பிரீமியம் ஸ்டோரி

'எழுத்தாளர்’ மிஷ்கின்

விகடன் ஜன்னல்

இயக்குநர் மிஷ்கின், இப்போது எழுத்தாளர் மிஷ்கின்! 'நத்தை போன பாதையில்’ என்ற தலைப்பில் பின் அட்டையில் கூலிங் கிளாஸோடு சில்-அவுட்டில் சிரிக்கிறார். ஜப்பானிய மற்றும் அமெரிக்க ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 'இரவு நதியில் நானும் குளித்தேன், நிலவும் குளித்தது’, 'ஓடும் நதி, வயதான மரம், தள்ளாடும் நிழல்’ என... அனைத்தும் 'ஜென்’ டைப்பிலான ஹைக்கூக்கள். ''ஓர் இரவு நேரத்தில் நண்பர்களுடன் இலக்கியம் பேசிக்கொண்டு இருந்தேன். அந்த மழை இரவில் கவிதை வேண்டும்போலத் தோன்றியதால், ஹைக்கூ கவிதைகளை வாசித்து மொழிபெயர்த்து மகிழ்ந்தோம்.  அந்த ஓர் இரவில் மொழிமாற்றப்பட்ட கவிதைகள்தான் இவை'' என்கிறார் மிஷ்கின். சாரு நிவேதிதா வாசிச்சாரா?

ராஜபாளையத்து ஹீரோ!

விகடன் ஜன்னல்

'தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் தேனிக்காரக் கீதாரி இளைஞனைக் கண் முன் நிறுத்திய விஜய் சேதுபதி, ராஜபாளையத்துக்காரர். ''ஹீரோ ஆசையோடு நடிக்க வந்தவனை, 'தகுதியை வளர்த்துக்கோ’ன்னு திருப்பி அனுப்பியது கோடம்பாக்கம். கூத்துப் பட்டறையிலும் அக்கவுன்டன்ட் வேலைதான் கிடைச்சது. பார்வையாளனா இருந்து நடிப்பு கத்துக்கிட்டேன். பிறகு 'பெண்’ சீரியல், 'நாளைய இயக்குநர்’ குறும்படங்கள்,  'வெண்ணிலா கபடிக் குழு’, 'நான் மகான் அல்ல’ படங்களில் ஆங்காங்கே தலை காட்டினேன். நண்பரின் மூலம் இயக்குநர் சீனு ராமசாமி அறிமுகமாக, 'தென்மேற்குப் பருவக்காற்று’ தழுவியது!'' என்பவர் அடுத்து நடிக்கும் படத்தின் பெயர்... 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!’

'ஈசன்’கள்!

விகடன் ஜன்னல்

ஸ்கூல் பையனாக 'ஈசன்’ படத்தில் வந்து அசரடித்த சிறுவனின் பெயர் துஷ்யந்த். அதே படத்தில் வைபவின் நண்பனாக வரும் நிரஞ்சன், இவரின் நிஜ அண்ணன். இந்த இருவரின் அப்பாவும் சினிமாக்காரர்தான். அவர், ஜெயப்பிரகாஷ். 'பசங்க’ படத்தில் வாத்தியாராக, 'நான் மகான் அல்ல’வில் அன்பான அப்பாவாக மனதை ஈர்த்தவர்.  '' 'பசங்க’ பட ஆடியோ லாஞ்சுக்கு அப்பாவுடன் போயிருந்தோம். அங்க சசிகுமார் சார், எங்களைப் பார்த்தார். ஆறு மாசம் கழிச்சு திடீர்னு ஆபீஸுக்கு வரச் சொன்னார். 'ஸ்க்ரீன் டெஸ்ட்’ எடுத்து ஓ.கே. செஞ்சு படபடன்னு நடிக்க அழைச்சுட்டுப் போயிட்டார். ஏதோ சின்ன ரோல்னு நினைச்சோம். இந்த அளவுக்குப் பெருசா வரும்னு எங்களுக்கே தெரியாது'' - மகிழ்ச்சியில் பேசும் மகன்களைப் பெருமையாகப் பார்த்துச் சிரிக்கிறார் ஜெயப்பிரகாஷ். ''ரெண்டு பசங்களோட கேரக்டரும் ரெண்டுவிதமானது. படத்திலும் இவங்க எதிரும் புதிருமா முட்டிக்கிட்டது ஆச்சர்யம்'' என்கிறார் அப்பா ஜெயப்பிரகாஷ்!

- படம்: ச.இரா.ஸ்ரீதர்

பேரினவாதத்தின் ஆவணம்!

விகடன் ஜன்னல்

'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற தலைப்பில் ஈழப் போரின் கொடூரங்களைப் புகைப்பட ஆவணமாகத் தொகுத்து இருக்கின்றனர் பிரபாகரன், காளிங்கன் என்ற  இளைஞர்கள். தமிழ், ஆங்கிலம், ஃபிரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் அச்சிடப்பட்டு, உலகம் முழுக்கப் பரப்பப்படவிருக்கும் இந்த ஆவணமேனும் ஈழத் தமிழர்களுக்கு நியாயத்தைத் தருமா?

சென்னை ராசி!

விகடன் ஜன்னல்

'ஏர்செல் சென்னை ஓப்பன் 2011’ புத்தாண்டின் புது விருந்து! லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து விளையாட, இந்தியா - பாகிஸ்தான் ஜோடியான போபண்ணா, குரோஷி... இருவரும் சென்னை உணவுகளை ரவுண்ட் கட்டினார்கள். வந்த வேகத்தில் லியாண்டருக்குக் காய்ச்சல். அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார். சோம்தேவ் தேவ் வர்மன் தனது சிக்ஸ்பேக் உடம்புடன் பிராக்டிஸ் செய்யும் அழகைப் பார்க்கவே பெண்கள் கூட்டம் குவிந்தது. கடந்த ஆண்டு ஃபைனல் வரை முன்னேறிய இவர், இந்த முறை முதல் ரவுண்டிலேயே அவுட். முன்னணி இந்திய வீரர்கள் ரோஹன் போபண்ணா, யுகி பாம்ப்ரி அனைவருமே முதல் ரவுண்டோடு மூட்டை கட்ட, எக்ஸ்பிரஸ் ஜோடி பயஸ் - பூபதி இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியது. 'சென்னை எப்போதுமே எங்களுக்கு ஃபேவரைட். இங்கே நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறோம். 'நாங்கள் சேர்ந்து விளையாடலாம்’ என முடிவு எடுத்ததும் இங்கேதான்’ என்றார் லியாண்டர் பயஸ்!

- படம்: கே.கார்த்திகேயன்

'மனம் ஒரு கண்ணாடி!’

விகடன் ஜன்னல்

டிசம்பர் 23-ம் தேதி அருமனை கிராமத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 'கர்த்தர் அருளால் கழக ஆட்சி மலரும்’ என்ற ஜெயலலிதா, கடந்த 9-ம் தேதி சாமித்தோப்பு வைகுண்டர் பதிக்கு வந்து 'அய்யா வைகுண்டர் அருளால் கழக ஆட்சி மலரும்’ என்றார். வைகுண்டர் பதி கருவறையில் சாமி சிலை எதுவும் கிடையாது. கண்ணாடி மட்டுமே உண்டு. இதைக் குறிப்பிட்டு, 'கண்ணாடியில் அழுக்கு படிந்தால், நமது பிம்பம் மறைந்துவிடும். அதுபோல் நமது மனதில் அழுக்கு படிந்தால், அது அறத்தையும் சத்தியத்தையும் மறைத்து விடும்’ என ஆன்மிக உரை நிகழ்த்தி அசத்தியவர், பசுவும் கன்றும் தானம் கொடுத்தார்!

- படம்: எல்.ராஜேந்திரன்

இதைப் படிக்காதீங்க!

 நல்ல நடிகை என்று பெயர் கிடைத்த அளவுக்குப் பெரிய படம், பெரிய சம்பளம் வரவில்லை. இது வேலைக்காகாது என்று முடிவு கட்டி, 'சேவை ஒன்றே வழி’ என இறங்கிவிட்டார் அம்மணி. அச்சச்சோ!

 'தலைவர் தொலைகாட்சியின் முதலீட்டுத் தொகை எங்கே இருந்து வந்தது?’ என்பது ஸ்பெக்ட்ரம் தொடர்பான சி.பி.ஐ-யின் கேள்விகளில் ஒன்றாம்!

 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், இப்போதே அரசின் சார்பாக 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ பற்றி சேனல்களில் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. அரசின் சாதனைத் திட்டங்கள் பற்றிய வெவ்வேறு விளம்பரங்கள் அடுத்தடுத்து அணிவகுக்குமாம்! அச்சச்சோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு