Published:Updated:

விகடன் மேடை - ஷங்கர்

விகடன் மேடை - ஷங்கர்

விகடன் மேடை - ஷங்கர்

விகடன் மேடை - ஷங்கர்

Published:Updated:
##~##

டி.குமரேஸ்வரன், தென்காசி.

 ''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''நாங்க வெளியூருக்கு கதை டிஸ்கஷன் போறதுக்கு முன்னாடி, 'கதை ஃபுல் லைன் ரெடியா இருக்கா, சுபம் போடற வரைக்கும்?’னு கேட்டுக்குவார். டிஸ்கஷன் ஆரம்பிச்சதும் அவர் அமைதியாக் கவனிப்பார். எந்த வசனமோ, கதையோ, காட்சிகளோ, சொல்ல மாட்டார். கதைப் போக்குல, காட்சிகள்ல ஏதாவது சிக்கல் வந்து முக்கி நிக்கிறப்போ மட்டும், எதனால சிக்கல்னு தெளிவுபடுத்தி, 'இந்த ரூட்ல யோசிங்க’ம்பார். அப்பப்போ சில படங்களையும் சில காட்சிகளையும் ரெஃபரன்ஸுக்கு சுட்டிக்காட்டுவார்.

விகடன் மேடை - ஷங்கர்

தீர்க்க முடியாத பிரச்னை ஏதும் வந்தா, மறுநாள் 'Syd Field, Robert Mckee, இவங்க எல்லாம் ஸ்க்ரீன் ரைட்டிங்ல இந்தந்தப் பிரச்னை வந்தா, இந்தந்த சொல்யூஷன் சொல்லியிருக்காங்க. இதை ஃபாலோ பண்ணுங்க’ம்பார். டிஸ்கஷன் எங்கேயும் தேங்கித் தடை இல்லாம வேகமாப் போறதுக்கு வழிகாட்டுவார். டிஸ்கஷன் முடிஞ்சதும் சீன் ஒண்ணுல இருந்து சுபம் வரைக்கும் என்னை கேசட்ல விவரிக்கச் சொல்லி வாங்கிட்டுப் போயிடுவார்.

ஒரே வாரத்துல ஃபர்ஸ்ட் ஹாஃப் வசனம் வந்துடும். அடுத்த வாரத்துல செகண்ட் ஹாஃப் வந்துடும். செம ஃபாஸ்ட். டிஸ்கஷன்ல உள்வாங்கின அத்தனை விஷயங்களையும் தான் நினச்சதையும் சேர்த்து நிறையவே எழுதி விளாசிப் பின்னித் தள்ளியிருப்பார். சுஜாதா சார், படிச்சுக் காமிக்கும்போது அவரோட ஒன் லைனர்களை எல்லாம் கை தட்டி ரசிப்பேன். அவர் எழுதினதுல இருந்து என்னென்ன எந்த அளவுக்குத் தேவையோ எடுத்து, எனக்கு எப்படி வேணுமோ அப்படி ஒரு டிராஃப்ட் எழுதி திருப்பி அவர்கிட்ட அனுப்புவேன். அதுல அவர் ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ராவா இருக்கிற வார்த்தைகளை அடிப்பார். அசிஸ்டென்ட் டைப் பண்ணப்ப விட்டுட்ட க், ச், ஞ், சின்ன 'ர’, பெரிய 'ற’ பிழைகளைச் சரிபண்ணி அனுப்புவார். இதான் எங்க வொர்க்கிங் ஸ்டைல்!

'இந்தியன்’ல சந்துரு (கமல்): 'இந்த உலகத்துல இருக்கற எல்லா வழியும் குறுக்கு வழியா மாறிடுச்சு... இது எங்க அப்பாவுக்குப் புரியல!’

'முதல்வன்’ க்ளைமாக்ஸ்ல ரகுவரன்: இறக்கும்போது சொல்ற, 'That was a good interview...’

'அந்நியன்’ல: 'தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு... விளைவுகளோட சைஸைப் பாருங்க... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!’

'சிவாஜி’ல ரஜினி சார்: (ஒரு ரூபாயைச் சுண்டி இறந்துகிடக்கும் சுமனின் நெத்தியில் அடித்து) 'இதைக்கூட நீ எடுத்துட்டுப் போக முடியாது...’

'எந்திரன்’ல சிட்டி: 'என்னைப் படைச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...’

- இப்படிப் பல சிரமமான காட்சிகள்ல வர்ற விஷயங்களை ஒரே வரில நச்சுனு சொல்றதுல சுஜாதா சார், சுஜாதா சார்தான்!

அவர் எழுதினதுல எனக்குப் பிடிச்சது 'இந்தியன்’ தாத்தா பேசற, 'மத்த நாடுகள்ல எல்லாம் லஞ்சம் இருக்கு... அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குத்தான் லஞ்சம்... இங்கதான் கடமையைச் செய்றதுக்கே லஞ்சம்’கிற வசனம்தான்.

மொத்தப் படத்தோட விஷயமும் வீரியமும் இந்த ஒரே வரியில எவ்வளவு அழகா வந்திருக்கு பாருங்க!''

சண்முகச்செல்வி, சிதம்பரம்.

''ஒரே படத்தில் கமலையும் ரஜினியை யும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''

விகடன் மேடை - ஷங்கர்

 '' 'சிவாஜி’ ரிலீஸுக்கு அப்புறம் ரஜினி சாரே, 'நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படி இருக்கும்? நான் வேணா கமல்கிட்ட பேசுறேன்’னு சொன்னார். 'ரெண்டு பேரும் சேரும்போது வர்ற பெரிய எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்துற அளவுக்கும் ரெண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவுக்கு சப்ஜெக்ட்டும் அமைஞ்சா பண்ணலாம்’னு நான் சொன்னேன். 'எந்திரன் பார்ட் 2’ கதையைக்கூட ரெண்டு பேரையும்வெச்சு சில சமயம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்!

பார்ப்போம்... நாளை நமக்கு என்னவெச்சிருக்குனு யாருக்குத் தெரியும்!''

பவித்ரன் ராமசாமி, திருவாரூர்.

''நீங்கள் நன்றாகக் கவிதை எழுது வீர்களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க, ப்ளீஸ்...''

 ''அப்படியா... யார் சொன்னா..?!

விகடன் மேடை - ஷங்கர்

- இது கவிதையானு பாருங்க!''

எஃப்.ஷர்புதீன், மேல்பட்டாம்பாக்கம்.

விகடன் மேடை - ஷங்கர்

''சினிமாவில் ஓர் இடம் தேடித் தவித்த ஐஸ்வர்யா ராயையும் இயக்கி இருக்கிறீர் கள்... இந்தியாவின் அடையாளமாக உருவெடுத்த 'மோஸ்ட் வான்டட் அழகி’ ஐஸ்வர்யா ராய் பச்சனையும் இயக்கி இருக்கிறீர்கள். இரு காலகட்டத்திலும் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?''

 '' 'ஜீன்ஸ்’ அவங்களுக்குக் கிட்டத்தட்ட முதல் படம்தான். முதல் நாள் பாடல் ஷூட்டிங்லயே டான்ஸ் ரொம்பப் பிரமாதமா ஆடினாங்க. சீன்ஸ் எடுக்கும்போது எல்லா வசனங்களையும் முதல் நாளே வாங்கிட்டுப் போய்ப் படிச்சிட்டு வருவாங்க. கஷ்டமான காட்சிகள்ல, நடிச்சுக் காட்டச்சொல்லி அதை அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க. சில நாள் லேட்டா வரும்போது கோபமா 'ஏன் லேட்டு’னு கேட்டா, 'உடம்பு சரியில்ல... காஸ்ட்யூம் சரியில்ல’னு சொல்வாங்க. 104 டிகிரி ஜுரம் அடிச்சுத் துவண்டு படுத்திருப்பாங்க. 'ஷாட் ரெடி’ன்னா, அதை வெளிக்காட்டிக்காம உடனே கேமரா முன்னாடி அற்புதமா வொர்க் பண்ணிட்டு, 'கட்’ சொன்னதும் பொத்துனு போய் பெட்ல விழுந்துடுவாங்க.

உலக அதிசயங்கள்ல பாட்டு எடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு நாட்டுல ஷூட் முடிச்சு, சாயங்காலம் ஃப்ளைட் பிடிச்சு இன்னொரு நாட்டுக்குப் போகணும். மிஸ் ஆனா மறுநாள் மொத்த ஷூட்டிங்கும் காலி. மொத்த யூனிட்டும் ஏர்போர்ட் போய், எல்லாரோட லக்கேஜ், எக்யூப்மென்ட்ஸ்லாம் கொண்டுவந்து சேர்த்து, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன்னு புரொடக்ஷன் ஆளுங்க ஒரு பக்கம் குழம்பி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, ஐஸ்வர்யா ராய் சட்டுனு எல்லாரோட பாஸ்போர்ட், டிக்கெட்லாம் வாங்கிட்டுப்போய் பத்தே நிமிஷத்துல செக் இன், போர்டிங் பாஸ், லக்கேஜ்னு எல்லாத்தையும் ஒரே ஆளா முடிச்சிட்டு வந்து நின்னாங்க. இப்ப நினைச்சுப்பார்த்தாலும், எப்படி ஒரே ஆளா அதெல்லாம் முடிச்சாங்கனு ஆச்சர்யமா இருக்கு!

விகடன் மேடை - ஷங்கர்

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்ல கடைசி நாள் ஷூட்டிங். கடைசி ஷாட் முடிஞ்சதும் என் காலைத் தொட்டு, 'என்னை பிளெஸ் பண்ணுங்க’ன்னாங்க. 'அய்யோ’னு நான் அலறி, எகிறி, 'மூணு படம்தான் பண்ணியிருக்கேன்’னேன். 'நோ... யூ ஆர் மை டீச்சர்’ன்னாங்க.

இன்னைக்கும் அதேதான். 'ஹி இஸ் மை டீச்சர்’னுதான் பேட்டிகள்லயும் மேடைகள்ல யும் சொல்றாங்க. ஒரு சீனியரா ரஜினி சார் கிட்ட அவங்க காட்டுற மரியாதை, அவர் கிட்ட இருந்து எடுத்துக்கிற பிளெஸ்ஸிங்ஸ், மச்சுபிச்சுல உடல் முழுக்க சிவப்புச் சிவப்பா, தடிக்கத் தடிக்கப் பூச்சி கடிச்சும், அதை எல்லார்கிட்டயும் காட்டி சீன் போடாம, க்ரீம் போட்டு மூடி நடிச்ச டெடிகேஷன்... இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.

என் திருமண நாள் அன்னைக்கு, என் வீட்டுக்கு ரஜினி சார், ஐஸ்வர்யா ராய், சாபுசிரில், ரத்னவேல், எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே அரட்டையும் சிரிப்புமா இருந்தது. சாப்பிட எல்லாரும் தயங்கிட்டு இருந்தப்போ சட்டுனு எழுந்த ஐஸ்வர்யா ராய், குழம்புல கரண்டியைப் போட்டு எல்லாருக்கும் பரிமாற ஆரம்பிச்சுட்டாங்க. சாபுவுக்கு ஆச்சர்யத்தில் பேச்சே வரலை.

ஒரு குடும்பப் பெண்ணா, இந்தியப் பெண்ணா, நடிகையா, உலக அழகியா, எல்லா வகையிலும் முழுமையானவர் ஐஸ்வர்யா ராய். அன்றும் இன்றும் மேலும் பண்பட்டவராக!''

எம்.ஹேமா, சென்னை-45.

''நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம்.... ரசித்த சினிமா..?''

 ''லா.ச.ரா. எழுதிய 'அபிதா’.

The Battle of Algiers.''

எம்.ஆறுமுகம், செங்கல்பட்டு.

விகடன் மேடை - ஷங்கர்

''ஏ.ஆர்.ரஹ்மானுடனான சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''ஏ.ஆர்.ரஹ்மான்... நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.

என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து விரல் உடையறது, தாடை உடையறது, உடல்நிலை சரியில்லாமப் போறதுனு என்னென்ன துயரங்கள் உண்டோ... எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான். வாரம் ஒரு தடவையாவது டாக்டர்கிட்ட எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியிருந்தது. ஆறு வயசுலயே எல்லா டாக்டர் களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.

இதைக் கேள்விப்பட்ட ரஹ்மான், 'ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு மவுன்ட் ரோடு தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்க’னு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியிருக்கார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹா வுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரே பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க.

எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.

நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!''

விகடன் மேடை - ஷங்கர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism