் எங்கேயாவது மாட்டிக்கொண்டு விழி பிதுங்கிய அனுபவம் உண்டா?''

''நெறய்ய தடவ பிதுங்கி இருக்கேண்ணே... ஃப்ளைட்டுல போறப்ப எல்லாம் இங்கிலீசு தெரியாம அப்பிடியே கண்ண மூடிக்கிட்டுத் தூங்குற மாதிரியே நடிச்சு எஸ்கேப் ஆகுறதுதான் நம்ம வேலை.

விகடன் மேடை - வடிவேலு

'தாய்க்குலமே தாய்க்குலமே’ ஷூட்டிங்குக்காக நேபாளம் போயிட்டு டெல்லி வாரப்ப வகையாச் சிக்கிட்டேன். என்னோட உருவத்தைப் பார்த்து தீவிரவாதினு நெனச்சாய்ங்களோ என்னவோ... ஏர்போர்ட்ல வெச்சு இங்கிலீசு, இந்தினு ஒரு அதிகாரி டஸ்ஸுபுஸ்ஸு காட்ட, தமிழையே சரியாப் பேச முடியாம நா தடுமாறி நின்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சேன். 'காதலன்’ படத்துல வார, 'ஊர்வசி ஊர்வசி’ பாட்டப் பாடி அப்படியே ஆடிக்காட்டினேன். அப்போ 'காதலன்’ படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆன நேரம். 'ஹே, பிரமிப்புடு செகண்ட் ஹீரோ’னு ஒரு தெலுங்கு அதிகாரிதான் நம்மள 'நடிகர் வடிவேலு’னு சொல்லிக் காப்பாத்தினாரு. ஆயிரந்தான் இருந்தாலும், நம்மளோட தொழில்தாண்ணே நம்மளை எப்பவுமே காப்பாத்தும்.

இங்கிலீசுல எனக்குத் தெரிஞ்சதெல்லாம் 'வாட் இஸ் யுவரு நேமு, வெல்கம், தேங்க்யூ, ஹாய், பாய்’னு ஒரு ஏழெட்டு பீஸு இருக்கும். அத வெச்சுக்கிட்டுத்தான் இத்தன வருஷமா ஃப்ளைட்டுல போய் வந்துக்கிட்டு இருக்கேன். நம்மளையும் ஆங்கில மேதாவியா நெனச்சுப் பேசுறவங்ககிட்ட, 'ஓ, ஐ ஸீ’னு சொல்லிச் சமாளிப்பேன். தப்புத்தப்பான எடத்துல ஐ ஸீ போடுறதப் பாத்துட்டு, 'இவன் ஐஸ் யாவாரியா இருப்பான் போலிருக்கே’னு அவிய்ங்க கேவலமா ஒரு ரியாக்ஷன் காட்டுவாய்ங்க... ஒடனே கடைய மூடிருவேன். அப்படியே கண்ணயும் மூடித் தூங்கிருவேன்!''

விகடன் மேடை - வடிவேலு

ச.ஐயப்பன், சென்னை-75.

''தீவிரவாதிகள் உங்களைக் கடத்திக் கொண்டுபோனால்..?''

 ''ஏம்ப்பா... ஏன்... நா நல்லா இருக்கிறது ஒனக்குப் பிடிக்கலையா. விட்டா, நீயே என்னயக் கடத்த ஆள அனுப்புவபோல இருக்கே. அப்புடி ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துச்சுனு வெச்சுக்க... அதுக்கு முழுப் பொறுப்பும் நீதான்டியேய். யாருக்கும் வாராத இந்த ஆசை ஒனக்கு மட்டும் எப்புடிப்பா வந்துச்சு? விகடன் கேள்விக்காக அடிச்சு வுட்டியா... இல்ல, உண்மையிலயே கடத்துற திட்டம் இருக்கா? யாருப்பா ஒன் பேக்ரவுண்டு?''

வெங்கட்.முத்துசுவாமி, கோவை.

''கொடிகட்டிப்பறந்த நகைச்சுவை நடிகர்களின் இறுதிக் காலம் மிகவும் கஷ்டமாக இருந்திருக்கிறதே கவனித்தீர்களா? உதாரணம்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன்...''

விகடன் மேடை - வடிவேலு

 ''வாழ்க்கையோட எந்தப் பகுதியில வேணும்னாலும் மனுசனுக்குக் கஷ்டம் வரும்ணே... விதியோட கையில நாம எல்லாம் வெளயாட்டு பொம்மையாத்தானே இருக்கோம்? காமெடி நடிகர்களுக்கு மட்டும் இல்ல... வாழ்க்கை முழுக்கச் சந்தோஷமாவும் வசதியாவும் வாழ்ந்த எத்தனையோ பேருக்கு இறுதிக் காலம் நிறைவா அமைஞ்சது இல்ல. அதுக்கெல்லாம் காரணம் தேட முடியாது. நாம சேர்த்து வெச்ச பொன்னும் பொருளும் எந்த நேரத்துலயும் நம்ம கைய விட்டுப் போகும். நாம சம்பாரிச்சு வெச்சிருக்கிற நல்ல பேரு மட்டுந்தான் கடைசிவரைக்கும் நிலைக் கும். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, தங்கவேலு, சுருளிராஜன் பேர்களை எல்லாம் தமிழ் சினிமா ஒலகம் காலத்துக்கும் மறக்காதுண்ணே... திரைனு ஒண்ணு இருக்கிற வரைக்கும் நம்மள சிரிக்கவெச்ச அந்தத் தெய்வங்களோட பேரும் இருக்கும்ணே!''

எஸ்.ஜீவா, திண்டிவனம்.

''தாம்பரத்தில் சர்சைக்கு உள்ளான நிலத்தை சம்பந்தப்பட்டவரிடமே திரும்ப ஒப்படைச்சிட்டீங்களே... அப்படின்னா, நீங்க அவரை மோசடி பண்ணியது உண்மைதானே?''

''வில்லங்கமான கேள்விகளைக் கேட்குறதுக்காகவே ஒங்கள மாதிரி ஆட்க ளுக்கு விகடன்ல பயிற்சி ஏதும் கொடுக்கிறாங்களா? நா அந்த நெலத்தை ஒப்படைச்சிட்டதா எப்பவுமே சொல்லலையேண்ணே... அந்த நிலம் சம்பந்தமான விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டுல நடந்துக்கிட்டு இருக்குறப்ப நான் எப்புடி ஒப்படைக்க முடியும்? நா எப்பவுமே நீதியை நம்புறவன். விசாரணை முடிவுல எனக்கு நிச்சயமா நியாயம் கிடைக்கும். யாரையும் அழவெச்சோ, அடிச்சுப் பறிச்சோ வாங்கிய சொத்து இல்லண்ணே அது. ஒங்களை மாதிரி  மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கவெச்சுச் சம்பாரிச்ச காசுல வாங்குன சொத்துண்ணே அது. அது எப்புடிண்ணே எங் கையவிட்டுப் போகும்? படத்துல மட்டும் இல்லண்ணே... நெஜத்துலயும் நெறய ஏமாந்தவன் நான். கோர்ட்டுல வழக்கு நடக்குறதால கொட்ட வேண்டிய குமுறல்களை எல்லாம் மனசுக்குள்ள பூட்டுப்போட்டு வெச்சிருக்கேன். அதத் தொறந்தா, அண்ணே நீங்க தாங்கமாட்டீக!''

கே.துரை, அரக்கோணம்.

''விஜயகாந்த் தமிழக முதல்வராகிவிட்டால், நீங்கள் பிரதமராகி இருப்பேன்னு சொன்னீங்க. ஆனா, விஜயகாந்த் பிரதமராகிவிட்டால்..?''

 ''அப்போ, நான் ஜனாதிபதி ஆகி இருப்பேன்!''

த.கதிரவன், திருநெல்வேலி.

''மதுரைத் தமிழைத் தவிர்த்து வேறு வட்டாரத் தமிழ் பேசி நீங்கள் நடிப்பது இல்லையே... ஏன்?''

''அப்பு, நான் பொறந்த பூமி மதுரைதானே. பொறந்த மண்ணுல பொழங்குற வார்த்தைங்கதானே நம்ம வாழ்க்கை? நம்ம நாடி நரம்பெல்லாம் ஓடிக் கலந்திருக்கிற மதுரைத் தமிழை, சென்னைக்கு வந்த பொறவும் இன்னிக்கு வரைக்கும் மறக்காம இருக்கேனே... அங்கதான் நம்ம நிக்கிறோம் அப்பு. ஒடம்பொறந்தவங்களையும் ஒறவுகளையும் ஆசாபாச வாஞ்சையோட

கொஞ்சுற அந்தத் தமிழத்தான் வாழ்க்கை முச்சூடும் பேசுவேன். அதே நேரம் ரைமிங்கா நீட்டி இழுத்துப் பேசுற ஒங்களோட நெல்லைத் தமிழ், மரியாதையையும் அன்பையும் கலந்து கட்டி அடிக்குற தஞ்சாவூர் தமிழ், கொஞ்சிப் பேசுற கொங்கு தமிழ்னு எல்லா வட்டாரத் தமிழையும் நான் ரசிக்கிறேன். ஆனா, அந்த மாதிரிப் பேசுறது கஷ்டம்ணே... அந்த மண்ணுல வாழ்ந்தாத்தான் அந்தத் தமிழ் நம்ம வாய்க்குள்ள நொழையும். பாஷை ஒண்ணும் தோசை இல்லண்ணே... நெனச்ச ஒடனே திருப்பித் திருப்பிப் போடுறதுக்கு!''

அடுத்த வாரம்...

விகடன் மேடை - வடிவேலு

29-ம் நம்பரை உங்களுக்குப் பிடிக் குமா... பிடிக்காதா?

நீங்க நல்லவரா... கெட்டவரா?

ஈழப் போராட்டங்களைத் தமிழு ணர்ச்சியோடு வரவேற்றுப் பேசியவர்கள் நீங்கள். ஆனால், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்த தி.மு.க-வை ஆதரித்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டது எந்த விதத்தில் நியாயம்?

விகடன் மேடை - வடிவேலு

- இன்னமும் சொல்வாருய்யா டீட்டெய்லு...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு