
ரஹ்மான் முதல்... சிவமணி வரை!
''கோடம்பாக்கம், தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிவிட்டது. அந்த வகையில் ஒரு கோடம்பாக்கத்துக்காரனாக எனக்குப் பெருமைதான்'' என்று தொடங்குகிறார் இயக்குநர் ராஜா.

##~## |
1986-ல் வேதம்மாள் அவென்யூவுக்குக் குடி வந்தோம். அன்று முதல் இங்குதான் குடியிருக்கிறோம். இந்தத் தெரு ஒரு முட்டுச் சந்து. அதில் முதலில் தொடங்குவது எங்கள் வீடு. எங்கள் வீட்டின் மாடியில் நின்று பார்த்தால், ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் வீட்டைப் பார்க்கலாம். அவர் திலீப்பாக இருந்து ரஹ்மா னாக மாறியது வரை அருகில் இருந்து பார்த்தவர்கள் நாங்கள். அவர் இங்கு குடியிருக்கிறார் என்பது சுப்புராயன் நகருக்கான பெருமைகளில் ஒன்று. இந்த முனை டீக்கடையில் அதிகாலை யில் டீ குடித்துக்கொண்டே ரஹ்மானோடு பணிபுரியும் இசைக் கலைஞர்களோ இசைப் பள்ளியில் படிக்கும் இளைஞர்களோ பேசிக்கொண்டு இருப்பார்கள்.

கோடம்பாக்கம் என்றதும் பளிச் என நினைவுக்கு வரும் லிபர்டி, ராம் தியேட்டர்கள் இன்று இல்லா தது வருத்தத்தைத் தருகிறது. அங்கு அவ்வளவு படங்கள் பார்த்திருக்கிறேன். கோடம்பாக்கத்தின் அடுத்த அடையாளம் அம்பேத்கர் சிலை. அவருடைய பிறந்த நாள், நினைவு நாட்களில் ஏரியாவே பரபரப்பாகிவிடும். தலைவர்கள் முண்டிஅடித்துக்கொண்டு சிலைக்கு மாலையிட்டு கேமரா வுக்கு போஸ் கொடுப்பதைப் பல முறை பார்த்து இருக்கிறேன். ஞானதேசிக ஸ்வாமிகள் முக்தி அடைந்த சமாதி இங்கு இருக்கிறது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் டிரம்ஸ் சிவமணி கட்டணம் வாங்காமல் நடத்தும் கச்சேரிகளை தவறவிடவே மாட்டேன்.


இப்படி கோடம்பாக்கம் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எங்களுடன் அருகருகே குடியிருந்தவர்கள், காலப்போக்கில் வெவ்வேறு ஏரியாக்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். நாங்கள் மட்டும் வெவ்வேறு வீடுகளில் வாடகைக்குக் குடியிருந்ததும் சொந்தமாக வீடு கட்டியதும் கோடம்பாக்கத்திலேயே என நினைக்கும்போது, கோடம்பாக்கத்துக்கும் எங்களுக்கும் ஏதோ பூர்வஜென்ம உறவு இருப்பதாகவே தோன்றுகிறது!''
- ம.கா.செந்தில்குமார்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்