Published:Updated:

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

Published:Updated:
##~##

ம.வேலு, மதுரை.

 ''ஜெயலலிதாவுடனான நட்புபற்றிக் கூற முடியுமா?''

 ''செல்வி ஜெயலலிதா அவர்களைச் சிறு பிராயத்திலிருந்து நானறிவேன். என் நண்பர் திரு. வி.கோபாலகிருஷ்ணனோடு நான் பல முறை தியாகராய நகர் சிவஞானம் தெரு இல்லத்திற்குப் போயிருக்கிறேன்.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் படங்களில் பாடிய -

'அம்மா என்றால் அன்பு...’
'தில்ரூபா...’
'நானென்றால் அது அவளும் நானும்...’

ஆகிய பாடல்களெல்லாம் அடியேன் எழுதியது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நான் பேசிப் பழகியிருக்கிறேன். அந்த அளவில் அவர்களைப்பற்றி என் கணிப்பு இதுதான்:

'பூமியினும் மிக்க பொறையுடையாள் -
எங்கள் தாய்;
தோமிழைப்பார் முன் 
துர்க்கையனையவள்!’

- இது பாரதி பாட்டு;

செல்வி. ஜெயலலிதா அவர்கள், மேற்கண்ட வரிகள் மேனியெடுத்தாற்போல் வந்த - பாரதியின் புதுமைப் பெண்!''

பு.கார்த்தி, கோயம்புத்தூர்.

 ''எம்.எஸ்.வி., இளையராஜா இருவருடனும் நீங்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள்... இருவருமே தமிழ் சினிமாவின் மேதைகள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இளையராஜாவுக்குக் கிடைத்த அங்கீகாரம், மரியாதை, விருது, கௌரவம்... எம்.எஸ்.வி-க்குக் கிடைக்கவில்லை என்பது என் தாழ்மையான கருத்து... சூழல் ஏன் இப்படி அமைந்தது?''

விகடன் மேடை - வாலி

 ''இருவரும் தமிழ் சினிமாவின் மேதைகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திரு.விஸ்வநாதன் காலத்தில் விருதுகளுக்குப் பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. கண்ணதாசன் 'பத்மஸ்ரீ’ வாங்கியதில்லை. இற்றைநாளில் உள்ள மீடியாக்களின் வெளிச்சம் அற்றை நாளில் இல்லை. இன்றும் இளையராஜாவால் பெரிதும் ஆராதிக்கப் பெறுபவர் திரு.எம்.எஸ்.வி. அவருக்கு எதற்கு விருது?

இசையுலகிற்கு - வையம் வழங்கிய விருதுதான் விஸ்வநாத அண்ணன் அவர்கள்!''

ஆ.ராகுல், மதுரை.

 '' 'தரை மேல் பிறக்கவைத்தான்’ பாடலை எழுதிய கைகள் 'சமைஞ்சது எப்படி?’ எழுதுவது தகுமா?''

 ''மிஸ்டர் ராகுல், எல்லா வகையான பாடல்களும் எழுதத் தெரிந்தவர்களாகத்தான் எனக்கு முன்னால் இருந்த பாடலாசிரியர்களும் இருந்திருக்கிறார்கள்.

'ஏன் பிறந்தாய் மகனே?’ எழுதிய கண்ண தாசன்தான் 'எலந்தப் பயமும்’ எழுதினார்.

விகடன் மேடை - வாலி

பாடல்கள் தரம் தாழ்ந்திருந்தால் - தணிக்கை அதிகாரியும் அங்கத்தினர்களும் தடை போட்டிருப்பார்கள். அவர்கள் அனுமதித்த பாடல்கள்தாம் திரையில் வருகின்றன!''

மா.குமரன், தஞ்சாவூர்.

 ''உங்களுக்குப் பிடித்த இசையமைப் பாளர் யார்? ஏன்?''

 ''மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். அவர்தான் இந்த விட்டிலை, விமானமாக்கியவர்; இந்த விறகை வீணையாக்கியவர்!''

க.பிரியா, திருச்சி-8.

 ''லாலாக்கு டோல்டப்பிம்மா, முக்காலா முக்காபுலா... இப்படியான வார்த்தைகளை எங்கு பிடிக்கிறீர்கள்? விரிவாக அந்த வார்த்தை உருவாக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''இந்த வார்த்தைகளைப் பிடிக்க அவ்வளவாக மூளை வேண்டாம். இசையின் துள்ளு நடையைத் திரும்பத் திரும்ப செவி யில் வாங்குகையில் - இது போன்ற PHONETIC WORDS-மனதில் உதயமாகும்!''

இரா.மகாலஷ்மி, மதுரை-4.

 ''இப்படி நடந்துவிட்டதே என்று நீங்கள் வாழ்க்கையில் வருத்தப்படும் விஷயம் என்ன?''

  ''என் மனைவியின் எதிர்பாராத மரணம். அவள் எனக்குத் தாரமாகவும் தாயா கவும் இருந்தவள்!''

ம.கிருஷ்ணா, சென்னை.

''உங்களின் 'நன்றி உணர்வு’ பலர் பாராட்டும் விஷயம்... எப்படி வந்தது இந்த நல்லுணர்வு?

 ''எனக்குக் கொஞ்சம் 'நாய்க் குணம்’ உண்டு!''

சி.நரேன், திருநெல்வேலி.

''கருணாநிதியுடன் நீங்கள் எதற்கு எல்லாம் முரண்படுகிறீர்கள்... எதற்கு எல்லாம் உடன்படுகிறீர்கள்?''

''கலைஞர் அவர்களின் - தருக்கும் செருக்கும் அற்று அனைவரையும் தழுவிச் செல்லும் எளிமை; எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எவரையும் எதையும் எள்ளி நகையாடிப் பேசாமை; ஆழ்ந்த அரசியல் அனுபவம்; ஆழங்காற்பட்ட தமிழறிவு... இத்யாதி இத்யாதி நூறு விஷயங்களில் அவரோடு நான் உடன்படுகிறேன் -

விகடன் மேடை - வாலி

எதில் முரண்படுகிறேன் என்பது - உங்களுக்குச் சொல்லுமளவு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை!''

க.வினோத், சென்னை.

''நாகேஷ§டன் நெருங்கிப் பழகியவர் நீங்கள். அவரது அன்பைப் போற்றும்விதமான நினைவைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

 '' 'நல்லவன் வாழ்வான்’ படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு வந்தபோது - அந்தக் கம்பெனி இருக்கும் இடம் தெரியாததால் நாகேஷை உடன் அழைத்துச் சென்றேன். நாகேஷ், சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலம் அது. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெளிவராத நேரம். 1960-ம் ஆண்டு.

டைரக்டர் திரு.ப.நீலகண்டன் அறைக்குள் நானும் நாகேஷ§ம் நுழைந்தோம்.

'உங்கள் இருவரில் யார் வாலி?’ என்று பா.நீலகண்டன் வினவினார்.

'நான்தான்’ என்றேன்.

'உடன் வந்திருப்பது யார்?’ என்று வினவினார்.

'என் நண்பர் நாகேஷ்’ என்றேன்.

உடனே - 'தம்பி! நீ வெளியே இரு... நீயா பாட்டெழுதப்போறே?’ என்று நாகேஷை முகத்தில் அடித்தாற்போல் வெளியேறச் சொன்னார் நீலகண்டன்.

இதை மனதில் வைத்துக்கொண்டு நாகேஷ் விரும்பியிருந்தால் - பின்னாளில் 'ப.நீலகண்டன் இயக்கினால் நடிக்க

மாட்டேன்’ என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் ப.நீலகண்டன் அவர்களுக்குப் பல எம்.ஜி.ஆர். படங்கள் வாய்க்காமல் போயிருக்கும்.

நாகேஷ் அப்படிச் சொல்லவில்லை; THAT IS NAGESH!''

மு.பெருமாள், தூத்துக்குடி.

''இந்தப் பாடலை நான் எழுதவில்லையே என உங்களை ஏங்க வைத்த திரைப்பாடல் எது?''

 '' 'சோதனை மேல் சோதனை -
போதுமடா, சாமி!
வேதனைதான்
வாழ்க்கையென்றால்
      தாங்காது பூமி!’ ''

க.மதிவாணன், கோயம்புத்தூர்.

 ''கவிஞர் என்றாலே ஜிப்பாதான் போட வேண்டுமா? எழுத்தில் இளமையைக் கொண்டுவந்த நீங்கள், உடையிலும் கொண்டுவரலாமே?''

''எழுத்தின் இளமை - நடையில் இருக்கிறதே தவிர, உடையில் இல்லை. ஒரு கவிஞர் ஜிப்பா போட்டால் தப்பா? அவர் உடனே ஆகிவிடுவாரோ - அஞ்சாறு குழந்தைகளின் அப்பாவுக்கு ஒப்பா?

முதுமை முதுகில் உட்கார்ந்துகொண்டு இருக்கும்போதுதான் -

நான் ரஹ்மான் மியூஸிக்கில், ரஜினிக்கும் தனுஷ§க்கும் - டூயட் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஜீன்ஸும்; டி-ஷர்ட்டும் போட்டுக்கொண்டு எழுதினால்தான் - பாட்டில் BUBBLING YOUTH வருமோ?

ஒரு - அஞ்சு வயசுக் குழந்தை பாடுவதாக நான் பாட்டெழுத வேண்டும் என்றால் -

ஸ்டுடியோவுக்கு FROCK போட்டுக்கொண்டு போக வேண்டுமா என்ன? என்னை FREAK என்று நினைப்பார்கள்.

'எப்பா’ எழுதுகிறோமோ - 'அப்பா’ இளமையாக இருந்தால் - ஜிப்பா என்ன, ஜில்பாக் குடுமி வைத்துக்கொண்டுகூடப் பாட்டெழுதலாம்; கோடம்பாக்கம் கொண்டாடும்!''

கி.ராஜேஷ், திருவாரூர்.

 ''கவிஞர், பாடலாசிரியர் தாண்டி வாலியின் இன்னொரு முகம் என்ன?''

 ''பழுத்த முருக பக்தன்.
    'கடலளவு கிடைத்தாலும்
   மயங்க மாட்டேன் - அதுவே
    கையளவு ஆனாலும்
    கலங்க மாட்டேன்!’

-எனும் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப மனத்தைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஸ்திதப் பிரக்ஞன்!''

- அடுத்த வாரம்...

''நீங்கள் எம்.ஜி.ஆரிடம் கண்டு கலைஞரிடம் காணாத குணம் எது?''

'' 'தகப்பனுக்கு எல்லா குழந்தையும் பிடிக்கும்’ என்று சமாளிக்காமல் நீங்கள் எழுதியவற்றில் உங்களுக்கே மிகப் பிடித்த மூன்று முத்தான பாடல்களை அவை பிடிப்பதற்கான காரணங்களுடன் விளக்குங்களேன்..?''

''கவியரங்கங்களில் அதிகமாக கலைஞர் புகழ் பாடுகிறீர்களே...''

- இன்னும் சொல்வார்...