Published:Updated:

``தாத்தா இப்ப எங்களுக்குக் குழந்தை மாதிரி!'' - வாட்ஸ்அப் வீடியோவும் கருணாநிதி பேத்தி பேட்டியும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``தாத்தா இப்ப எங்களுக்குக் குழந்தை மாதிரி!'' - வாட்ஸ்அப் வீடியோவும் கருணாநிதி பேத்தி பேட்டியும்!
``தாத்தா இப்ப எங்களுக்குக் குழந்தை மாதிரி!'' - வாட்ஸ்அப் வீடியோவும் கருணாநிதி பேத்தி பேட்டியும்!

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் இருக்கும் கலைஞரின் பேத்தி இந்த பூங்குழலி'' என்கிறவர் குரலில் பாசமும் பெருமிதமும் மிளிர்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்... கேட்கும்போதெல்லாம் உன் நியாபகம் தாலாட்டும்' என ஒரு பெண், கலைஞர் கருணாநிதியின் கைப்பற்றியபடியே முட்டிப் போட்டுக் கொண்டு அவர் அருகிலிருந்து பாட, 95 வயதிலும் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. பாடி முடித்ததும், 'தாத்தா எப்படி இருக்கு?' என கருணாநிதியிடம் வாஞ்சையாக கேட்கிறார் அந்தப் பெண்.

'ஆங்ங்' என தன் வழக்கமான கரகர குரலில் அந்தப் பெண்ணின் கைகளை விடாமலேயே பதில் சொல்கிறார் கருணாநிதி. பாட்டுப் பாடிய அந்தப் பெண்ணைச் சுற்றி இரண்டு குட்டீஸ்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் வீடியோவில். வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டாக அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அந்தப் பெண் பாட்டுப் பாடிய விதமும், அவர்கள் இருவருக்கிடையிலுமான அன்பும் நம்மை ஈர்க்க அவர் யாரென தேடினோம். கலைஞரின் மகன் தமிழரசுவின் மகள் பூங்குழலி எனத் தெரியவர அவர் எண்ணை பிடித்துப் பேசினோம்.

தாத்தைவைப் பற்றி மிக உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் பூங்குழலி. ``நான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். எனக்கு இரண்டு குழந்தைகள். கோயம்புத்தூரில் கணவர், குழந்தைகளுடன் இருக்கேன். எங்க தாத்தானா எனக்கு உயிர். அவரு இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எங்ககிட்ட எப்பவும் குழந்தை மாதிரிதான் பழகுவார். என் சின்ன வயசுல இரவு நேரத்தில், தாத்தாவின் வருகைக்காகத் தம்பி, தங்கச்சி என எல்லோரும் வாசலில் நின்னு காத்திருப்போம். தாத்தா வந்ததும் அவரோட இடுப்பு, முதுகு என எல்லா எடத்துலேயும் தொத்திப்போம். எங்க அம்மா, 'தாத்தா இப்போதான் வந்திருக்காங்க. ரெஸ்ட் எடுக்கட்டும் விடுங்க'னு சொல்வாங்க. உடனே தாத்தா 'விடும்மா... எனக்கு எதுக்கு ரெஸ்ட்?'னு சொல்வார். அப்புறம் என்ன? தாத்தாவோடு சேர்ந்து டான்ஸ், பாட்டு என கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு வீடே கலகலப்பாக இருக்கும். சந்தோசம் நிரம்பி வழிந்த காலம் அது. தாத்தா 'பூங்கி' என்றுதான் என்னைக் கூப்பிடுவார். என் வாய்ஸ் நல்லா இருக்குன்னு அடிக்கடி பாடச் சொல்வார். ராகம், ஸ்ருதி, தாளம் எதுவுமே இல்லாமல் நான் மழலையாகப் பாடும் பாடலை கைத்தட்டி ரசிப்பார். அவ்வளவு பிஸியான காலத்திலும் அவர் எங்களுக்கு ஃபெர்பெக்ட் தாத்தாவாக இருந்தார்'' என நம்மையும் அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கிறார்.

``ஒருமுறை பள்ளியில் கட்டுரைப் போட்டியில் பரிசு வாங்கிட்டு வந்திருந்தேன். எப்படா தாத்தா வருவாரோனு அங்கும் இங்குமா தவிச்சேன். அவர் வந்ததும் ஓடிப்போய், 'தாத்தா, நான் பரிசு வாங்கிருக்கேன் தெரியுமா?'னு சொன்னேன். அவ்வளவுதான் தலைக்கு மேலே தூக்கிவெச்சு கொண்டாடி தீர்த்தவர், 'நானும் ஒரு பரிசு தர்றேன்' எனச் சொல்லி அவர் நூலகத்துக்குக் கூட்டிட்டுப் போனார். ஒரு திருக்குறள் புத்தகத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அந்த புத்தகத்தை பிறந்த வீட்டுச் சீதனமா இப்பவும் பத்திரமாக வெச்சிருக்கேன். 

தாத்தாக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதேநேரம், அடுத்தவங்க அவங்களுக்குப் பிடிச்சதை செய்யறதைத் தடுக்க மாட்டார். அவருக்கு சாமி கும்பிடுவது பிடிக்காது. ஆனால், 'தாத்தா நீ தேர்தலில் ஜெயிக்க நான் சாமியிடம் வேண்டிகிட்டேன்'னு சொல்வேன். சிரிச்சுக்கிட்டே தலையை வருடிக் கொடுப்பார். இந்த இயல்பு ஒரு மனுஷனுக்கு வர்றதுக்கே நிறைய பக்குவம் வேணும். அதேமாதிரி யார் வந்து உதவிக் கேட்டாலும் உடனே செய்துகொடுப்பார். எனக்கு அரசியல் ஓரளவு புரிய ஆரம்பிச்சபிச்ச வயதில், 'தாத்தா இவங்க நம்ம கட்சியா? உதவி பண்றீங்களே?'னு கேட்பேன். அதுக்கு அவர், ``பூங்கி, உதவி கேட்குறவங்களை மனிதனா மட்டும்தான் பார்க்கணும். கட்சி, தொகுதினு எந்த வரம்பிலும் வைக்கக் கூடாது'னு சொன்னார். நல்ல விஷயங்களைப் பக்குவமா புரியவைக்கிறதில் தாத்தாக்கு ஈடு இணை யாருமில்லை.

தினமும் 18 மணி நேரம் உழைக்கும் தாத்தாவைப் பார்க்கவே பிரமிப்பா இருக்கும். தினமும் ஒரு புத்தகம் படிக்கிறது, பாடல்கள் கேட்கிறது என இருப்பார். எங்களையும் உட்காரவெச்சு புத்தகத்தை வாசித்துக் காட்டுவார். கதை சொல்வார். எந்தச் சூழ்நிலையிலும் எங்களுக்கான நேரத்தை குறைச்சதில்லை. நாங்க வளர வளர மற்ற விஷயங்களில் பிஸியாக்கிட்டோம். தாத்தாவோடு தினசரி செலவழிக்கும் நேரம் குறைஞ்சுடுச்சு. அதை அப்போ நான் உணரலை. ஆனால், என் திருமண நாளில் உணர்ந்தேன். தாத்தா மாறலை. நாமதான் மாறிட்டோம். தாத்தாவை மிஸ் பண்ணிட்டோம்னு நினைச்சு வருத்தப்பட்டேன். எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்குதோ, அப்போதெல்லாம் தாத்தா வீட்டுக்கு வந்துருவேன். 'ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஓர் இடத்துல கிடைக்கும்னா, அது எனக்கு தாத்தா வீட்டில்தான். இப்பவும் தாத்தாவுக்கு நான் பட்டுப் பாவடையில் விரல் பிடிச்சு நடந்த அதே பூங்கிதான்'' என நெகிழ்வுடன் தொடர்கிறார் பூங்குழலி.

``இப்போ தாத்தா அமைதியா ஓய்வு எடுத்துட்டிருக்கார். இப்பவும் தினமும் யாராவது அவருக்கு புத்தகம் வாசிக்கணும். காலையில் எழுந்ததுமே யாரவது ஒருத்தர் நியூஸ் வாசிச்சு சொல்லணும். நான் சென்னை வரும்போதெல்லாம், 'பூங்கி அந்தப் பாட்டு பாடு, இந்தப் பாட்டு பாடு'னு கேட்டு ரசிப்பார். இப்போ, தாத்தாவை ஓர் அம்மாவாக மாறி கவனிச்சுக்கிறேன். சின்ன வயசுல எவ்வளவு ஜாலியா இருந்தோமா, அதேமாதிரி ஜாலியைத் தாத்தாவுக்கு கொடுக்க முயல்கிறோம். நிறைய பேர் அவரைச் சுற்றி இருக்கணும் எனக் குழந்தை மாதிரி ஆசைப்படறார். தினமும் என் அப்பாவும் செல்வி அத்தையும் அவரைப் பார்க்க வரணும். கொஞ்சம் நேரமாகிட்டாலே, 'எங்கே எங்கே?' எனக் கேட்க ஆரம்பிச்சுடுவார். கட்சியிலிருந்து யாராவது பார்க்க வந்திருக்காங்கன்னு சொன்னால் போதும், தாத்தா முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி வந்துடும். 'தாத்தா, பசங்களுக்கு லீவு முடிஞ்சாச்சு. நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்'னு சொன்னதும் கையைப் பிடிச்சுக்கிட்டார். தாத்தா அரசியலுக்கு ஓய்வு கொடுத்து வீட்டில் இருக்கும்போதும் அவரைப் பற்றி மக்கள் பேசிட்டே இருக்காங்க. பாராட்டறாங்க. நான் எப்பவும் எந்த இடத்திலும் கலைஞர் பேத்தி எனச் சொன்னதில்லை. ஆனால், இப்போ சொல்றேன்... கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதில் இருக்கும் கலைஞரின் பேத்தி இந்த பூங்குழலி'' என்கிறவர் குரலில் பாசமும் பெருமிதமும் மிளிர்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு