Published:Updated:

விகடன் மேடை - வைகோ

விகடன் மேடை - வைகோ

விகடன் மேடை - வைகோ

விகடன் மேடை - வைகோ

Published:Updated:
##~##

கே.குணா, ஆம்பூர்.  

 ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உங்களை விசாரித்தார்களா?''

 ''ஆம்; கிரீன்வேஸ் சாலையில் உள்ள 'மல்லிகை’ என்ற அரசுக் கட்டடத்தில், சிறப் புப் புலனாய்வுக் குழுவினர், ஐந்து நாட்கள் என்னை விசாரித்தனர். பூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 250-வது சாட்சியாக, கூண்டில் ஏற்றி என்னை விசாரித்தார்கள்.

பத்தாவது நிமிடத்திலேயே என்னைப் பிறழ் சாட்சி என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குப் பின்னரும், என்னை மூன்று நாட்கள் விசாரித்தார்கள். அந்த விசாரணையில் என்னிடம் கேட்ட கேள்விகளையும் நான் அளித்த பதில்களையும் தொகுத்து, ஒரு புத்தகமாகவே வெளியிட இருக்கிறேன்!''

விகடன் மேடை - வைகோ

எம்.பார்வதி, சுவாமிமலை.  

''நீங்கள் கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவரா?''

 ''இல்லை. என் மூத்த சகோதரி, என் இளைய மருமகன் ஆகியோர் கிறித்துவ மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். என் தாயும் என் மருமகளும் இந்துக் கடவுள்கள் மீது பக்தி மிக்கவர்கள். எங்கள் கிராமத்தில், இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என்ற வேறுபாடு இன்றி, அவர்கள் வழிபாடு களுக்கு உதவியாக இருக்கின்றோம். நான் பகுத்தறிவுவாதி.

தலைசிறந்த புரட்சியாளரும் பொது உடைமையாளருமான ஃபிடல் கேஸ்ட்ரோ, தான் படித்த நூல்களிலேயே தன்னை மிகவும் ஈர்த்தது பைபிளின் புதிய ஏற்பாடு என்றும், அதிலும் குறிப்பாக, இயேசுவின் மலைப் பிரசங்கம் என்றும் கூறினார். ஆனால், அவர் கிறித்துவர் அல்ல.

திருக்குறள், விவிலியம், திருக்குர்ஆன், மகாபாரத, இராமாயண இதிகாசங்கள், சைவத் திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், அண்ணல் அம்பேத்கர், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நூல்கள் என அனைத்திலும் என் மனம் கவர்கின்ற பகுதி களை விரும்பிப் படிப்பேன்!''

சி.நாகமணி, சென்னை-18.

''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''

விகடன் மேடை - வைகோ

 ''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!

அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.

'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.

அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.

தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''

இ.கிரி, பவானி.

''கரடுமுரடான சங்கத் தமிழ்ப் பாடல்களைக்கூட நீங்கள் கடகடவெனச் சொல்லுகிறீர்களே, இந்த மனப்பாட சக்தி உங்களுக்கு எப்படி வந்தது?''

 ''சின்ன வயதில் மேடைப் பேச்சுக்கு ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால், பாடல்களை மனனம் செய்தேன். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்போது, தேர்வுகளில்  குறிப்பாக தமிழில் முதல் மதிப்பெண்ணும் பரிசும் பெறுவேன். தமிழ்ப் பாடத்துக்கு உரிய பாடல்களை, சங்க இலக்கியம் முதல் பாரதி வரை முழுமையாக மனனம் செய்யும் பழக்கம் பள்ளிப் பருவத்திலேயே ஏற்பட்டது. பின்னர், பாரதிதாசன் பாடல்கள், மனம் கவர்ந்த ஆங்கில இலக்கியப் பாடல்களை மனனம் செய்தேன். என் தந்தையார் திருக்குறளையும் நாலடியாரையும் முழுமையாக மனனம் செய்தவர். அதுவும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தது.

விகடன் மேடை - வைகோ

சின்ன வயதிலேயே மனனம் செய்தவைதான், பசுமரத்து ஆணியாகப் பதிந்துவிட்டது. நடு வயதில் மனனம் செய்ததை, அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளாவிட்டால், மறந்துபோகும்!''

எ.ராம்மோகன், கருங்குழி.

''உங்களுக்கு பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்டத் தெரியுமா?''

 ''தரையில் ஓடும் சக்கரம் பூட்டிய அனைத்து வாகனங்களையும் ஓட்டத் தெரியும்! இளம் பருவத்தில், இரட்டைக் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியை, வில் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்வதில், எனக்கு மிகவும் விருப்பம். சொந்தமாக ராஜ்தூத் மோட்டார் சைக்கிள் வைத்து இருந்தேன். 73-ம் ஆண்டு, சென்னையில் இருந்து காரை ஓட்டிச் செல்லும் போது, திண்டிவனத்துக்கு அருகில், மழையில் டயர்கள் சறுக்கி, தலை குப்புறக் கவிழ்ந்து, எதிரில் வந்த லாரியிலும் மரத்திலும் மோதாமல் பள்ளத்தில் விழுந்து, கையில் மட்டும் காயத் துடன் தப்பித்தேன். அதற்குப் பின்னர் கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன்!''               கு.இராமதாசு, கொடுங்காலூர்.

''விடுதலைப் புலிகளை விமர்சனமே இல்லாமல் ஆதரிப்பவரா நீங்கள்?''

 ''ஆம்; வீரத்தாலும் தியாகத்தாலும் அவர்களுக்கு நிகராக விடுதலைப் போர் நடத்தியவர்கள் வேறு எவரும் இல்லை. தங்களைவிடப் பல்லாயிரம் மடங்கு பலத்தைப் பல நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட கொடிய பகைவர்களை எதிர்த்து, உலகில் வேறு எந்த விடுதலை இயக்கமும் இப்படிக் களம் கண்டது இல்லை. ஈடு இணை சொல்ல முடியாத ஒழுக்கமும் அணு அளவும் தன்னலம் அற்ற தலைமைப் பண்பும்கொண்ட மாவீரர் திலகம் பிரபாகரனை என் இதயம் நிரம்ப நேசிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டா லும், அது அங்கு உள்ள கள நிலையைப் பொறுத்துத்தான் எடுக்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து!''

லலிதா, காஞ்சிபுரம்.

''மொரார்ஜி, இந்திரா, ராஜீவ், வி.பி.சிங், நரசிம்மராவ், தேவ கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் என எல்லோரும் உங்களுக்கு அறிமுகம் உண்டு. ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரிகளில் சொல்லுங்கள்?''

''மொரார்ஜி தேசாய்: மனதில் பட்டதை ஒளித்துப் பேசத் தெரியாது. விட்டுக்கொடுக் கும் மனப்பான்மை இல்லாத, வீண்பிடிவாதக் காரர். இந்தியில் எனக்கு வந்த கடிதத்தை, நாடாளுமன்றத்தில் அவர் முகத்துக்கு நேராகக் கிழித்து எறிந்தபோதும், என் மீது கோபப்பட வில்லை.

இந்திரா காந்தி: நெருக்கடி நிலையை அறிவித்த சர்வாதிகாரி என விமர்சிக்கப்பட்டாலும், நாடாளுமன்ற விவாதங்களில் விமர்சனங்களைப் பொறுமையோடு கேட்பார். 1984 ஆகஸ்ட் திங்களில், ஈழத் தமிழர்களைப் பற்றி, நான் மிக உணர்ச்சிவசப்பட்டு உரை ஆற்றிய பின் அவர் பேசும்போது, 'உறுப்பினரின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்; இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள்தாம், அம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்’ என்று பேசினார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவை யில், அதுதான் அவர் ஆற்றிய கடைசி உரை. அவரது மறைவு, தமிழ் ஈழத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ராஜீவ் காந்தி: நாடாளுமன்ற விவாதங்களில் பல முறை அவருடன் கடுமையாக வாதிட்டு உள்ளேன். ஒரு முறை நான் பேசிய பின்னர், அவர் அவையைவிட்டு வெளியேற முயன்றார். 'பதில் சொல்லாமல் எங்கே ஓடுகின்றீர்கள்?’ என்று கேட்டேன். மீண்டும் திரும்பி வந்து, 'எனக்கு அடுத்த அவையில் வேலை இருக்கின்றது’ என்று கோபப்படாமல் சொல்லிவிட்டுச் சென்றார். என்னிடம் பிரியத்துடனும் நேசத்துடனும் பழகினார்.

