Published:Updated:

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

விகடன் மேடை - வடிவேலு

Published:Updated:
##~##

எஸ்.சஞ்சய், சென்னை.

 ''29-ம் நம்பரை உங்களுக்குப் பிடிக் குமா... பிடிக்காதா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''அட அபிஷ்டு... அது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாயிற்றே... இன்னுமா நோக்குப் புரியல!''

எஸ்.சிவராம், திருச்சி.

''நீங்க நல்லவரா... கெட்டவரா?''

 ''நல்லவன், கெட்டவன் எப்புடி இருப்பான்கிறத மனக்கண்ணுல ஓட்டிப் பாருப்பா... நா யாருங்கிறது ஒனக்குத் தெரியும்!''

விகடன் மேடை - வடிவேலு

செம்முகிலன், விருத்தாசலம்.

''ஈழப் போராட்டத்தைத் தமிழ் உணர்வோடு வரவேற்றுப் பேசியவர் நீங்கள். ஆனால், ஈழத்துக்குத் துரோகம் இழைத்த தி.மு.க-வுக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக் கேட்டது நியாயமா?''

''ஓ... அவனா நீயி!''

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

''மனுஷ ஜென்மமாப் பொறந்ததுக்காக எப்போவாச்சும் வருத்தப்பட்டு இருக்கீங்களா வடிவேலு?''

 ''அப்படி எல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் உம்மைப்போன்ற பல கோடிக்கணக்கான மக்களை மகிழவைப்பதற்காகத்தான் யாம் இப்பிறவியில் நகைச்சுவை நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறோம். பிறகு, எதற்கய்யா நான் வருந்த வேண்டும்?''

த.சத்தியநாராயணன், சென்னை.

''ஒரு நடிகன் எப்போது ஓய்வுபெற வேண்டும்? எப்போது ஓய்வுபெறக் கூடாது?''

 ''பார்க்குற எடம் பூரா கட் அவுட் வைக்குற காலத்துல ஓய்வுங்கிறத நெனச்சுக்கூடப் பார்க்கக் கூடாது. 'கெட் அவுட்’டுங்கிற வார்த்தையக் கேட்டுட்டா, அதுக்கப்புறமும் கடையத் தொறந்து வெச்சிருக்கக் கூடாது. எனக்குத் தெரிஞ்சு சிறந்த நடிகனுக்கு ஓய்வுங்கிறது இறப்புக்குப் பின்னாலதான். உதாரணத்துக்கு: சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர்., நம்பியார், என்.டி.ராமராவ், ரெங்காராவ், எஸ்.வி.சுப்பையா, நாகைய்யா, பாலய்யா... அடுத்தும் கேளய்யா... என்.எஸ்.கே., தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், பத்மினி அம்மா, சாவித்ரினு ஓய்வே இல்லாம சாதிச்சவங்களைச் சொல்லிக்கிட்டே போகலாம்!''

விகடன் மேடை - வடிவேலு

ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்.

''எங்களுக்கு சோகம் வரும்போது உங்க நடிப்பைப் பார்த்து மனதை சுகமாக்கிக் கொள்வோம். உங்களுக்கு சோகம் வந்தால் என்ன பண்ணுவீங்க?''

 ''சோகத்தைத் தாங்கணும்னா அதைக் கண்டுக்கவே கூடாதுண்ணே... அதைச் சட்டையே பண்ணாம நாம நம்ம வேலையப் பார்த்துக்கிட்டு இருந்தா, அது பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, 'இவனை ஒண்ணும் பண்ண முடியாது’னு சொல்லிக் கௌம்பிடும்ணே... என்னோட வலது கால்ல ஒரு தடவை பெரிய காயம். வலி பொறுக்க முடியலை. 'ஷூட்டிங்க தள்ளி வெச்சிட்டு ரெஸ்ட் எடுங்க’னு டாக்டரே சொல்லிட்டாரு. ஆனா, நான் அப்போதான் வழக்கத்தைவிட அதிகமா ஷூட்டிங்ல கலந்துக்கிட்டேன். என் பாணியில சொல்லணும்னா, பேஸ் மட்டம் வீக்கான அந்த நேரத்துலதான் 'வின்னர்’, 'கிங்’, 'சுந்தரா டிராவல்ஸ்’னு விளாசித் தள்ளினேன். 'வின்னர்’ல நான் நொண்டி நொண்டி நடிச்சது நடிப்பு இல்லண்ணே... என் வேதனையோட துடிப்பு!''

கே.சிவகுமார், நெற்குன்றம்.

''இளைய தலைமுறை ஹீரோக்கள் யாருடன் நீங்கள் நடித்தாலும் படம் மெகா ஹிட் ஆகிறது. ஆனால், தொடர்ந்து அவர்களுடன் நீங்கள் நடிப்பதில்லையே... ஏன்?''

 ''ரேஸ் குதிரையா ஓடுறப்ப, ரோஸ் குதிரையோ பீஸ் குதிரையோ... மாஸ் குதிரையாகத்தான் ஆசைப்படும். ஏன்னா, இங்க மாஸுக்குத்தான் காசு. எல்லாருக்கும் ஆனந்த விகடன்ல மார்க் வாங்கத்தானே ஆசையா இருக்கும்? இன்னும் ஒடைச்சு சொல்லணும்னா... சினிமாவுல தெறமையான  வேலைக்காரன் எல்லாப் படத்துலயும் வேலை பார்க்க முடியாதுண்ணே... அவ்வளவுதான்!''

விகடன் மேடை - வடிவேலு

என்.சிவகுமார், கடலூர்.

''நிஜ வாழ்க்கையில், 'நானாத்தான் உளறிட்டேனா?’ என்று எப்போதாவது ஃபீல் பண்ணி இருக்கீங்களா?''

 ''அப்பனே.... விலாசம் தவறி இந்த வேலுவிடம் வந்துவிட்டீர்... நீர் இதைக் கேட்க வேண்டியது வேறு இடமய்யா!''

வி.குணாளன், திருநெல்வேலி.

''அண்ணா, படம் முழுக்க நெல்லைத் தமிழ் பேசி நீங்கள் நடிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். செய்வீர்களா?''

 ''நிச்சயமா நிறைவேற்றுவேன் ராசா... அதுக்கு முன்னால உன் தாய் - தந்தையோட கனவுகளைச் சீக்கிரமே நிறைவேற்றுமய்யா!''

த.கதிரவன், முக்கூடல்.

''நீங்க அழகிரி ஆளா... ஸ்டாலின் ஆளா?''

 ''அவங்க எல்லோருமே என்னோட ரசிகர்கள்தானய்யா!''

ம.தமிழ்மாறன், காரைக்குடி.

''சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் விஜயகாந்த், அதே எதிர்க் கட்சித் தலைவர் இருக்கையில் அமர்வாரா?''

 ''ஹா... ஹா... ஹா... பொறுத்திருந்து பாரும் மங்குணிப் பாண்டியரே!''

ஜெர்லின் அபிஷிகா, திருச்சி.

''அருமையான குணச்சித்திர நடிப்பை யும் வெளிப்படுத்தக்கூடிய திறமை கொண்டவர் நீங்கள். ஆனால், வெறும் சிரிப்பு நடிகராகவே தொடர்கிறீர்களே?''

 ''யப்பா, ஒங்கப்பா எனக்கு மூத்தவரா இளையவரானு தெரியலை... நீ அண்ணன் மகனோ தம்பி மகனோ... 'தேவர் மகன்’ பார்த்தது இல்லையா..? 'எம்டன் மகன்’ பார்த்தது இல்லையா? குணச்சித்திர நடிப்பப் பார்க்கணும்னா 'ராஜகாளியம்மன்’ படம் பாரு. 'புலிகேசி’ படம் பாரு. பிறகு, 'பிறகு’ படம் பாரு. அதுல, வெட்டியான் கேரக்டர்ல எப்புடி வாழ்ந்திருக்கேன்னு பாரு. 'காலம் மாறிப்போச்சு’ பாரு...  'விரலுக் கேத்த வீக்கம்’ பாரு... மெய்னா  'இந்திரலோகத்தில் அழகப்பன்’ பாரு... எந்தப் படமும் பார்க்காம 'காமெடி டைம்’ மட்டுமே பார்க்குற ஆளுதானா நீயி. காசு கொடுத்து தியேட்டருக்குப் போய்ப் பாரு ராசா... காமெடி டைம்லயே காலத்தை ஓட்டாதப்பு!''

கே.ஸ்வாமிநாதன், சென்னை.

''தமிழ்த் திரையுலகின் உச்ச ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தைவிட, உங்களின் சம்பளம் அதிகமாமே?''

 ''ஆமாப்பா... அர்னால்டு, ஜாக்கிசான், சில்வர் ஸ்டோனைவிட அதிகமாத்தான் சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். இந்த ஆராய்ச்சியில எறங்கி நீயே ஒன்னைய அழிச்சுக்காத ராசா. ஒன்னோட சம்பளத்தை உருப்புடியா வாங்கி ஒம் பொழப்ப ஒழுங்கா ஓட்டுப்பா... அவ்வ்...''

வி.எஸ்.குமார், சேலம்.

''உங்க வாழ்க்கையில இருந்து எங்களுக்கு ஏதாச்சும் சொல்லணும்னா, என்ன சொல்வீங்க?''

''அடேயப்பா... வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரலை தம்பி. ஆனா, வாழ்க்கையோட எந்த நேரத்துலயும் வாசிக்க, யோசிக்க வேண்டிய சில வைர வரிகளை மனசுக்குள்ள வெச்சிருக்கேன். நீங்களும் அந்த வரிகளைக் கேட்டீங்கன்னா, வாழ்க்கைங்கிறது ஒரு வாடகை சைக்கிள்னு ஒங்களுக்குப் புரியும்.

என் இனமான எங்கய்யா நாகேஷ் 'நீர்க்குமிழி’ படத்துல ஒரு பாட்டு பாடி இருப்பார் பாருங்க...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
தொகுப்பான் சிலர் அதைச் சுவைப்பதில்லை
தொடங்குவான் சிலர் அதை முடிப்பதில்லை.

-மொத்த வாழ்க்கை ரகசியமும் இந்த வரிகள்ல முடிஞ்சிடுச்சுப்பா தம்பி. ஒண்ணுக்கு மூணு தடவை இதக் கேட்டீங்கன்னா எதுவும் நிரந்தரம் இல்லங்கிறது புரியும். அடுத்த பாட்டு...

மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவவிட்டால்
தப்பி ஓடவிட்டால்
நம்மை ஆபத்தில் ஏற்றிவிடும்
படுபாதத்தில் தள்ளிவிடும்
அடித்தாலும் உதைத்தாலும் வழிக்கு வராது
அதை அப்படியேவிட்டால் அடங்கிவிடாது
மனத்தாலும் பணத்தாலும் மயங்கிவிடாது
நமக்குள்ளே இருந்துகொண்டு நன்மை தராது

- நம்ம மனசை அப்புடியே ஸ்கேன் பண்ண பாட்டுப்பா இது. மனசோட ரிமோட்டை நாம ரொம்ப கேர்ஃபுல்லா யூஸ் பண்ணணும்பா... அடுத்த பாட்டு...

மனிதனாக வாழ்ந்திட வேண்டும்
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
வலது கையடா
தனியுடமை கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா

-கேட்குறப்பவே நரம்பைத் தெறிக்க வைக்குற பாட்டுப்பா இது. மொத்த வாழ்க்கைக்கும் இந்த மூணு பாட்டும் போதும்ப்பா!''

விகடன் மேடை - வடிவேலு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism