Published:Updated:

'ரோபோ' கமல்! விகடன் மேடையில் ஷங்கர்

ரோபோ 1.0
பிரீமியம் ஸ்டோரி
ரோபோ 1.0

"நான் நியூட்ரலான ஆள்!''

'ரோபோ' கமல்! விகடன் மேடையில் ஷங்கர்

"நான் நியூட்ரலான ஆள்!''

Published:Updated:
ரோபோ 1.0
பிரீமியம் ஸ்டோரி
ரோபோ 1.0

கு.மணி, மகாபலிபுரம்.

 '' 'ஷங்கர்... பார்ப்பனச் சிந்தனைகளுக்குக் கொடி பிடிக்கிறார்’ என்று உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் பற்றி?''

''ஒரு சாமானியனாகத்தான் என் சிந்தனைகளைப் படங்களில் பிரதிபலிக்கிறேன். 'ஜென்டில்மேன்’ படம் ஓப்பனிங்ல, ஹீரோ ஊட்டியில கோடிக்கணக்குல கொள்ளை அடிக்கிற மாதிரி, ஒரு ஸ்டைலான ஆக்ஷன் ப்ளாக் வரும். அவர் மேல போலீஸுக்கு சந்தேகம் வராம இருக்கணும்னும் அந்த ஆக்ஷனுக்குச் சம்பந்தமே இல்லாத எதிர் துருவத்தில் ஹீரோ இருக்கணும்னும்தான் அக்ரஹாரத்துல அப்பளம் போடுறவரா அர்ஜுனை ஸ்கெட்ச் பண்ணியிருப்பேன். ஆனா, கதைப்படி அவர் ஐயரா நடிப்பாரே தவிர, உண்மைல ஐயர் கிடையாது. இன்னும் உத்துக் கவனிச்சீங்கன்னா... ஃப்ளாஷ்பேக்ல, 'இவ்வளவு அழகா மந்திரங்களைச் சொல்றியே... நீ பிராமணன் இல்லேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க’னு நம்பியார் சொல்வார்.

'ரோபோ' கமல்! விகடன் மேடையில் ஷங்கர்

'அந்நியன்’ படத்துலயும் என் கற்பனைல வந்த முதல் விஷ§வல், முகத்தை மறைச்ச மாதிரி முன்னாடி நீளமா தொங்கற முடியோட இருக்கிற 'அந்நியன்’ கேரக்டர்தான். பொதுவா, நீளமான முடி, சர்தார்ஜிக்களுக்கு, ஐயர், ஐயங்கார்களுக்கு இருக்கிறதைப் பார்த்திருக்கேன். சர்தார்ஜின்னா நேட்டிவிட்டி அடிபடும். ஐயர் வேஷம் 'ஜென்டில்மேன்’ல போட்டாச்சு. அதனால அந்நியனை ஐயங்காரா காட்ட முடிவு பண்ணேன். அது கதையோட, கதாபாத்திரத்தோட தேவைக்காகக் கொடுக்கப்பட்ட கலர். அவ்வளவுதான். என் மத்த ஒன்பது படங்களோட கதாநாயகர்களையும் நியூட்ரல் ஆகத்தான் காமிச்சிருக்கேன்.

நான் சாதிகள்ல உடன்பாடு இல்லாத, எல்லாரும் சமம்னு நினைக்கிற நியூட்ரலான ஆள்!''

டி.ரஞ்சித்குமார், வெள்ளக்கோயில்.

 '' 'உங்க படத்தைப் பார்த்து நாங்க மனம் திருந்திட்டோம். இப்ப நாங்க லஞ்சமே வாங்குறது இல்ல’ என்று யாராவது உங்களிடம் சொல்லி இருக்கிறார்களா?''

 ''அப்படி சாமி சத்தியமா இதுவரை யாருமே சொல்லலைங்க. சொல்லியிருந்தா, இந்நேரம் நான் பிறவிப் பலனை அடைஞ்சு இருப்பேன்.

'நீங்க இப்படி எல்லாம் படம் எடுத்துட்டா... நாங்க திருந்திடுவோமா?’

'அது... நம்மளைச் சொல்லலப்பா... லஞ்சம் வாங்குறவங்களைச் சொல்றாங்க!’

'இதுல என்ன தப்பு... எல்லாரும் பண்றதைத்தான நாங்க பண்றோம்!’

'அது சினிமாவுக்கு வேணா சுவாரஸ்யமா இருக்கலாம்... பிராக்டிகலா நடக்காது!’

- இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீலிங்ல லஞ்சத்தை கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்காங்க.

நாமளும் 'இந்தியன் பார்ட் 2, 3, 4, 5’-னு கன்டினியூ பண்ணிக்கிட்டு இருக்க வேண்டி யதுதான்.

ஆனா, பப்ளிக்ல நல்லவங்க, மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவங்க நிறைய பேர், 'அந்நியன்’ படத்தைப் பார்த்துட்டு என்கிட்ட, 'படம் பார்த்ததும் பயம் வந்துடுச்சு சார்... நாமெல்லாம் ஒழுங்கா நடந்துக்கலையோனு குற்ற உணர்வு வந்துடுச்சு. இப்பல்லாம் ரெட் சிக்னல்ல நின்னுடுறோம். 'ஸ்டாப் லைனைத் தாண்டுறது இல்லை’னு சொல்லிஇருக்காங்க.

'முதல்வன்’ படம் வந்ததும் நிறைய இடங்கள்ல புகார் பெட்டி வெச்சதா செய்தி வந்தது. நிறைய அரசு அதிகாரிகள் டைப் ரைட்டரோட ஸ்பாட்ல போய், சரியா வேலை செய்யாதவங்களை சஸ்பெண்ட் செஞ்ச தாவும் செய்திகள் வந்தன. அந்த வகையில பிறவிப் பயன்ல ஒரு சின்ன பீஸை அடைஞ்சிட்டோம்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!''

கே.ராஜாக்கண்ணு, கோயம்புத்தூர்.

'' 'எந்திரன்’ படப்பிடிப்பு சமயம் ரஜினி யோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்பீர்கள்... அப்போது நீங்கள் சொல்லி ரஜினி மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ அல்லது ரஜினி சொல்லி நீங்கள் மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ இருக்குமே... அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள லாமே?''

'ரோபோ' கமல்! விகடன் மேடையில் ஷங்கர்

'' 'எந்திரன்’ சமயத்துலனு இல்லை... அவரோட படம் பண்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட இருந்து ஒரு நல்ல பழக்கத்தை நான் கத்துக்கிட்டேன். ஒரு விழாவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். எல்லாரும் அவரைப் போய்ப் பார்த்து 'ஹலோ’ சொல்லிட்டு இருந்தாங்க. 'நாம போய் ஹலோ சொல்ல ணுமா?’னு சங்கோஜத்தோட, தயக்கத்தோட, கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டு இருந் தேன். ஆனா என்னைக் கவனிச்சவர், கிட்ட வந்து, 'ஹலோ ஷங்கர்... எப்படி இருக்கீங்க?’னு கேட்டாரு. எனக்கு 'ச்சே’னு ஆகிடுச்சு.

விழாக்களில் பலர் இப்படித்தான் நடந்துப்பாங்க. பக்கத்துலயே இருந்தாலும், நேருக்கு நேர் நின்னாலும், யார் முதல்ல ஹலோ சொல்றதுன்னு, யாரு நகர்ந்து கிட்ட போறதுன்னு, நீ பெரியவனா நான் பெரியவனான்னு உள்ளுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்காம, கண்டுக்காம பக்கத் துல இருக்கிறவங்ககிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுவாங்க. அதை உடைச்சவர் ரஜினி. அன்னைல இருந்து... என் கண்ணுக்கு முன்னால தெரிஞ்சவங்க இருந்தா... பெரியவங்களோ, சின்னவங்களோ நானே முதல்ல போய் 'ஹலோ’ சொல்லிடுவேன்!

ஒரு தடவை ரஜினி சார்கிட்ட, நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொன்னேன். அவரால நம்ப முடியலை. 'எவ்ளோ நாளாச்சு?’னு கேட்டார். 'அஞ்சு வருஷமாச்சு’ன்னேன். 'எப்டி... எப்டி?’ன்னார். நான், 'நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, முடியல. ஒரு தடவை எனக்கு மலேரியா வந்துச்சு. தினமும் ஊசி போட வேண்டியிருந்ததால நான் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். 15 நாள் சிகரெட் பிடிக்கலை. 16-வது நாள் 'இத்தனை நாள் விட்டதை மறுபடி ஆரம்பிக்கணுமா?’னு யோசிச்சு விட்டுட்டேன். அப்புறம் ஒரு மாசம்... ஆறு மாசம்... ஒரு வருஷம்னு, அஞ்சு வருஷம் பிடிக்கலே’னு சொன்னேன். ஏன்னா, 'சும்மா ஆறு மாசம், ஒரு வருஷம் விட்டா சிகரெட் பழக்கத்தை விட்டதா அர்த்தம் இல்லை. அஞ்சு வருஷம் நிறுத்தினாதான் உண்டு’னு சுஜாதா சார் என்கிட்ட சொல்லிஇருக்கார். அப்புறம் ரஜினி சாரும் படிப்படியா குறைச்சு, ஒரு நாளைக்கு மூணு... அப் புறம் ஒண்ணுங்கிற அளவுக்கு வந்துட்டார்!

'எந்திரன்’ படத்துக்காக சிட்டி மேக்-அப் இங்கே செட் ஆகாததால, அமெரிக்கால ஸ்டேன்வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு மேக்-அப் டெஸ்ட்டுக்காகப் போயிருந்தோம். ரெண்டு நாளாகியும் அங்கேயும் செட் ஆகலை. லஞ்ச் பிரேக்ல நான் தனியா நின்னு டென்ஷன்ல டேபிளைக் குத்திக்கிட்டு இருந்தேன். என்னைக் கடந்து போன ரஜினி சார், 'இந்தப் படம் முடியறதுக்குள்ள மறுபடி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே படம் முடியற நேரத்துல டென்ஷன் டெரா பைட்டுக்கு ஏறி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அப்புறம் சுத்தமா விட்டுட்டேன். அவரும் விட்டுட்டார்!''

பி.குமரன், வந்தவாசி.

''ரஜினி, கமல்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்... இது உங்கள் ரசிகனின் அன்புக் கட்டளை... மீறாதீர்கள் ஷங்கர்...''

'' 'இந்தியன்’ கதையை முதன்முதலில் ரஜினி சாருக்குத்தான் சொன்னேன் என்பது பலருக்குத் தெரியாது. கதை, திரைக்கதை, முழுமை அடையாத ஆரம்பக் கட்ட நிலையில் சொன்னதால் அதைச் செய்வதில் ரஜினி சாருக்குத் தயக்கம் இருந்தது. 'இந்தியன்’ படம் முடிந்து, அவருக்குப் போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ஓடி வந்து என்னை இறுக்கிக் கட்டியணைத்து, 'சூப்பர்... சூப்பர்...’ எனத் தட்டிக்கொடுத்து, 'இப்படி எனக்கு நீங்க சொல்லவே இல்லியே’ என்று ஆச்சர்யப்பட்டார்.

நீங்கள் உற்றுப்பார்த்தீர்களானால் 'இந்தியன்’ தாத்தா, இன்டர்வெல் காட்சியில் உட்கார்ந்தபடியே ஈஸி சேர் பலகையால் நெடுமுடி வேணுவைத் தட்டிவிடுவார். வர்மக் கலையில் அவரை வீழ்த்திக் கீழே கிடக்கிற துண்டை எடுத்து ஸ்டைலாகத் தோளில் போடுவார். பிறகு, எழுந்து கலைந்த முடியை ஸ்டைலாகக் கோதி சரி செய்வார். இது ரஜினி சாரை மனதில்வைத்து நான் உருவாக்கிய காட்சி என்பது கமல் சாருக்குத் தெரியாது. அதை முற்றிலும் அவரது ஸ்டைலில் வேறுவிதமாகச் செய்து அசத்தி இருப்பார்.

ரஜினி சார் இப்போதுகூட, 'நான் முதல்வன் பண்ணாததுகூட எனக்கு வருத்தம் இல்ல... 'இந்திய’னைத்தான் மிஸ் பண்ணிட்டேன்!’ என்று சொல்வார்.

'ரோபோ’ முதலில் கமல் சாரை வைத்து எடுப்பதாக இருந்தது அனைவருக்கும் தெரியும். அதன் முதல்கட்டமாக மும்பையில் கமல் சார், ப்ரீத்தி ஜிந்தா கலந்துகொண்ட போட்டோ ஷூட் நடந்தது பலருக்குத் தெரியாது. கமல் சாரை விஞ்ஞானியாக, ரோபோவாக, வில்லன் ரோபோவாக எல்லாம் போட்டோஸ் எடுத்தோம். அப்போது, வில்லன் ரோபோ பாடல் காட்சியில் ஹிட்லர் போல், இடிஅமீன்போல் வருகிற மாதிரியாகக் கற்பனை செய்துவைத்திருந்தேன். ஒவ்வொரு கெட்-அப்பிலும் கமல் சார் கொடுத்த போஸ்களையும் எக்ஸ்பிரஷன்களையும் பார்த்து ப்ரீத்தி ஜிந்தா, மும்பை

'ரோபோ' கமல்! விகடன் மேடையில் ஷங்கர்

டெக்னீஷி யன்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். அதன் பிறகு, கமல் சார் கொடுத்த தேதிகளை 'நாயக்’ படத்தினால் என்னால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் 'நாயக்’ முடித்து வந்தபோது, அவர் வேறு ஒரு படத்தில் பிஸி ஆகிவிட்டார். அந்தப் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால், அவரைவைத்து எடுத்த இந்தப் படங்களைப் பார்க்கும்போதும், அவர் ரோபோ பேசுவதுபோல் பதிவு செய்திருந்த,

'ஹாய்... நான் ஒரு ரோபோ... மனித உருவம்கொண்ட இயந்திரம்...

ஸ்பீட் ஒன் கிகா ஹெர்ட்ஸ்... மெமரி ஒன் டெரா பைட்...

ஜாக்சனைப் போல் ஆடவும் தெரியும்... ஜாக்கிசானைப் போல் மோதவும் தெரியும்.

நான் கற்றது கடலளவு... கல்லாதது- மனிதனின் பொய், பொறாமை, வஞ்சகம், துரோகம்...

என்னைச் சரியாகப் பயன்படுத்தினால் நண்பன்... தவறாகப் பயன்படுத்தினால்..? ஹா... ஹா... ஹா... (வில்லன் சிரிப்பு)’

- அவருடைய கம்பீரக் குரலைக் கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது!''

ஏ.எஸ்.நடராஜ், சிதம்பரம்.

''தங்கள் படங்களின் முதல் விமர்சகர் யார்?''

 ''நான்தான்! நானே என் படத்தையும் படத்துல வர்ற ஒவ்வொரு விஷயத்தையும் கிண்டல் பண்ணி, ஓட்டி, அலசி, ஆராய்ஞ்சு, பிரிச்சு மேய்ஞ்சு, பின்னிப் பெடலெடுத்து, எல்லா ஸ்கேனர்லயும் விட்டு எடுத்து, அது 'போதும் என்னை விட்டுருப்பா’னு கதறுன அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது!''

'ரோபோ' கமல்! விகடன் மேடையில் ஷங்கர்

- அடுத்த வாரம்...

''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத் தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''

''ஒரே படத்தில் கமலையும் ரஜினி யையும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''

''நீங்கள் நன்றாகக் கவிதை எழுதுவீர் களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க ப்ளீஸ்?''

- இன்னும் பேசலாம்...