வி.பி.சிங்: 'விதுரனை இழந்த துரியோதனனைப் போல், வி.பி.சிங்கை இழந்த காங்கிரஸ் தோற்கப்போகின்றது’ என்று எச்சரித்தேன். பின்னர், அவர் பிரதமரானபோது, நான் பேசியதை நினைவுகூர்ந்த அவர், தொழிலாளர்கள் தினமாகிய மே முதல் நாள் அன்று, மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத் தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று அன்றே அதை அறிவித்தார்.

நரசிம்ம ராவ்: பல மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர். நிதானமாகப் பதில் சொல்வார். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர் களுக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்தினார்.

விகடன் மேடை - வைகோ

ஐ.கே.குஜ்ரால்: எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும், ஆத்திரப்படாமல் விளக்கம் தருவார். இலங்கைக் கடற்படையின் ஹெலிகாப்டர், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் குண்டுகளை வீசி, ஆறு தமிழக மீனவர்களைப் படுகொலைசெய்ததை இந்தி யக் கடற்படை வேடிக்கை பார்த்துக்கொண்டு, நொண்டி வாத்தைப் போல உட்கார்ந்து இருக்கின்றது என்று குற்றம்சாட்டி ஒரு கடிதத்தை, அவரிடமே நேரில் தந்தபோது, அவருக்கு என் மீது வருத்தம்.

தேவ கவுடா: எல்லோரையும் மதித்துப் பழகுவார். விவசாயிகள் பிரச்னைகளைப் பற்றி சபையில் அழுத்தமாகப் பேசுவார். என்னிடம், மிக்க அன்பு காட்டுவார்.

அடல் பிஹாரி வாஜ்பாய்: அற்புதமான நாடாளுமன்றவாதி. என்னைத் தன் செல்லப் பிள்ளையாகவே பாவித்தார். ஒன்றா? இரண்டா? எத்தனை எத்தனையோ சம்பவங்கள். என் நெஞ்சம் மறக்குமா அந்த நேசம்?

98, 99 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், குடியரசுத் தலைவர் மீதான நாடாளுமன்ற விவாதத்தை, நானே வழிமொழிந்து பேச வேண்டும் என்ற அவரது விருப்பப்படியே வழிமொழிந்தேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவ்வாறு வழிமொழிந்து பேசியது நானாகத்தான் இருப்பேன். அவரது அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போதும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களை அடுத்து, நானே விவாதத்தில் பேச வேண்டும் என்றார். நான் உரை ஆற்றும் வேளைகளில், அவர் அறையில் இருந்து அவைக்கு வந்து என் பேச்சைக் கேட்டு, மேசையைத் தட்டி வரவேற்றுவிட்டுத்தான் செல்வார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுத்து, அதற்கான அறிவிப்பைச் செய்ய இருந்த வேளையில், நான் அவரை  இல்லத்தில் நேரில் சந்தித்து, அது தமிழ்நாட்டுக்குக் கேடாய் அமையும் என்றபோது, என் வேண்டுகோளை ஏற்று, முடிவையே மாற்றினார்.

டாக்டர் மன்மோகன் சிங்: சிறந்த பொருளாதார மேதை. மிகவும் எளிமையானவர். நான் டாக்டர் மன்மோகன் சிங் என்ற மனிதரை மதிக்கின்றேன். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை எதிர்க்கின்றேன் என்று அவரிடமே நேரில் சொன்னபோது, 'உங்கள் அணுகுமுறையை மெச்சுகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

நான் எழுதிய 'சிறையில் விரிந்த மடல்கள்’ நூலின் ஆங்கில மொழியாக்கமான 'ஃப்ரம் தி போர்டல்ஸ் ஆஃப் எ ப்ரிசன்’ ( From the Portals of a Prison) என்ற நூலை, சென்னையில் வெளியிட்டுப் பேசியபோது, 'வைகோ பொதுநலனுக்காக மட்டுமே என்னை வந்து சந்திப்பார். ஐ சல்யூட் ஹிம் (I Salute him)’  என்றார்!''

அடுத்த வாரம்...

விகடன் மேடை - வைகோ

 ''வாழ்க்கையில் தாங்கள் எடுத்த முடிவுகளுள், நல்ல முடிவு எது? தவறான முடிவு எது?''

''நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பாரா? நீங்கள் வரவேற்பீர் களா?''

''ஜெயலலிதாவின் மூளையாகச் செயல்படும் சோ பற்றி?''

-புயல் வீசும்