Published:Updated:

விகடன் ஜன்னல்!

ரைட்டர்

விகடன் ஜன்னல்!

ரைட்டர்

Published:Updated:

ஹேப்பி பர்த் டே கமல்!

விகடன் ஜன்னல்!

ழக்கமாகத் தனது பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடாதவர் கமல்ஹாசன். ஆனால், இந்த வருஷம் நவம்பர் 7-ம் தேதி ஆச்சர்யம்! திரை உலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து ஒரு கெட்-டு-கெதர் பார்ட்டியாகத் தனது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார். அநேகமாக இத்தனை வருடத்தில் இப்போதுதான் முதல் முறையாகத் தனது பிறந்த நாளைத் திரை உலக நட்சத்திரங் களோடு கொண்டாடி இருப்பார் கமல். பார்ட்டிக்கு வந்தவர் களைத் தனது மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவுடன் நின்று வரவேற்ற கமல், விஜய் மனைவி சங்கீதாவிடம் அக்ஷராவுக்கு கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ அறிமுகம் கொடுத்தார். நிகழ்ச்சி முழுக்க கமல் ஸ்பெஷல் பாடல்கள்தான். பல கதைகள் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்த விருந்தினர்கள் ஒருகட்டத்துக்குப் பிறகு, அதிரடிப் பாடல்களுக்குத் தங்களை மறந்து ஆடத் தொடங்கிவிட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லோரும் கமலை நடனமாட அழைக்க... மறுத்துக் கொண்டே இருந்தவர், 'சகலகலா வல்லவன்’ படத்தின் 'இளமை... இதோ இதோ...’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் ஆடத் தொடங்கிவிட்டார். தனது டிரேட் மார்க் ஸ்டெப் போட்டு அவர் ஆட, அதற்கு அதிஉற்சாக டெசிபலில் ஒலித்த விசில்... விஜய்யுடையது!     உடனே, கூட்டத்துக்குள் பதுங்கி இருந்த விஜய்யைக் குண்டுக்கட்டாகத் தூக்கிவந்து மேடையேற்றிவிட்டார்கள். 'காசு மேல காசு வந்து...’ பாடலுக்கு கமலும் விஜய்யும் ஆட, அது தான் பார்ட்டியின் க்ளைமாக்ஸ். ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் பதிவுசெய்யப்பட்டு, இரண்டே இரண்டு டி.வி.டி-க்களாகி இருக்கின்றன. கமல் கைவசம் ஒன்று... விஜய் வசம் இன்னொன்று!

வெட்கத்தில் சிவக்கும் பூ... குஷ்பு!

விகடன் ஜன்னல்!

கலைஞர் டி.வி-யில் சீரியல் தயாரித்து ஒளிபரப்பும் சினிமா புள்ளிகள் பலரும் நைஸாக நழுவிக்கொண்டு இருக்க, அங்கு புது சீரியல் தயாரிக்கும் வேலையில் தில் லாகக் களம் இறங்கி இருக்கிறார் குஷ்பு. ''ரொம்பத்தான் தைரியம்மா உனக்கு!'' என்று கருணாநிதி சொல்ல, வெட்கத்தில் சிவந்திருக்கிறது குஷ்பு முகம்!

ஜனவரி பிறந்தா வழி பிறக்கும்!

வேல்முருகன் பா.ம.க-வில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர், பா.ம.க. நிர்வாகி கள் பலர், அவரைத் தங்கள் இல்ல விசேஷங்களுக்கு அழைத்திருந்தனர். இப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும், அழைப்பு வந்த நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்கிறார் வேல்முருகன். டிசம்பர் கடைசிவரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 'சிறப்பித்து’விட்டு, ஜனவரியில்தான் புதுக் கட்சி வேலைகளைத் தொடங்கத் திட்டமாம்!

திகாரில் இருந்து கனி!

விகடன் ஜன்னல்!

வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மகன் மனுராஜ் திருமணத்தை அப்பா கருணாநிதி நடத்தி வைக்க, மணமக்களை வாழ்த்தி மகள் கனிமொழி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கடிதத்தில், 'மணமகள் ருக்மிணியை நான் சந்தித்த குறுகிய நேரத்தில், அவர் உணர்வுபூர்வமான சமூக அக்கறை உள்ள பெண் என்பதைப் புரிந்துகொண்டேன். அவரை நான் சந்தித்தபோது இரண்டு பேருமாகச் சேர்ந்து முதலில் சென்ற இடம் புழல். இப்போது நான் திகாரில் இருந்து இதை எழுதுகிறேன்’ என்று உருக்கமாக முடித்திருக்கிறார் கனி!

கல்யாணம் பண்ணு... கொண்டாடு!

விகடன் ஜன்னல்!

ஹர்பஜன் சிங்கை நீக்கிவிட்டு அணியில் இடம் பெற்றதால் சர்ச்சை கிளம்பிய நிலையில், அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒன்பது விக்கெட்டுகள் பறித்த உற்சாகத்துடன் காதலி ப்ரீத்தியைக் கைப்பிடித்து இருக்கிறார் தமிழக கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஷ்வின்.

ப்ரீத்தி நாராயணன், அஷ்வினோடு பள்ளியில் படித்தவர். ஏப்ரல் மாதம் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற சமயம், இருவர் வீட்டிலும் காதலுக்குப் பச்சை சிக்னல் விழுந்திருக்கிறது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்துக்கு முந்தைய நாள் வரவேற்பில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், பாலாஜி, பத்ரிநாத் உள்ளிட்ட தமிழக ரஞ்சி கிரிக் கெட் பிளேயர்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த அன்று மாலையே கொல்கத்தாவுக்குப் புது மனைவியோடு பறந்திருக்கிறார் அஷ்வின். டோனி தலைமையில் பார்ட்டி கொடுத்து அஷ்வினை வாழ்த்தியிருக்கிறது டீம் இந்தியா!

மைக் 1 காலிங்... மைக் 2...

விகடன் ஜன்னல்!

2009 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம். சென்னை தீவுத்திடலில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி, திருமாவளவன் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சோனியாவும் மேடை ஏறினார். அப்போது சோனியாவின் பேச்சை காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் மொழிபெயர்த்தார். இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக சோனியா உருக்கமாகப் பேசியதை ஞானதேசிகன் ரொம்பவே சுருக்கமாக முடித்தார். அதைக் கேட்டுக் கடுப்பான தங்கபாலு, சோனியா பேசிக்கொண்டு இருக்கும்போதே எழுந்து சென்று ஞானதேசிகனிடம் இருந்து மைக்கைப் பிடுங்கி, தானே முழுமையாக மொழிபெயர்த்தார். அப்போது மைக்கைப் பறிகொடுத்த ஞானதேசிகன்தான், இப்போது தங்கபாலுவிடம் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியைத் தட்டிப் பறித்திருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism