##~##

சு.அருளாளன், வந்தவாசி.

 ''நீங்கள் நடத்திய அதிரடி ரெய்டுகள் பற்றிச் சொல்லுங்களேன்?''

 ''பல ரெய்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தாலும், காஞ்சிபுரத்தில் 1999 அக்டோபர் மாதத்தில் உலகின் மிகப் பெரிய பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்தின் மீது நான் எடுத்த நடவடிக்கை குறிப்பிடத்தகுந்தது. மதுராந்தகம் வட்டம், மாமண்டூரில் இயங்கிய இந்தக் குளிர்பான ஆலையின் தயாரிப்பு மிக மோசமாக இருந்தது என்று நுகர்வோர் அமைப்பைச் சார்ந்த சம்பத் முதலியார் என்பவரது மனுவின் மீது விசாரணையும் தணிக்கையும் செய்தேன். அந்தக் குளிர்பான ஆலையில் தயாரித்த சில பாட்டில்களைக் கைப்பற்றி கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பியபோது, 'அந்தக் குளிர்பானம் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ என்று சான்றிதழ் அளித்தது!

அந்தக் குளிர்பான நிறுவனத்தின் மீதான விசாரணையின்போது மிகச் சிறந்த வழக்கறி ஞர்கள் அனைவரும் ஆஜர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக 73 வயதான சம்பத் முதலியார் என்கிற சாதாரண முதியவர் தனது வாதங்களை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, அந்தக் குளிர்பான ஆலையை மூட 13 பக்க உத்தரவைத் தட்டச்சில் தயார் செய்தோம்!

விகடன் மேடை - சகாயம் I.A.S

'அடுத்த நாள் காலை எட்டு பூட்டுக்களைக் கொண்டுவாருங்கள்’ என செங்கல்பட்டு வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினேன். அன்று காலை மாமண்டூரில் இருக்கக்கூடிய அரசினர் விருந்தினர் இல்லத்தில் மதுராந்தக வருவாய் கோட்டாட்சியரை அழைத்து, இந்த உத்தரவை அளித்து எட்டுப் பூட்டுக்களையும் கையிலே கொடுத்து 'எதிரில் இருக்கும் அந்த ஆலையை இந்த உத்தரவுப்படி மூடிவிட்டு வாருங்கள்’ என்று அறிவுறுத்தினேன். உத்தரவைப் பெற்றுக்கொண்டவர் தயங்கியபடியே, 'பன்னாட்டு நிறுவனத்தை மூடுகிறோமே, எதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவரைக் கேட்டுவிடுவோம்’ என்று சற்று அச்சத்துடன் சொன்னார். அதற்கு, 'மாவட்ட ஆட்சித் தலைவரைக் கேட்டால், நிச்சயம் அனுமதிக்க மாட்டார். எனவே, நீங்கள் சென்று இந்த உத்தரவை நிறைவேற்றுங்கள்’ என்று சொன்னேன்.

காலை 10 மணிக்கு உள்ளே சென்றவர் ஒரு மணி நேரம் கழித்தும், ஆலையை மூடி விட்டு வரவில்லை. ஒரு மணி இரண்டு மணி ஆகி... அது மூன்று மணியும் ஆகியது! பின்னர் பதற்றத்தோடு வந்தவர், 'ஆலை நிர்வாகம் ஆலையைப் பூட்ட மறுக்கிறது’ என்று கூறினார். உடனே நான், 'இது சட்டப்படியான உத்தரவு. இதனை ஏற்க மறுத்தால் நானே நேராக வந்து ஆலையை இழுத்து மூடுவதோடு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஆலை நிர்வாகத்தினரிடம் சொல்லுங்கள்’ என்று கூறினேன். உள்ளே சென்ற அலுவலர் அப்படியே கூறியவுடன் குளிர்பான நிறுவனத் தினர் ஒதுங்கி ஆலையைப் பூட்ட அனுமதித்தனர். உலகின் மிகப் பெரிய பன்னாட்டுக் குளிர்பான நிறுவனம் எனது உத்தரவால் இழுத்து மூடப்பட்டது. பூட்டியதோடு, காஞ்சி புரம் மாவட்டத்தில் அந்த நிறுவனத்தின் பானங்களை விற்கத் தடை செய்தும் உத்தரவிட்டேன். இந்த நடவடிக்கைக்காக மேலதிகாரிகள் என்னைக் குடைந்தெடுத்துவிடுவார்கள் என்பதற்காக, அதனைத் தவிர்த்திட செய்யூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு ஆய்வுக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினேன். வீட்டில் என்னிடம் எனது துணைவியார் மாவட்ட ஆட்சியர், தொழிற் செயலர், தலைமைச் செயலர் ஆகிய உயர் அலுவலர்கள் தொலைபேசியில் வந்தனர் என்று கூறினார். உடனே நான்,

விகடன் மேடை - சகாயம் I.A.S

'அப்படியெனில், நாளையே பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்புவதற்குத் தயாராக இருக்க வேண்டும். என்னை மாறுதல் செய்துவிடுவார்கள்’ என்று கூறினேன்.

சாதாரண அடிஷனல் டிஸ்டிரிக்ட் மாஜிஸ்திரேட் ஆக ஒரு பன்னாட்டு நிறுவனத்தை மூடியதோடு, அதன் விற்பனையைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது, இன்றும் எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது!''

ச.சிவஞானம், காஞ்சிபுரம்.

''உங்களின் நேர்மையான அணுகுமுறைக்கு சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ரியாக்ஷன் என்ன?''

 ''சில உயர் அலுவலர்கள் தங்கள் வெறுப்பை - கசப்பு உணர்வை என் மீது காட்டியதாக நான் கேள்விப்பட்டது உண்டு. மேலும், நான் உயர்வாகக் கருதிய ஒரு சில உயர் அதிகாரிகள் எனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்ப முயற்சித்ததும், ஒரு சில பத்திரிகைகளில் தங்களின் செல்வாக் கைப் பயன்படுத்தி, என்னைப்பற்றி அவ தூறாக எழுதக் காரணியாக இருந்ததும் எனது கவனத்துக்கு வந்தது. அது எனக்குச் சற்று வருத்தத்தை அளித்தாலும், அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதே நேரத்தில், சில உயர் அலுவலர்கள் என்னுடைய நேர்மையைத் தொடர்ந்து அங்கீகரித்து வந்ததையும், சிலர் என்னை நேரில் பாராட்டியதையும், வெகு சிலர் நான் இல்லாதபோதும் மற்றவர்களிடத்தில் மனம் திறந்து போற்றியதையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து, அதனையே என் நேர்மைக்கு ஊக்கமாகக் கருதுகிறேன்!''

சு.ராமஜெயம், சென்னை.

''உங்களின் சின்ன வயதுக் கனவு என்னவாக இருந்தது?''

''சின்ன வயதில் எனக்கு எழுத்துக்களின் மீது ஈர்ப்பு உண்டு. வார்த்தைகளின் மீது ஒரு வசீகரமும் உண்டு. தினம் ஏழு கி.மீ. நடந்து சென்று படிக்கும் எல்லைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது வகுப்பில் முதல் மாணவன். இரண்டாவது நிலையில் சுலோச்சனா என்ற

விகடன் மேடை - சகாயம் I.A.S

மாணவி. நன்றாகப் படிக்கின்ற எங்கள் இருவருக்கும் சுதந்திர தின விழாவில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நாராயணசாமி எழுதிக்கொடுத்த உரையை மிக விரைவாக மனப்பாடம் செய்து பேசினேன். அன்று முதல் பரிசாக நான் பெற்றது ஒரு சிவப்பு நிற பென்சில். எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. பெருமிதம். பேச்சின் மீது எனக்கு ஈர்ப்பு பிறந்தது இங்கேதான்.

விளைவு, புதுக்கோட்டையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும், கட்சிப் பாகுபாடு இன்றி அரசியல் கூட்டங்களுக்கும் பேச்சினைக் கேட்பதற்காகச் சிறுவனாக இருந்த நான் பார்வையாளனாகச் சென்று வந்துகொண்டு இருந்தேன். பேரறிஞர் அண்ணாவின் உரைவீச்சுக்கு நான் ரசிகன். தொடர்ந்து புதுகை மன்னர் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரி மாணவனாகப் பல பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறேன். அப்போது பேச்சாளன் - எழுத்தாளன் என்பதுதான் என் கனவாக இருந்தது. ஆனால், பள்ளிப் பிராயத்தில் என் அண்ணன்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மிதிவண்டியில் கடக்கிறபோதும், கல்லூரி நண்பர்களுடன் மாவட்ட ஆட்சியர் இல்லத்தைக் கடக்கிறபோதும் நானும் இது மாதிரி ஒருநாள் மாவட்ட ஆட்சியர் ஆவேன் என்று அவர்களிடம் சொல்லியதும் இன்றும் நினைவில் நிழலாடுகிறது!

இப்போது சிறு வயது கலெக்டர் கனவு நிறைவேறியது. இந்த சமூகத்துக்காகப் பேச்சாளராக வேண்டும், எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இன்று வரை நிறைவேறவில்லை. எனினும், நான் பேச வேண்டியதையும், எழுத வேண்டியதையும் இன்று கலெக்டராக செயலில் காட்டிக்கொண்டு இருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தி எனக்கு உண்டு!''

வண்ணை கணேசன், சென்னை-110.

''நீங்கள் கட்டுப்படுவது யாருக்கு?''

''மனசாட்சிக்கு!''

ஆர்.பாலசுப்ரமணியன், திருப்பத்தூர்.

''சினிமா பார்ப்பீர்களா? உங்களுக்குப் பிடித்த படம் எது?''

 ''சினிமா மீது எனக்கு எப்போதுமே பெரிய ஆர்வம் இருந்தது இல்லை. அரசுப் பொறுப்புக்கு வந்த பின்பு

விகடன் மேடை - சகாயம் I.A.S

நேரம் கிடைப்பது அரிது. இருப்பினும், சமீப ஆண்டுகளில் நண்பர்கள் பரிந்துரையின் பேரில் பார்த்தவற்றில் என் மனதில் பதிந்தவை - எனக்குப் பிடித்தமானவை 'இந்தியன்’, 'அழகி’, 'தவமாய் தவமிருந்து’ படங்கள். இப்போது வாய்ப்பும் நேரமும் கிட்டினால் பார்க்க விரும்புவது புகழேந்தி தங்கராஜ் இயக்கிய 'உச்சிதனை முகர்ந்தால்’ படம்!''  

கு.ரத்தினம், ஆண்டிபட்டி.

''உங்களுக்குப் பிடித்த பொன்மொழி என்ன?''

 ''அமைதியான கடல், ஆற்றல் உள்ள மாலுமியை உருவாக்காது!''

எம்.திலீபன், திருவாரூர்.

''இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டு இருக்கும் புத்தகங்கள் என்னென்ன?''

''மூன்று புத்தகங்களை வாசித்துக்கொண்டு இருக்கிறேன். 'நேரு முதல்நேற்று வரை’ என்ற புத்தகத்தில் ஓய்வுபெற்ற நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ப.ஸ்ரீ.இராகவன் தன் பணி அனுபவங்களை விளக்கியிருக்கிறார். இந்திய ஆட்சிப் பணி யில் இருப்பவர்கள் சந்திக்கக்கூடிய சவால் களை, பிரச்னைகளைத் தனது அனுபவங் களைக்கொண்டு எழுதியிருக்கிறார்.

தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உயர்ந்த தத்துவங்களின் உன்னத வெளிப்பாடாக வந்திருக்கிற ‘The only revolution’ புத்தகம். மூன்றாவதாக, பிலிப் மேசன் எழுதிய ‘The Men Who Ruled India’ என்ற புத்தகம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நிர்வாகத்தில், ராணுவத்தில் தடம்பதித்த மிக அருமையான அலுவலர்களின் செயல்பாட்டைப் பற்றிய அற்புதமான நூல்!''

விகடன் மேடை - சகாயம் I.A.S

- அடுத்த வாரம்...

சாதாரண பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆன நீங்கள், இன்று அதே கனவுடன் இருக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 பொது வாழ்வில் ஊழல் செய்யாமல் வாழ்ந்தால், பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்களே. தூய்மையுடன் ஒருவரால் வாழ முடியாதா? அப்படி வாழ என்ன செய்ய வேண்டும்?

நேர்மையாக இருப்பதால் நீங்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன?

-  இன்னும் பேசலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு