Published:Updated:

என் ஊர்! - இயக்குநர் ராஜசேகர்

ஃப்ரைடு ரைஸும் கருகாத்தம்மன் கோயிலும்!சேத்துப்பட்டு

##~##

'பாலைவனச் சோலை’, 'சின்னப் பூவே மெல்லப் பேசு’ போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவர் ராஜசேகர். நடிகர், ஒளிப்பதிவாளர், பத்திரிகையாளர் என்று இவருக்குப் பல முகங்கள் உண்டு. தற்போது சீரியல்களில் படு பிஸியாகிவிட்ட ராஜசேகர், தான் பிறந்து வளர்ந்த சேத்துப்பட்டு பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். 

'' 'ஆரம்ப காலத்துல செட்டியார் பேட்டைன்னு இருந்த பகுதிதான் நாளடைவில் சேத்துப்பட்டுன்னு மாறிடுச்சு’னு எங்கப்பா சொல்லுவாங்க. ஹாரிங்டன் ரோட்டுலதான் எங்க வீடு இருந்தது. நாங்க குடி இருந்த தெரு முனையில ஒரு குட்டிச் சுவர் இருக்கும். தினமும் நானும் என் நண்பர்களும்  அந்தச் சுவத்து மேல உட்கார்ந்துதான் ஊர்க் கதைகளைப் பேசுவோம். இப்போ அந்தக் குட்டிச்சுவர் இடிஞ்சு விழுந்துடுச்சு. அங்கே எல்லோரும் குப்பை கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க. சேத்துப்பட்டை பொறுத்தவரைக்கும் இரண்டு பிரிவு மக்கள் மட்டுமே இருக்காங்கனு சொல்லலாம். ஒன்று ரொம்பவும் பணக்காரங்க. இன்னொன்னு அடித்தட்டு ஏழை மக்கள். நடுத்தரக் குடும்பங்களை இங்கே பார்க்கவே முடியாது.

என் ஊர்!  - இயக்குநர் ராஜசேகர்

இயற்கை எழில் பொங்கும் குளம் ஒண்ணு சேத்துப்பட்டுல இருந்தது. தினமும் நான் பார்த்து ரசித்த இடம் அது. ஆனா, இன்னைக்கு அந்தக் குளம் பார்க்கவே முடியாத அளவுக்கு மாறிடுச்சு. என்னோட 'பறவைகள் பலவிதம்’ படத்தோட ஓப்பனிங் ஷாட்டை அந்தக் குளத்துலதான் எடுத்தேன்.

சில இடங்கள் இன்னமும் அப்படியே இருக்குறது  மனசுக்கு ஆறுதலாக இருக்கு. அதுல முக்கியமானது, ராஜகோபால சுவாமி கோயில். எனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்தக் கோயிலுக்குப் போயிடுவேன்.

என் ஊர்!  - இயக்குநர் ராஜசேகர்

அந்தக் காலத்துல எங்க ஏரியாவுல ஒரு கடை கூடக் கிடையாது. சாதாரணமா ஒரு மளிகை சாமான் வாங்குறதா இருந்தாலும் அமைந்தகரைக்குதான் போகணும். எனக்குத் தெரிஞ்சு எங்க ஏரியாவில் தொடங்கப்பட்ட பெரிய  கடைன்னா அது 'ஸ்ரீ மிட்டாய்’ கடைதான். ஆரம்பத்துல அங்கே பால்கோவா மட்டும்தான் கிடைக்கும். இன்னைக்கு சேத்துப்பட்டுல இல்லாத கடைகளே கிடையாது.

பச்சையப்ப முதலியார் எங்க பகுதியில்தான் வாழ்ந்து இருக்கார். இங்க இருக்கிற ஆத்தங்கரையில்தான் தினமும் குளிச்சுட்டு, பக்கத்தில் இருக் கும் கருகாத்தம்மன் கோயிலுக்குப் போய் அம்மனை வணங்கிட்டுதான் தினசரி வேலைகளைத் தொடங்குவாராம். ஒரு காலத்துல சென்னையிலேயே சேத்துப்பட்டுலதான் அதிகமாக பிக்பாக்கெட் அடிக்கிறவங்க இருந்திருக்காங்க.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தப்ப, நிதித் துறை அமைச்சராக இருந்த நாராயணசாமி எங்க ஏரியாவுலதான் தங்கி இருந்தார். எங்க பகுதி மக்கள் அவரைச் சந்திச்சு, பிக்பாக்கெட் பிரச்னையைச் சொல்லி இருக்காங்க. அவர் உடனடியாகக் காவல் துறையை முடுக்கிவிட்டு எங்கள் ஏரியாவை பிக்பாக்கெட்காரர்கள் இல்லாத ஏரியாவாக மாற்றினார்.

என் ஊர்!  - இயக்குநர் ராஜசேகர்

இங்க இருக்கிற மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பள்ளி, ஆண்டாள் பள்ளி ரெண்டும் ரொம்ப ஃபேமஸ். இன்னைக்குப் பெரிய வி.ஐ.பி-களோட குழந்தைகள் எல்லாம் இந்தப் பள்ளிகளில்தான் படிக்கிறாங்க. ஹாரிங்டன் ரோட்டுல அந்தக் காலத்துல ஒரு கார் போறதே பெரிய விஷயம். ஆனா, இன்னைக்கு அந்தப் பகுதியில இருக்கிற ஸ்கூலுக்கு அத்தனை குழந்தைகளும் கார்லதான் வர்றாங்க.

எங்க பகுதி மக்களுக்கு ஈகா தியேட்டரும் லட்சுமி தியேட்டரும்தான் பொழுதுபோக்கு இடங்கள். ஹோட்டல்னு பார்த்தீங்கன்னா 'கோக்னெட் குரோவ்’னு ஒண்ணு இருந்தது. 'ஃபிரைடு ரைஸ்’ அப்போதான் அறிமுகம் ஆச்சு. அப்போ அந்தக் கடையில ஃபிரைடு ரைஸ் வாங்க அடிதடியே நடக்கும். நான் என் நண்பர்களோட நிறையத் தடவை அங்கே ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டு இருக்கேன். இன்றைக்கு அந்தக் கடை இருந்த இடமே இல்லை. எத்தனையோ வெளிநாடுகள் போயிருக்கேன். இன்னமும் போயிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு நிஜமான சந்தோஷம் சேத்துப்பட்டுல இருக்கும்போதுதான் கிடைக்குது!''

சந்திப்பு: சா.வடிவரசு

படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு