விகடன் மேடை - ஷங்கர்

சுப.கோகுலகிருஷ்ணன், சென்னை.

 ''உங்களுடைய பெரும்பாலான ஹீரோயின்கள் அதற்கு முன் மணிரத்னம் படங்களில் நடித்திருக்கிறார்கள். 'ரோஜா’ - 'ஜென்டில்மேன்’, 'இருவர்’ - 'ஜீன்ஸ்’, 'உயிரே’ - 'இந்தியன்’, 'முதல்வன்’... இது என்ன சென்டிமென்ட்?''

  '' 'காதலன்’ - நக்மா, 'பாய்ஸ்’ - ஜெனிலியா, 'அந்நியன்’ - சதா, 'சிவாஜி’ - ஸ்ரேயா, 'நண்பன்’ - இலியானா... இது என்ன சென்டிமென்ட்டோ... அதே சென்டிமென்ட்தான்!''

எ.தரணிபதி, கோவை.

'' உலக அதிசயங்களில் நீங்கள் வியந்து ஆச்சர்யப்பட்ட உலக அதிசயம் எது? ஏன்?''

 '' தாஜ்மஹால்!

அது ஒரு பிரமாண்டமான காதல் கவிதை. படத்துல பார்த்த தாஜ்மஹாலைவிட நேர்ல மிக மிக மிகப் பிரமாண்டமாக இருந்தது. பக்கத்துல, தூரத்துல, மிக மிக தூரத்துல, பின் பக்கத்துல, சைடுல, காலையில, மத்தியானத்துல, சாயங்காலத்துல, ராத்திரிலனு... எந்த நேரத்துல, எங்கே இருந்து பார்த்தாலும் அது ஓர் அதிசய அழகுதான்.

##~##
தாஜ்மஹால்ல நிக்கிறப்போ ஒரு வைப்ரேஷன், சிலிர்ப்பு, ஜில்லிப்பு, மியூஸிக், வாசனை, காதல்னு எல்லாம் கலந்த ஓர் அற்புதமான ஃபீலிங் ஏற்பட்டுச்சு. தாஜ்மஹாலை இதுவரை பார்க்காதவங்க, மிஸ்ஸிங் சம்திங் கிரேட்!

எனக்குப் பிடிச்ச இன்னொரு உலக அதிசயம்... இத்தாலியில் உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். தாஜ்மஹால் பிரமாண்டமான கவிதைன்னா, இது ஹைக்கூ!''

ஜனார்த்தன சண்முக வடிவு, விகடன் ஃபேஸ்புக்.

 ''நீங்கள் இயக்கிய படம் என்பதை மறந்துவிட்டு, 'நண்பன்’ படத்துக்கு விகடன் விமர்சனக் குழு அளித்த மதிப்பெண்கள் சரிதானா என்று சொல்லுங்கள்... எனக்குஎன்னவோ அவர்கள் 'வைரஸ் பிரின்சிபல்’ போல மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார்கள் என்று தோன்றுகிறது?''

 ''ஓ... உங்களுக்கும் அப்படித்தான் தோணுதா?! எனக்குச் சில திரையுலக நண்பர்கள் போன் பண்ணி, ' 'நண்பன்’ படத் துக்கு 50 மதிப்பெண்களாவது போட்டு இருக்கணும்’னு சொன்னாங்க.

ஹூம்... சப்ஜெக்ட்டுக்கு நல்ல மார்க் போடறாங்க, இன்டர்னல் அசெஸ்மென்ட்லதான் என்னன்னு தெரியல... கம்மியாகிடுதுனு நினைக்கிறேன்.

சரி விடுங்க. பிரின்சிபல்கிட்ட நல்ல பேரு வாங்குற மாதிரி இன்னும் ஹார்டு வொர்க் பண்ணணும்னு எடுத்துக்குவோம்!''

பத்மநாபன், திருவாரூர்.

 ''கமல் நடிக்க 'இந்தியன் - பார்ட் 2’, ரஜினி நடிக்க 'எந்திரன் - பார்ட் 2’ எது சாத்தியம் ஷங்கர்?''

விகடன் மேடை - ஷங்கர்

 மாத்தி யோசி!

ரஜினி நடிக்க 'இந்தியன் - பார்ட் 2’, கமல் நடிக்க 'எந்திரன் - பார்ட் 2’ இதுவும் சாத்தியம்தான்!''

அருண்குமார், விகடன் ஃபேஸ்புக்.

''உண்மையைச் சொல்லுங்கள் ஷங்கர்ஜி... நீங்கள் வாங்கும் முழுச் சம்பளத்துக்கும் வருமான வரி கட்டுகிறீர்களா?''

 ''அதிகமாகவே கட்டி ரீ-இம்பர்ஸ்மென்ட் (Reimbursement) வாங்கிட்டு இருக்கேன், போதுமா?

அது சரி... நீங்க ஒரு குடிமகனா உங்க கடமையெல்லாம் சரியா செஞ்சுட்டு இருக்கீங்களா?

குடும்பத்துல ஒருத்தனா, பொறுப்பா, ஒழுங்கா நடந்துக்கிறீங்களா? உண்மையச் சொல்லுங்க இல்லைன்னா, 'அவீசி’தான்!

(குறிப்பு: 'அவீசி’ - பொய் சொல்பவர்களை மலை உச்சியில் இருந்து கீழே உருட்டிவிடும் தண்டனை - கருட புராணம்!)''

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

 ''ஃபேஸ்புக் - ட்விட்டர் தளங்களில் உங்கள் ஈடுபாடு எந்த அளவுக்கு இருக்கிறது?''

 ''நண்பர்கள், உதவியாளர்களைக் கேட்டப்போ, 'உங்களுக்கு பிளாக்தான் சரி... ஃபேஸ்புக், ட்விட்டர் செட் ஆகாது’னு  சொன்னதால, இப்போதைக்கு அந்தப்பக்கமே போறதில்லை. நேரமும் இல்லை!''

ஜே.சந்திரசேகரன், முடிகண்டநல்லூர்.

 ''உங்களுக்குக் கடவுள் பக்தி உண்டா?  உண்டு என்றால் பிடித்த கடவுள் யார்? ஏன்?''

 ''உண்டு. தொழில்!''

விகடன் மேடை - ஷங்கர்

ப.காளிதாசன், நீர்விளங்குளம்.

 ''பாஸ்... நீங்கள் தமிழகத்தின் 'ஒரு நாள் முதல்வ’ரானால் உங்கள் முதல் உத்தரவு என்னவாக இருக்கும்? நிச்சயம் பதில் வேண்டும். கேள்வியை ஸ்கிப் செய்யவோ, பதிலை மழுப்பவோ செய்யாதீர்கள்!''

  ‘‘Hypothetical Question (ஹைபோதெடிகல் கொஸ்டீன்)!''

வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம்.

 ''உங்கள் படங்களில் 'லாஜிக் சொதப்பல்’ அதிகம் என்பதை மனம் திறந்து ஒப்புக்கொள்கிறீர்களா?''

 ''நீங்க கேட்கிறதிலேயே லாஜிக் இல்லை புகாரி. இது சினிமா. படம் பார்த்துக்கிட்டு இருக்கிற இரண்டரை மணி நேரத்துல ஆடியன்ஸுக்கு எந்தக் கேள்வியும் எழாமப் பார்த்துக்கிறதுலதான், ஒரு இயக்குநரோட சாமர்த்தியம் இருக்கு. என் படங்கள் எல்லாம் அநேகமா, லார்ஜர் தென் லைஃப், ஃபேன்டஸி, ஃபிக்ஷன்... இப்படி நடந்தா எப்படி இருக்கும்கிற கற்பனை. அதை நல்லாயிருந்தா ரசிச்சுட்டுப் போகணும்.

'இப்படி எல்லாம் நடக்குமா?’னு கேட்டா... நான் என்ன லாஜிக் சொன்னாலும் நீங்க ஏத்துக்கப்போறது இல்லைங்கிறதையாவது ஒப்புக்குறீங்களா?''

எம்.நாகராஜன், பொள்ளாச்சி.

 ''இன்றைய முகமறியா, நாளை உலகம் அறியவிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு உங்கள் ஊக்க வார்த்தைகள் என்ன?''

 ''பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்துட்டீங்க... பிடிச்சிருந்தா மட்டும் போதாது. அது உங்களுக்குப் பொருத்தமான துறைதானானு செக் பண்ணிக்கங்க. திறமையை வளர்த்துக்கங்க. கடுமையா உழைச்சுக்கிட்டே இருங்க. நீங்க முழுசா ரெடி ஆனதுக் கப்புறம் ஒரு படத்தை இயக்கத் தொடங்குங்க. வெற்றி, ஆட்டோமேட்டிக்கா உங்க பின்னாடி வரும்!''

யு.முகமது அலியார், மதுரை-12.

''ஜென்டில்மேன்’, 'காதலன்’, 'இந்தியன்’, 'முதல்வன்’, 'அந்நியன்’, 'எந்திரன்’, 'நண்பன்’... அது ஏன் உங்கள் படத் தலைப்புகள் 'ன்’-ல் முடிகிறது? என்ன சென்ட்டிமென்ட்?''

  ''ஜீன்ன், பாய்ன், சிவான், நாயன் (ஹிந்தி) இதை எல்லாம் ஏன் விட்டுட்டீங்க?

அது தானா அமைஞ்சிடுது. சரியாவும் இருக்கு, நல்லாவும் இருக்கு. நானும் அதை பிரேக் பண்ணணும்னு பல தடவை முயற்சி பண்ணி, சில தடவைதான் முடிஞ்சது. பாருங்க 'ரோபோ’தான் டைட்டில். கடைசில 'எந்திரன்’னு வைக்க வேண்டியதாயிடுச்சு. இப்போ அதுதான் ரோபாவைவிட நல்லா இருக்கு.

'நண்ப’னை 'மூன்று முட்டாள்கள்’னோ, 'மூன்று ராஸ்கல்கள்’னோ, பாய்ஸை 'பையன் கள்’னோ, ஜீன்ஸை 'இரட்டையன்’னோ வெச்சா நல்லாவா இருக்கும்?

'நண்பன்’ - 'அஸ்க் லஸ்கா’ பாட்டுல, கிளாப் போர்டுல வர்ற பேரைக் கவனிச்சீங்களா... 'காதல்கார'ன்’னு இருக்கும்!

நானும் அடுத்த படத்துக்கு 'ன்’-ன அவுட் பண்ணணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணிக் கிட்டு இருக்கேன். 'ன்’ கம்மிங்காதான் இருக்கு. பார்ப்போம்!

நல்லவேளை... எனக்கு நியூமராலஜில நம்பிக்கை இல்லை. இல்லைன்னா, என் பேரு என்ன ஆகியிருக்கும்? 'ஷங்கன்’!''

- அடுத்த வாரம்...

விகடன் மேடை - ஷங்கர்

 '' 'ஷங்கர்... பார்ப்பனச் சிந்தனைகளுக்குக் கொடி பிடிக்கிறார்’ என்று உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம்பற்றி?''

 '' 'உங்க படத்தைப் பார்த்து நாங்க மனம் திருந்திட்டோம். இப்ப நாங்க லஞ்சமே வாங்குவது இல்லை’ என்று யாராவது உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா?''

 '' 'எந்திரன்’ படப்பிடிப்பு சமயம் ரஜினியோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்பீர்கள். அப்போது நீங்கள் சொல்லி ரஜினி மாற்றிக்கொண்ட ஒரு குணமோ அல்லது ரஜினி சொல்லி நீங்கள் உங்களுக்குள் மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ இருக்குமே... அதை எங்க ளுடனும் பகிர்ந்துகொள்ளலாமே?''

- இன்னும் பேசலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு